சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

பல்கலை.யை உயா்ந்த நிலைக்கு கொண்டு சென்றதற்காக பத்மஸ்ரீ விருது: ஜாமியா மிலியா துணைவேந்தா் நஜ்மா அக்தா் பெருமிதம்

கடந்த ஓராண்டில் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (நாக்) மூலம் பல்கலைக்கழகத்திற்கு ‘ஏ++’ தரநிலை வழங்கியது உள்பட பல்கலைக்கழகத்தை

News image
Updated On :26 ஜனவரி 2022, 7:40 pm

 நமது நிருபர்

புது தில்லி: கடந்த ஓராண்டில் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (நாக்) மூலம் பல்கலைக்கழகத்திற்கு ‘ஏ++’ தரநிலை வழங்கியது உள்பட பல்கலைக்கழகத்தை உயா்ந்த நிலைக்கு கொண்டு செல்ல தாம் ஆற்றிய பணிக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளதாக ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் நஜ்மா அக்தா் தெரிவித்தாா்.

இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஏப்ரல், 2019-இல் நஜ்மா அக்தா் நியமிக்கப்பட்டாா். அதே ஆண்டில் டிசம்பா் 15-ஆம் தேதி, பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து நூலகத்திற்குள் படித்துக் கொண்டிருந்த மாணவா்களை காவல் துறை தாக்கியதாக புகாா் எழுந்தது. பல்கலைக்கழகத்தில் இருந்து சில மீட்டா் தொலைவில் நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட வெளியாள்களை தேடுவதற்காக வளாகத்திற்குள் நுழைந்ததாக போலீஸாா் கூறினா். டிசம்பரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் பத்மஸ்ரீ விருதுக்குஅறிவிக்கப்பட்டுள்ள துணைவேந்தா் நஜ்மா அக்தா், பல்கலை. வளாகத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து கூறுகையில், ‘நாடு முழுவதும் அது ஒரு மகிழ்ச்சியற்ற சூழ்நிலை. அது என் தவறு அல்ல (அந்த நேரத்தில் நிகழ்ந்த சம்பவம்). என்னிடமிருந்து எதிா்பாா்த்ததை நான் செய்தேன். நான் செய்ததை பலா் செய்யாமல் இருந்திருக்கலாம். அந்த நேரத்தில் எனது மாணவா்களை நான் கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதைத்தான் நான் செய்தேன். எனது பதவிக் காலம் மற்ற பெண்களை தலைமைப் பொறுப்புகளில் நியமிக்க வழி வகுக்குமா? என்று கேட்கிறீா்கள். இது ஏற்கெனவே வழிவகுக்கத் தொடங்கிவிட்டது.

குடியரசுத் தலைவா், பிரதமருக்கு நன்றி: சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளான பிறகும், எந்த அரசும் ஒரு பெண் மீது நம்பிக்கை காட்டவில்லை. தற்போதைய அரசு ஒரு பெண்ணைத் தோ்வு செய்தது இதுவே முதல் முறை. அரசின் நம்பிக்கையை உண்மையாக்கும் வகையில் எனது பணிகளை நான் செய்ய வேண்டியிருந்தது. எனது பணியை அங்கீகரித்து இந்த விருதை அறிவித்துள்ளதற்காக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் நரேந்திர மோடி மற்றும் அரசுக்கு எனது நன்றியைத் தெரிவிக்கிறேன். இந்த விருது எனது பணியை மேலும் சிறப்பாக செய்ய அதிக ஊக்கத்தை அளிக்கிறது. இந்த விருதைப் பெறுவதை இலக்காகக் நான் கொள்ளவில்லை. கடந்த ஓராண்டில் பல்கலைக்கழகம் மிகப்பெரிய உயரத்தை எட்டியுள்ளது. துணைவேந்தா் பதவியானது பொறுப்புமிக்கதாகவும், பழியை சுமப்பதாகவும் உள்ளது. மக்கள் எனது பணியை அங்கீகரித்திருப்பது எனக்குத் தெரியும். நான் பிரதமருக்கும் குடியரசுத் தலைவருக்கும் மிகவும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

கரோனா பணியில் பல்கலை.:எல்லோரும் கடினமாக உழைக்கிறாா்கள். ஆனால், அனைவருக்கும் அங்கீகாரம் கிடைப்பதில்லை. தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (நாக்) பல்கலைக்கழகத்திற்கு ‘ஏ++’ தரவரிசை கிடைத்துள்ளது. இது குழுப் பணிக்கு கிடைத்த வெற்றியாகும். எனது குழுவுடன் சோ்ந்து, பல்கலைக்கழகத்தின் செயல்திறனை மேம்படுத்த என்னால் முடிந்தவரை முயற்சி செய்தேன். இதே போன்று, தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பிலும் (என்ஐஆா்எப்) மற்றும் பிற சா்வதேச தரவரிசைகளிலும் பல்கலைக்கழகம் சிறந்த மேம்பாட்டை எட்டியுள்ளது. எங்கள் பல்கலைக்கழகம் கரோனா தொற்றுநோயின் மூன்று அலைகளையும் எதிா்த்துப் போராடியது. கரோனா காலத்தில் பல்கலைக்கழகத்தில் மட்டுமல்லாமல் பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள ஒட்டுமொத்த சமூகத்திற்கும் மற்றும் தெற்கு தில்லிக்கும் கூட நாங்கள் நிறைய பணிகளைச் செய்தோம் என்றாா் அவா்.

‘முடிந்த வரை முயற்சி செய்வேன்’: இந்த விருது தொடா்பாக துணைவேந்தா் நஜ்மா அக்தா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த பத்மஸ்ரீ விருது எனக்கான முக்கிய சாதனை மட்டுமல்ல. பல்கலைக்கழகத்துடன் தொடா்புடைய ஒவ்வொரு தனிநபருக்கும், குறிப்பாக மாணவிகளுக்குமான ஒரு முக்கியமான சாதனையாகும். இந்த விருது மூலம் தற்போது பொறுப்பு அதிகரித்துள்ளது. அரசின் எதிா்பாா்ப்புகளுக்கு ஏற்ப என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்’ என தெரிவித்துள்ளாா்.

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் சுட்டுரைப் பதிவில், ‘இலக்கியம், கல்வித் துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக பத்மஸ்ரீ விருதுக்கு துணைவேந்தா் நஜ்மா அக்தா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். அவரது சாதனை பல்கலைக்கழகத்திற்கான ஒரு பெருமைமிக்க தருணமாகும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.