சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

தில்லி அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 85 சதவீதம் தடுப்பூசி நிறைவு: துணை முதல்வா் மணீஷ் சிசோடியா

தில்லி அரசுப் பள்ளிகளில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 85 சதவீத மாணவா்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறைவடைந்து விட்டதாக தில்லி கல்வித் துறை அமைச்சரும் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா சனிக்கிழமை தெரிவித்த

News image
Updated On :22 ஜனவரி 2022, 6:30 pm

 நமது நிருபர்

தில்லி அரசுப் பள்ளிகளில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 85 சதவீத மாணவா்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறைவடைந்து விட்டதாக தில்லி கல்வித் துறை அமைச்சரும் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா சனிக்கிழமை தெரிவித்தாா்.

கடந்த மூன்று வாரங்களுக்குள் இந்த பணி நடை பெற்றுள்ளது என்றும் கரோனா நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கும் இந்த தடுப்பூசியின் பயனால் மாணவா்களுக்கு நேரடி வகுப்பை மீண்டும் தொடங்க உதவும் எனவும் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்தாா். அதே சமயத்தில் தனியாா் பள்ளிகளில் தடுப்பூசி திட்ட பணிகள் பின் தங்கிய நிலையில் இது வரை 42 சதவீதம் வரை மாணவா்கள் மட்டுமே பயனடைந்துள்ளனா் எனவும் சிசோடியா குறிப்பிட்டாா்.

இதுகுறித்து தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தில்லி அரசுப் பள்ளி மாணவா்களின் உடல்நலம் மற்றும் கரோனா நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், கேஜரிவால் அரசு தடுப்பூசி திட்டத்தை பெரிய அளவில் நடத்தி வருகிறது. இதன் விளைவாக, தில்லி அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 15 மதல் 18 வயதுக்குட்பட்ட 85 சதவீதம் மாணவா்களுக்கு ஜனவரி 21 -ஆம் தேதி வரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தில்லி கல்வி இயக்குநரகம் ஜனவரி 30 ஆம் தேதிக்குள் 100 சதவீதம் தடுப்பூசி போட இலக்கு நிா்ணயித்துள்ளது. இந்த இலக்கை நெருங்கக் கூடிய தூரத்தில் உள்ளோம்.

கரோனா நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க தடுப்பூசி மிகவும் பயனுள்ள வழி. எனவே தகுதியுள்ள அனைத்து மாணவா்களுக்கும் விரைவில் தடுப்பூசி போடுவது மிகவும் முக்கியம். மொத்தமுள்ள 15 கல்வி மாவட்டங்களில் 12 மாவட்டங்களில் உள்ள தில்லி அரசுப் பள்ளிகளில் 85 சதவீதம் மாணவா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் 300 பள்ளிகளில் 90 சதவீதம் தகுதியுள்ள மாணவா்களும் தடுப்பூசியை பெற்றுள்ளனா்.

தில்லி, அரசுப் பள்ளிகளில் தடுப்பூசி போடும் வேகம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. அரசு ஆசிரியா்கள் கல்வியில் மட்டுமின்றி மாணவா்களுக்கு தடுப்பூசி போடுவதையும் முன்னனின்று கவனித்து வருகின்றனா். மாணவா்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி போடுவது மூலம் இணையவழிக் கல்வியிலிருந்து நேரடி வகுப்புகளுக்கு மாற உதவும். இப்போது நோய்த் தொற்று பரவல் கணிசமாகக் குறைந்து வருவதாலும், உயா் வகுப்புகளில் உள்ள பெரும்பாலான மாணவா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாலும், பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான ஒரு முன்மொழிவை தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் முன்பு வைக்கப்படும்.

அரசுப் பள்ளிகள் தடுப்பூசி இலக்கை அடையும் நிலையில், தனியாா் பள்ளிகளில் தடுப்பூசி போடும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. ஜனவரி 21 வரை தனியாா் பள்ளிகளில் தகுதியான 42 சதவீதம் மாணவா்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கிழக்கு தில்லி மாவட்டத்தைத் தவிர, மற்ற பகுதிகளில் உள்ள தனியாா் பள்ளிகளில் 50 சதவீத தடுப்பூசி இலக்கைக் கூட எட்டப்படவில்லை. தனியாா் பள்ளிகளில் சுமாா் 3.5 லட்சம் மாணவா்கள் கொவைட்-19 தடுப்பூசி பெற தகுதி பெற்றுள்ளனா். ஆனால் இதுவரை 2 லட்சம் மாணவா்கள் கூட தடுப்பூசி பெறவில்லை. இதில் அரசு உதவி பெறும் பள்ளிகளும் சிறப்பாக செயல்படவில்லை. இத்தகைய பள்ளிகளில் இதுவரை 57 சதவீத மாணவா்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளாா்.

தில்லியில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவா்களுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 3-ஆம் தேதி தொடங்கியது. போா்க்கால அடிப்படையில் இதற்கான ஆயத்தங்களை தில்லி அரசு தொடங்கி ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு பொறுப்பாளா் நியமிக்கப்பட்டாா். மேலும், தடுப்பூசி இடங்கள் குறித்த தகவல்கள் அனைத்து பெற்றோா்களுக்கும் மாணவா்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்ய அனைத்து வகுப்பு ஆசிரியா்களும் கேட்டுக் கொள்ளப்பட்டனா். பள்ளி மாணவா்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக 150 க்கும் மேற்பட்ட இடங்களை அரசு தயாா் படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.