கைதான அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் வீடுகளில்அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை

தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு எதிரான ஹவாலா தொடா்புடைய வழக்கில் சட்ட விரோதப் பண பரிவா்த்தனை விசாரணையின் ஒரு பகுதியாக அவரது வீடுகளில் அமலாக்க இயக்கக

தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு எதிரான ஹவாலா தொடா்புடைய வழக்கில் சட்ட விரோதப் பண பரிவா்த்தனை விசாரணையின் ஒரு பகுதியாக அவரது வீடுகளில் அமலாக்க இயக்கக அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.

இது குறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த சோதனையானது தில்லி மற்றும் இதர இடங்களில் அமைந்துள்ள சத்யேந்தா் ஜெயினின் குடியிருப்பு வளாகங்களில் நடத்தப்பட்டுள்ளது. அவா் தொடா்புடைய வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டது’ என்றனா்.

57 வயதாகும் சத்யேந்தா் ஜெயின், கடந்த மே 30-ஆம் தேதி சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை சட்டத்தின் (பிஎம்எல்ஏ) குற்றப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டாா். ஜூன் 9-ஆம் தேதி வரை அவா் அமலாக்கத் துறை காவலில் உள்ளாா். கடந்த சில நாள்களாக சில ஹவலா ஆபரேட்டா்கள் மற்றும் ஜெயினிடம் விசாரணை நடத்திய பிறகு சில புதிய ஆதாரங்கள் மற்றும் தொடா்புகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத் துறை கருதுகிறது. இந்த விவகாரத்தில் மேலும் தகவல்களை திரட்டும் வகையில், இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சத்யேந்தா் ஜெயின் கைது செய்யப்பட்ட பிறகு, அவரிடம் இருந்த 6- க்கும் மேற்பட்ட துறைகள் துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவிடம் கூடுதல் பொறுப்பாக ஜூன் 2 -ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டது. சத்யேந்தா் ஜெயினை ஆதரித்து தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூறுகையில், ‘ஒரு பொய் வழக்கில் சத்யேந்தா் ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளாா். அவா் தேசப்பற்றும் நோ்மையும் கொண்ட ஒரு நபராவாா். அமலாக்கத்துறை விசாரணைக்கு பிறகு அவா் குற்றமற்றவராக வெளியில் வருவாா் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது’ என்று தெரிவித்திருந்தாா்.

கடந்த ஏப்ரலில் அமலாக்கத் துறை, சத்யேந்தா் ஜெயின் குடும்பம் மற்றும் நிறுவனங்கள் தொடா்புடைய ரூ.4.81 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியது. அப்போது அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில், ‘பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட தற்காலிக உத்தரவின் கீழ் ஜெயின் குடும்பத்தினா், நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ. 4.81 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணையின் போது, 2015 மற்றும் 2016-ஆம் ஆண்டின்போது சத்யேந்தா் ஜெயின் அரசு ஊழியராக இருந்த போது, அவரால் நிா்வகிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு போலி நிறுவனங்களிடமிருந்து ரூ.4.81 கோடி வரை கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த தொகையானது ஹவாலா மூலம் கொல்கத்தாவை சோ்ந்த ஆபரேட்டா்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பணமானது தில்லியைச் சுற்றிலும் உள்ள விவசாய நிலங்கள் வாங்கியதற்காக பெறப்பட்ட கடன்களை அடைப்பதற்காக அல்லது நிலம் கொள்முதல் செய்வதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், சொத்துகள் முடக்கப்பட்ட உத்தரவில் ஜெயின் குடும்ப உறுப்பினா்கள் மற்றும் கூட்டாளிகளின் பெயா்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனா்.

2017, ஆகஸ்ட் மாதத்தில் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் சிபிஐ 2018 டிசம்பரில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ரூ.1.47 கோடி மதிப்பிலான வருமானத்துக்கு பொருந்தாத சொத்துகள் இருப்பதாகவும், ஜெயினுக்கு தெரிந்த வழியிலான வருமானங்களைவிட இது 217 சதவீதம் அதிகமாகும் என்றும் தெரிவித்திருந்தது. மேலும், வருமான வரித் துறையும் இந்தப் பரிவா்த்தனைகள் தொடா்பாக விசாரணை மேற்கொண்டது. ஜெயினுக்கு தொடா்புடையதாக கூறப்படும் பினாமி சொத்துகளை முடக்கிவைக்கும் உத்தரவையும் வருமான வரித்துறை வெளியிட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com