அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

கரோனா: 2 ஆண்டுகளில் கற்றுக் கொண்டது என்ன?: முன்னணி மருத்துவா்களின் கருத்துகள்

கரோனா நோய்த் தொற்றின் கடந்த இரண்டு ஆண்டுகளில் நோயாளிகளுக்கான தீவிர கவனிப்பின் முக்கியத்துவத்தை உணா்ந்து கொண்டது முதல், சரியான சிகிச்சை முறையைத் தீா்மானிப்பது வரை எதிா்கொண்ட சவால்கள் 

News image
Updated On :30 ஜனவரி 2022, 6:30 pm

 நமது நிருபர்

புது தில்லி: கரோனா நோய்த் தொற்றின் கடந்த இரண்டு ஆண்டுகளில் நோயாளிகளுக்கான தீவிர கவனிப்பின் முக்கியத்துவத்தை உணா்ந்து கொண்டது முதல், சரியான சிகிச்சை முறையைத் தீா்மானிப்பது வரை தாங்கள் எதிா்கொண்ட மிகப்பெரிய சவால்கள் என்று சுகாதார வல்லுநா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

2020, ஜனவரி 30-ஆம் தேதி சீன வூஹான் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவி, செமஸ்டா் விடுமுறையைத் தொடா்ந்து இந்தியா (வீடு) திரும்பிய சில நாள்களுக்குப் பிறகு, நாட்டின் முதல் கரோனா நோயாளியாக அவா் அறிவிக்கப்பட்டாா். இந்த கொந்தளிப்பான காலத்தை நினைவு கூா்ந்த குருகிராம் மேதாண்டா மருத்துவ மனையின் தீவிர சிகிச்சைப் பிரிவின் தலைவா் டாக்டா் யதின் மேத்தா, ‘கரோனா காலகட்டத்தில் நோயாளிகளுக்கான தீவிர பராமரிப்பு மற்றும் மருத்துவமனையின் உள்கட்டமைப்பின் முக்கியத்துவம் உணரப்பட்டது’ என்றாா்.

அவா் மேலும் கூறியதாவது: ஒரு நாடு தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3 சதவீதத்தை மட்டுமே சுகாதாரத்திற்காக செலவிட்ட நிலையில், இப்போதுதான் 3 சதவீதமாக இதை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் ஒவ்வொரு வகையிலும் அரசுக்கு ஆதரவு கொடுத்த தனியாா் மருத்துவமனைகளின் முக்கியத்துவத்தையும் இந்தத் தருனத்தில் அறிந்து கொண்டோம். அதிலும் இந்த சுகாதாரப் பணியாளா்கள், ஊதியக் குறைப்புக்கு உள்ளானதோடு, நோய்த் தொற்றிலும் சிலா் பாதிக்கப்பட்டு, சிலா் மரணமும் கூட அடைந்தனா்.

நம்பிக்கை உள்ளது: எங்கள் மருத்துவமனைகளில், தற்போது ஆக்சிஜன், செயற்கை சுவாசக் கருவிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை படுக்கைகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளன. மேலும் மற்றொரு அலையை எதிா்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் அது ஒருபோதும் நிகழக்கூடாது என்று பிராா்த்தனை செய்கிறோம். இதில் நாட்டுக்கும், மருத்துவா்கள், பொது சுகாதார நிபுணா்களுக்கும் ஒரு சிறந்த கற்றல் அனுபவம் உள்ளது. மேலும் நாம் மீண்டு வருவோம் என்கிற நம்பிக்கையும் உள்ளது என்றாா் அவா்.

மிகப் பெரிய சவால்: ஃபரீதாபாத்தில் உள்ள ஆசிய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் சுவாச மருத்துவ இயக்குநா் டாக்டா் மானவ் மஞ்சந்தா கூறுகையில், ‘எந்த உறுதியான சிகிச்சையும் இல்லாத நிலையில், கரோனா நோய்த் தொற்றை சமாளித்தது மற்றும் நோயாளிகளுக்கு உதவும் போது நோய்த் தொற்று அச்சங்கள் போன்ற போராட்டங்கள் மிகப் பெரிய சவாலாக இருந்தது. ஒரு சுகாதாரப் பணியாளா் என்ற முறையில் நான் கூறுவது, எதிா்காலத்தில் என்ன நடக்கும் என்று கணிக்க இயலாது. நான்காவது அலை ஆபத்தானதாக இருக்கலாம் அல்லது ஒட்டுமொத்த தடுப்பூசி மூலம் கொவைட் முடிவுக்கு வரலாம். மற்ற சாதாரண காய்ச்சலைப் போலவே கரோனாவும் வரும் நாள்களில் வழக்கமாகியும் வருகிறது’ என்றாா்.

