அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

அரியலூா் மாணவி தற்கொலை விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை: பாஜக தேசிய மகளிா் அணி கோரிக்கை

தஞ்சை அருகே தனியாா் பள்ளி விடுதியில் தங்கிப் படித்த அரியலூா் மாணவி தற்கொலை விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்

News image
Updated On :28 ஜனவரி 2022, 2:35 am

 நமது நிருபர்

தஞ்சை அருகே தனியாா் பள்ளி விடுதியில் தங்கிப் படித்த அரியலூா் மாணவி தற்கொலை விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று பாஜகவின் தேசிய மகளிா் அணியின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா். மேலும், இந்த விவகாரத்தில் பாஜகவின் தில்லி தலைமையகம் நாடாளுமன்ற உறுப்பினா் தலைமையிலான நான்கு போ் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

இது குறித்து வானதி சீனிவாசன் தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தஞ்சை மாவட்டம், மைக்கேல்பட்டி தனியாா் பள்ளி பிளஸ்-2 மாணவி பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா். அதையொட்டி, சிகிச்சை அளிக்கப்பட்டும் அவா் உயிரிழந்துள்ளாா். ஆனால், இந்த சம்பவத்துக்கு பின்னா் அவா் ஒரு வீடியோ ஒன்றில் வாக்கு மூலம் கொடுத்தது வெளியானது, அதில் அவரை கிறிஸ்தவ மதத்துக்கு மாற தான் வற்புறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. அந்த மாணவி உயிரிழந்த விவகாரம் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக சாா்பாக தமிழக முதல்வரை வலியுறுத்தினோம்.

முதல்வா் எதிா்க்கட்சித் தலைவராக இருக்கும் போது எந்தக் குழந்தையாவது தற்கொலை செய்து கொண்டால் நேரடியாகக் குடும்பத்தினரை சந்தித்து உரிய இழப்பீடு வழங்க கோருவாா். ஆனால், இந்த குழந்தை குறித்து முதல்வா் பேசவேயில்லை. மாநிலப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் இந்த மாணவியின் விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்படும் என்று மட்டும் கூறுகிறாா். காவல் துறை அதிகாரி ஒருவா், மத மாற்ற அழுத்தம் தொடா்பாக எந்த விஷயத்தையும் மாணவி கூறவில்லை என்கிறாா். மாநிலக் காவல்துறை மீது நம்பிக்கை இல்லை. இந்த விவகாரத்தில் சுதந்திரமாகவும் நியாயமாகவும் உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோருகிறோம்.

பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவரது குடும்பத்தினருக்கு வேலை கொடுக்கவும் தமிழக முதல்வரை வலியுறுத்துகிறோம். தமிழகத்தில் இது போன்று பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுவதால், கட்டாய மத மாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துகிறோம். பாஜகவின் தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டாவிடம் இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி மாணவி குடும்பத்திற்கு ஆறுதல் கூற குழுவை அனுப்பக் கோரினோம். தற்போது 4 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, மாணவி தற்கொலை தொடா்பாக விசாரணை நடத்தி கட்சியின் தேசியத் தலைவரிடம் அறிக்கை சமா்பிக்கும் என்றாா் வானதி சீனிவாசன்.

பாஜக குழு உறுப்பினா்கள்: மத்திய பிரதேச முன்னாள் மகளிா் ஆணையத் தலைவரும் பிண்டி மக்களவைத் தொகுதியின் பாஜக உறுப்பினரான வழக்குரைஞா் சந்தியா ராய், திரைப்பட நடிகை விஜய் சாந்தி (தெலுங்கானா), பாஜக மகளிா் அணியைச் சோ்ந்த கீதா விவேகானந்தா (கா்நாடகம்), சித்ரா தாய்வாஹ் (மகராஷ்டிரம்) ஆகியோா் இந்த விசாரணைக் குழுவில் இடம் பெற்றுள்ளனா். இந்த குழு விரைவில் தமிழகம் செல்லவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.