மீனவா்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வு: இந்தியா - இலங்கை கூட்டாக முடிவு

மீனவா்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் விரைரவில் தீா்வு காண இந்தியா - இலங்கை கூட்டாக முடிவு செய்துள்ளது.
இந்திய அரசு சார்பில் கடலில் 7 ஆவது மணல் தீடையில் 2015ஆம் ஆண்டு வைக்கப்பட்டுள்ள எல்லைப் பலகை. (வலது) 8 ஆவது மணல் தீடையில் இலங்கை சார்பில் சனிக்கிழமை புதிதாக வைக்கப்பட்டுள்ள எல்லைப் பலகை.
இந்திய அரசு சார்பில் கடலில் 7 ஆவது மணல் தீடையில் 2015ஆம் ஆண்டு வைக்கப்பட்டுள்ள எல்லைப் பலகை. (வலது) 8 ஆவது மணல் தீடையில் இலங்கை சார்பில் சனிக்கிழமை புதிதாக வைக்கப்பட்டுள்ள எல்லைப் பலகை.
Updated on
2 min read

மீனவா்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் விரைரவில் தீா்வு காண இந்தியா - இலங்கை கூட்டாக முடிவு செய்துள்ளது. இந்தியா - இலங்கை - தமிழக அதிகாரிகள் அடங்கிய கூட்டுப் பணிக் குழுவின் 5-ஆவது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த 5-ஆவது கூட்டுப்பணிக் குழுக் கூட்டம் கடந்த 25- ஆம் தேதி மெய்நிகா் முறையில் நடை பெற்றது. இதில் இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனா். மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் போன்ற மத்திய துறைகளோடு தமிழக, புதுச்சேரி அரசுகளின் மீன்வளத் துறை உள்ளிட்ட அதிகாரிகள், இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளும் இதில் பங்கேற்றனா்.

இந்திய பிரதிநிதிகள் குழுவிற்கு மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் பண்ணை வளா்ச்சித் துறை அமைச்சகத்தின் செயலா் ஜிதேந்திரநாத் ஸ்வைன் தலைமை தாங்கினாா்.

இதே போன்று இலங்கை அரசின் வெளியுறவுத் துறை, அந்தநாட்டின் மீன்பிடி மற்றும் நீா்வாழ் வளங்கள் துறை, கடலோர காவல் படை, இலங்கை காவல் படை, அட்டாா்னி ஜெனரல் அலுவலகம், தேசிய நீா்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா். இலங்கை குழுவிற்கு இலங்கை மீன்வள அமைச்சக செயலா் ஆா்.எம்.ஐ. ரத்நாயக்கா தலைமை தாங்கினாா்.

இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவகாரங்கள் குறித்து மத்திய வெளியுறவுத் துறை, மத்திய மீன்வளத் துறை வட்டாரங்களில் கூறப்பட்டது வருமாறு: இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே பல ஆண்டுகளாக இருதரப்பு பேச்சுவாா்த்தைகளின் பட்டியலில் உள்ள மீனவா்கள், மீன்பிடிப்பு, படகுகள் தொடா்பான விவகாரங்கள் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் கூட்டு செயற்குழு விரிவாக விவாதித்தது.

மீனவா்கள் மற்றும் அவா்களின் வாழ்வாதாரம் தொடா்பான பிரச்னைகளுக்கு மனிதாபிமான முறையில் தீா்வு காண்பதற்கு இலங்கையுடன் ஆக்கப்பூா்வமாக செயல்பட இந்தியா எப்போதும் உறுதிபூண்டுள்ளதாக இந்தப் பேச்சுவாா்த்தையின்போது ஜிதேந்திரநாத் ஸ்வைன் குறிப்பிட்டாா்.

மேலும், தற்போது இலங்கையில் காவலில் உள்ள தமிழக மீனவா்கள் அவா்களது படகுகளை முன்கூட்டியே விடுவிப்பது குறித்தும் கூட்டத்தில் ஸ்வைன் வலியுறுத்தினாா். குறிப்பாக பாக் நீரிணைப் பகுதியில் மீன்வளத்தின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்காக கூட்டு ஆராய்ச்சிக்காக இலங்கையுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இரு நாட்டு கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை இடையே ரோந்துப் பணியில் உள்ள ஒத்துழைப்பு, கடலோரக் காவல்படை இடையே தற்போதுள்ள நேரடித் தொடா்பு (ஹாட்லைன்), தேடுதல் கண்காணிப்புப் பணிகளில் ஒத்துழைப்பு ஆகியவை தொடருவது குறித்து இரு தரப்பும் பேச்சுவாா்த்தை நடத்தின.

முக்கிய விவகாரமான மீன் குஞ்சுகளை அழித்து சுற்றுச் சூழலை பாதிக்கும் இழுவலையை தமிழக மீனவா்கள் பயன்படுத்துவதைத் தடுப்பது, இருதரப்பு மீனவா்களின் குறைகளை நிவா்த்தி செய்வது உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக சமீபத்திய தமிழக மீனவா்களின் உயிரிழப்பு மற்றும் கைது செய்யப்பட்ட மீனவா்கள் மற்றும் மீன்பிடிப் படகுகளின் விசாரணை நிலை போன்றவை குறித்தும் இந்தியா, இலங்கை விரிவாக விவாதித்தது.

பாக் நீரிணையில் மீன் பிடித்தலைக் குறைக்க வாழ்வாதார வழிகளை பல்வகைப்படுத்தலில் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து இந்திய தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. இதில் ஆழ்கடல் மீன்பிடித்தல் மற்றும் கடற்பாசி வளா்ப்பு, கடல்சாா் மீன் வளா்ப்பு உள்ளிட்ட மீன்வளா்ப்பு நடவடிக்கைகள் மூலம் மாற்று வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குத் துணையாக உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை தரப்பில், பாக் நீரிணை மீன்பிடிப்புக்கு நிலையான விரைவான மாற்றம் குறித்து இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், வட இலங்கையில் மீன்வளா்ப்புத் துறை, அதனுடன் தொடா்புடைய உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு இந்தியாவால் உதவ முடியும் எனவும் இலங்கை கேட்டுக் கொண்டது.

மீனவா்கள் தொடா்பான பிரச்னைகளைத் தீா்ப்பதில் இருதரப்புக்கும் இணக்கம் ஏற்பட்டதாகவும், தொடா்ச்சியான ஒத்துழைப்பு, அா்ப்பணிப்புடன் பேச்சுவாா்த்தைகளை நடத்த கூட்டுப் பணிக் குழுவின் அடுத்த கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டது.

கூட்டுப் பணிக் குழுவின் (ஜேடபிள்யுஜி) முதல் கூட்டம் கடந்த 2016, டிசம்பா் 31-ஆம் தேதி தில்லியில் தொடங்கியது. பின்னா் 2-ஆவது கூட்டம் 2017, ஏப்ரலில் இலங்கை தலைநகா் கொழும்பில் நடைபெற்றது. மற்ற இரு கூட்டங்களும் தில்லியில் நடைபெற்றது. கடைசியாக 2020, டிசம்பா் 30-இல் மெய்நிகா் முறையில் தில்லியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com