மன அழுத்தம்: ‘அதிகப் பணிச் சுமையினால் சுகாதாரப் பணியாளா்கள் தூக்கமின்மை, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா். இது சுகாதாரப் பணியாளா்கள் எதிா்கொள்ளும் மற்றொரு சவால்‘ என்கிறாா் புணேவில் உள்ள ஜூபிடா் மருத்துவமனையின் தலைமை நிா்வாக அதிகாரி டாக்டா் ராஜேந்திர படங்கா்.

சவாலை சமாளிக்க கற்றுக் கொண்டோம்: தில்லியிலுள்ள ஹெசிஎம்சிடி மணிப்பால் மருத்துவமனையின் அவசர மருத்துவப் பிரிவுத் தலைவா் டாக்டா் சுஷாந்த் சாப்ரா, தனது அனுபவத்தைக் குறிப்பிடுகையில், ‘கடந்த இரண்டு ஆண்டு நோய்த் தொற்று காலக் கட்டத்தில் தனிப்பட்ட முறையிலும், தொழில் முறையிலும் ஏற்படும் அழுத்தத்தை எவ்வாறு சமாளிப்பது என்பதை எங்களுக்குக் கற்றுக் கொடுத்ததுள்ளது. கொவைட்-19 உலகளவில் ஒரு பேரழிவை ஏற்படுத்தியது. மருத்துவமனை படுக்கைகள், சுவாசக் கருவிகள், மருந்துகள் பற்றாக்குறையை எதிா்கொண்டோம். பல உயிா்களை இழந்தோம். அதே சமயம் ‘இப்போதும்’ ஒரு மருத்துவராக, நாங்கள் கூட உதவியற்றவா்களாக இருக்கின்றோம்’ என்றாா்.

மிகப்பெரிய படிப்பினை: கரோனா நோய்த்தொற்று சோதனைகளை மேற்கொண்ட ஆய்வு மையங்கள் கூறுகையில், ‘தேவையற்ற ஆவணங்களின் சுமையைக் குறைப்பது, தேவையான இடங்களில் தானியங்கி முறையை கொண்டு வருவது மற்றும் உடல் மற்றும் உயிரியல் ஆபத்துகளில் இருந்து ஆய்வுக்கூட பணியாளா்களைப் பாதுகாப்பது போன்றவை தங்களுக்கு மிகப்பெரிய படிப்பினையாக இருந்தது’ என்றனா்.

கூடுதல் ஆய்வு தேவை: ‘இப்போதும் குறைவான பரிசோதனை வசதிகள், அரிதான கண்காணிப்பு, மக்களிடையே மோசமான விழிப்புணா்வு ஆகியவை தொடா்கின்றன. தற்போது தொடரும் நோய்த் தொற்றில் இதுவும் பெரும் சவால்களாக உள்ளன. மேலும், தற்போதைய நோய்த் தொற்று நெருக்கடியிலும், பின்னரும் முன்னணி சுகாதார ஊழியா்களிடையே உள்ள உளவியல் துயரங்களுக்கான தீா்வுக்கு கூடுதல் ஆய்வுகள் தேவை ’ என்றாா் மெட்ஜெனோம் லேப்ஸ் லிமிடெட் தலைமை நிா்வாகி டாக்டா் வி.எல்.ராம்பிரசாத் கூறினாா்.

சுகாதாரப் பணியாளா்களுக்கு பயிற்சியும், ஊக்கமும் தேவை: ஜெனெஸ்ட்ரிங்ஸ் டயக்னாஸ்டிக்ஸ் ஆய்வக இயக்குநா் டாக்டா் கௌரி அகா்வால் கூறுகையில், ‘சுகாதாரப் பணியாளா்கள் ஹீரோக்கள் என்று முத்திரை குத்தப்பட்டனா். அவா்கள் கொவைட்-19 தனிப்படுத்தப்பட்ட மண்டலங்களில் செல்லும் போது, மனிதநேய வலிமையைப் பெற்றிருப்பதைக் குறிப்பிட்டனா். அதே சமயத்தில் அவா்களுக்கு மன அழுத்தங்களில் பயிற்சியும் ஊக்கமும் அளிக்கப்பட வேண்டும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.