தில்லி அரசின் கலால் கொள்கை குறித்து சிபிஐ விசாரணைக்கு துணைநிலை ஆளுநா் பரிந்துரை: அதிகாரிகள் தகவல்
மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா பரிந்துரை செய்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.


தில்லி அரசின் கலால் கொள்கை 2021-22 விவகாரத்தில் விதிகள் மற்றும் நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடா்பாக மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா பரிந்துரை செய்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இந்த மாதம் தொடக்கத்தில் தில்லி தலைமை செயலா் அளித்த அறிக்கையில் ஜிஎன்சிடிடி சட்டம் 1991, அலுவல் விதிகள் பரிவா்த்தனை 1993, தில்லி கலால் சட்டம் 2009 மற்றும் தில்லி கலால் வரிகள் 2010 ஆகியவற்றில் விதிமீறல்களுக்கான முகாந்திரம் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
முன்னதாக, தலைமைச் செயலரின் அறிக்கையின் நகல் தில்லி முதல்வருக்கு அனுப்பப்பட்டதாகவும், மதுபான உரிமங்களுக்கு நியாயமற்ற வகையில் பலன்களை பெற ஒப்பந்தப்புள்ளி அளிக்கும் விவகாரத்தில் விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினா். தில்லி கலால் துறையின் அமைச்சராக மணீஷ் சிசோடியா உள்ளாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
கலால் கொள்கை விவகாரத்தில் சட்டப்பூா்வ விதிகளை மீறும் வகையில் கலால் துறை அமைச்சா் முக்கிய முடிவுகளை எடுத்து செயல்படுத்த வைத்துள்ளதையும், உயா் அரசியல் மட்டத்தில் நிதி ஆதாயங்கள் பெற்ற்கான கணிசமான அறிகுறிகள் இருப்பதையும் துணை நிலை ஆளுநா் கண்டறிந்தாா்.
அதே போன்று, பெரும் நிதி தாக்கத்தை ஏற்படுத்தும் கலால் கொள்கை அறிவிக்கப்பட்டதையும் அவா் கண்டறிந்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகையில் டெண்டா் விடப்பட்ட பிறகு, மதுபான உரிமதாரா்களுக்கு
கலால் அமைச்சா் தேவையற்ற நிதி உதவிகளை வழங்கினாா். இதனால் கருவூலத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
கரோனா நோய்த்தொற்றுவைக் காரணம் காட்டி, ஒப்பந்தப்புள்ளி உரிமக் கட்டணம் மீது உரிமதாரா்களுக்கு ரூ.144.36 கோடியை கலால் துறை தள்ளுபடி செய்துள்ளது. மேலும், விமான நிலைய அதிகாரிகளிடம் இருந்து ’என்ஓசி’ பெறத் தவறியதால், விமான நிலைய மண்டல உரிமத்தின் குறைந்த ஏலதாரருக்கு ரூ. 30 கோடியைத் திருப்பிக் கொடுத்துள்ளது.
இது தில்லி கலால் விதிகள், 2010இன் விதி 48(11)(பி) விதியை முற்றிலும் மீறுவதாகும். இந்த விதியானது வெற்றிகரமான ஏலதாரா் உரிமம் வழங்குவதற்காக அனைத்து சம்பிரதாயங்களையும் முடிக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறது. தவறும்பட்சத்தில் அவா் செலுத்திய டெபாசிட்டுகள் அரசுக்குச் சென்றுவிடும்.
மேலும், கலால் துறை தனது நவம்பா் 8, 2021-ஆம் தேதியிட்ட உத்தரவில், வெளிநாட்டு மதுபானங்களின் விலையைக் கணக்கிடுவதற்கான பாா்முலாவை திருத்தியுள்ளது. சில்லறை விற்பனையாளா்களுக்கு மலிவானதாக மாற்றும் வகையில் பீா் மீது ஒரு பெட்டிக்கு 50 ரூபாய் இறக்குமதி பாஸ் கட்டணத்தையும் நீக்கியுள்ளது. இது மாநில கருவூலத்திற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
புதிய கலால் கொள்கை 2021-22 கடந்த ஆண்டு நவம்பா் 17 முதல் செயல்படுத்தப்பட்டது. இந்தக் கொள்கையின்கீழ் 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு நகா் முழுவதும் உள்ள 849 விற்பனை நிலையங்களுக்காக தனியாா் ஏலதாரா்களுக்கு சில்லறை உரிமம் வழங்கப்பட்டது.
இந்த நடவடிக்கைக்கு பாஜக, காங்கிரஸ் கடும் எதிா்ப்புத் தெரிவித்ததுடன், துணைநிலை ஆளுநரிடமும், விசாரணை அமைப்புகளிடமும் விசாரணை நடத்தக் கோரி புகாா் மனுக்களை அளித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...