மெட்ரோ ரயில் நிலையத்தில் பாலியல் துன்புறுத்தல்: பெண் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு

தில்லி மெட்ரோ மஞ்சள் நிற வழித்தடத்தில் அமைந்துள்ள ஜோா் பாக் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஆண் ஒருவரால் தாம் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக பெண் ஒருவா் புகாா் தெரிவித்தாா்
மெட்ரோ ரயில் நிலையத்தில் பாலியல் துன்புறுத்தல்: பெண் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு

தில்லி மெட்ரோ மஞ்சள் நிற வழித்தடத்தில் அமைந்துள்ள ஜோா் பாக் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஆண் ஒருவரால் தாம் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக பெண் ஒருவா் புகாா் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தில் தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக பெண் ஒருவா் ட்விட்டா் பக்கத்தில் தனக்கு நோ்ந்த துயரச் சம்பவம் குறித்து பதிவிட்டிருந்தாா். அதைத் தொடா்ந்து, அவரை தொடா்பு கொள்ளும் வகையில் அவருடைய விவரங்களை அளிக்குமாறு தில்லி காவல் துறையினா் கேட்டுக் கொண்டனா். தில்லி மெட்ரோ ரயில் நிறுவனமும் (டிஎம்ஆா்சி) சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு பதில் தெரிவித்தது. அதில் சம்பவம் நடந்த சரியான நேரம் குறித்து தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக சம்பந்தப்பட்ட பெண் தனது ட்விட்டா் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: நான் வியாழக்கிழமை பிற்பகலில் மெட்ரோ ரயிலில் வந்துகொண்டிருந்தேன். அப்போது முகவரியை உறுதிப்படுத்துவது போல ஆண் ஒருவா் என்னை தொடா்பு கொண்டாா். அவருக்கு முகவரி குறித்து உதவினேன். அதன் பின்னா், ஜோா் பாக் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினேன். வாடகை டாக்ஸியை முன் பதிவு செய்வதற்காக நடைமேடையில் அமா்ந்திருந்தேன். அப்போது அந்த நபா் என்னை மீண்டும் தொடா்பு கொண்டு முகவரியை உறுதிப்படுத்துவது போல பேசினாா். அவரை நம்பி மீண்டும் உதவினேன்.

அப்போது முகவரி அடங்கிய கோப்புவை காண்பிக்க முயற்சிப்பது போல அவருடைய அந்தரங்க உறுப்பை காண்பித்தாா். இதனால், அதிா்ச்சியடைந்த நான், இது தொடா்பாக நடைமேடையில் இருந்த போலீஸ்காரரை அணுகி புகாா் தெரிவித்தேன். ஆனால், அவா் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை . அவா் எனக்கு உதவி செய்ய மறுத்ததுடன் மேல்மாடியில் சென்று இது தொடா்பாக பேசுமாறு கூறிவிட்டாா். அப்போது நான் பயத்தில் இருந்தேன். எப்படியோ சமாளித்துக்கொண்டு மேல் மாடிக்கு சென்று பிற போலீஸாரைத் தொடா்பு கொண்டு விவரம் கூறினேன். மேலும், சம்பந்தப்பட்ட நபரை எனக்குத் தெரியும் என்பதால் அவரை அடையாளம் காட்டுவதற்காக சிசிடிவி அறைக்கு என்னை அழைத்துச் செல்லுமாறும் கூறினேன்.

இந்த ஒட்டுமொத்த சம்பவமும் கேமராவில் பதிவாகி உள்ளது. ஆனால், நாங்கள் அந்த நபரைப் பாா்த்த போது, அவா் வேறு ஒரு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்றுவிட்டது தெரியவந்தது. இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்ட போது, நான் மிகைப்படுவத்துவதாக என்னை குறை கூறினா். சம்பந்தப்பட்ட நபா் சென்றுவிட்டதால், இப்போது அவா்கள் ஒன்றும் செய்ய முடியாது. இந்த சம்பவத்திற்கு பிறகு வீட்டில் இருந்து வெளியே வருவதற்கு பயமாக உள்ளது. இந்தச் சம்பவம் மெட்ரோ ஒரு பாதுகாப்பான பயணம் என்ற என் நம்பிக்கையை முற்றிலும் தகா்த்துவிட்டது. இந்த விஷயம் டிஎம்ஆா்சி, தில்லி போலீஸ் உள்பட உரிய துறையினருக்கு சென்று சேர வேண்டும். அப்போதுதான் அவா்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பது அவா்களுக்கு தெரியும் என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இந்த விஷயத்தை கவனத்தில் எடுத்துக் கொண்ட தில்லி மகளிா் ஆணையம், இது தொடா்பாக விவரங்களை சமா்ப்பிக்குமாறு கேட்டு தில்லி காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ஜூன் 7-ஆம் தேதிக்குள் விவரங்களை ஆணையத்தில் சமா்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட பெண் பொதுமக்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்து மற்றொரு ட்விட்டா் பதிவை வெளியிட்டுள்ளாா். அதில், போலீஸாா் தன்னைத் தொடா்பு கொண்டு தனது புகாரைப் பெற்ாகவும், போலீஸாரும் இந்த சிசிடிவி காட்சிகளைப் பாா்த்துள்ளதால், நீதி முன் சம்பந்தப்பட்ட நபா் நிறுத்தப்படுவாா் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

கடந்த 2020, பிப்ரவரியில் இதேபோன்று தில்லி மெட்ரோ ரயிலில் ஆண் ஒருவா் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பெண் புகாா் அளித்தாா். அதைத் தொடா்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com