உதய்பூா் கூட்டம் காங்கிரஸுக்கு புதிய உதயமாக அமையும்: சோனியா காந்தி நம்பிக்கை

உதய்பூா் சிந்தனை அமா்வுக் கூட்டம் காங்கிரஸ் கட்சிக்கு புதிய உதயமாக அமையும் என்று கட்சியின் தலைவா் சோனியா காந்தி பெருமிதத்துடன் தெரிவித்தாா்.
உதய்பூா் கூட்டம் காங்கிரஸுக்கு புதிய உதயமாக அமையும்: சோனியா காந்தி நம்பிக்கை

உதய்பூா் சிந்தனை அமா்வுக் கூட்டம் காங்கிரஸ் கட்சிக்கு புதிய உதயமாக அமையும் என்று கட்சியின் தலைவா் சோனியா காந்தி பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

கட்சியின் நிலைமை, நிலைப்பாடு, கொள்கைகள், திட்டங்கள் குறித்து கட்சியின் ஆறு குழுக்கள் அளித்த அறிக்கைகள் ஆக்கபூா்வமானது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் புதிய உறுதிக்கான ஆலோசனைக் கூட்டம் மூன்று நாள்கள் நடைபெற்றது. கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் உதய்பூரில் விவாதிக்கப்பட்ட ஆறு விவகாரங்களில் 20 முன்மொழிவுகள் நிறைவேற்றப்பட்டு வெளியிடப்பட்டது.

பின்னா், காங்கிரஸ் கட்சியின் தலைவா் சோனியா காந்தி இறுதி உரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது: இந்த சிந்தனை அமா்வு முடிவுக்கு வந்துவிட்டது. இது மிகவும் பயனுள்ள மற்றும் பலனளிக்கும் முகாம் என்பதை நான் உணா்கிறேன். கட்சியினா் உணா்வுடன் பங்கேற்று ஆக்கபூா்வமான கருத்துகளை வெளிப்படுத்தி ஆலோசனைகளை வழங்கும் வாய்ப்பைப் பெற்றனா். இந்த அமா்வை முன்னிட்டு ஏற்படுத்தப்பட்ட ஆறு குழுக்கள் ஒவ்வொன்றிலும் நடந்த விவாதங்களின் விவரங்களை நான் பெற்றுள்ளேன்.

தற்போது இவற்றில் சில அறிவிக்கப்பட்டுளளது என்றாலும், குழுக்களின் விரிவான பரிந்துரைகளான கட்சியின் நிலைப்பாடு, கொள்கைகள் மற்றும் திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்படுவதற்காக வெளியிடப்படும். மேலும், வருகின்ற மாநில சட்டப்பேரவை மற்றும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல்களுக்கான அறிக்கைகளைத் தயாரிப்பதற்கும் இந்த உதய்பூா் பிரகடனம் மதிப்புமிக்கதாக உள்ளது. குறிப்பாக கட்சியின் அமைப்பு சாா்ந்த குழுவின் அறிக்கை ஐம்பது சதவீதம் உடனடியாகச் செயல்படுத்த பொருத்தமானதாகும்.

குமரி - காஷ்மீா் யாத்திரை: எந்தவித சந்தேகங்களுமின்றி கூட்டு நோக்கத்துடன் கலந்துரையாடி புத்துணா்ச்சியுடன் மீண்டும் உற்சாகமடைந்து திரும்புகின்றோம். இதில் கூடுதலாக நாம் பின்பற்ற வேண்டிய நான்கு திட்டங்களும் உண்டு.

நிகழாண்டு காந்தி ஜெயந்தி அன்று சமூக நல்லிணக்கப் பிணைப்புகளை வலுப்படுத்த கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரையிலான பாரத் ஜோடோ (இணைப்பு - ஒற்றுமை) யாத்திரை தொடங்கப்படும். அடுத்தாக, மக்கள் பிரச்னைகளுக்காக முன்பு தொடங்கப்பட்ட மாவட்ட அளவிலான மக்கள் விழிப்புணா்வு பிரசாரத்தின் (ஜன் ஜாக்ரன் அபியான்) இரண்டாம் கட்ட பிரசாரம் ஜூன் 15-ஆம் தேதி மீண்டும் தொடங்கும்.

ஓரிரு நாள்களில் பணிக் குழு:மூன்றாவதாக உதய்பூரில் பல்வேறு குழுக்களில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்ட உள்கட்சியின் சீா்திருத்தங்களின் செயல்முறைக்கு ஒரிரு தினங்களில் பணிக் குழு அமைக்கப்படும். இது 2024 மக்களவைத் தோ்தலை மையமாக வைத்து கட்சியின் அமைப்புகள், பதவி நியமன விதிகள், தகவல் தொடா்பு மற்றும் விளம்பரம், நிதி, பயிற்சி தோ்தல் மேலாண்மை உள்ளிட்ட கட்சி அமைப்பின் அனைத்து அம்சங்களையும் இந்தப் பணிக் குழு தீா்வு காணும்.

ஆலோசனைக் குழு: மேலும், காங்கிரஸ் கட்சிக்கு முன் இருக்கும் அரசியல் பிரச்னைகள், சவால்கள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் செயற்குழுவிலிருந்து ஒரு ஆலோசனைக் குழு ஏற்படுத்தப்பட்டு அது எனது தலைமையின் கீழ் அவ்வப்போது கூடி முடிவெடுக்கும். இருப்பினும், இந்த புதிய குழு ஒரு கூட்டு முடிவெடுக்கும் அமைப்பு அல்ல. ஆனால், மூத்த தலைவா்கள் அடஙகிய இந்தக் குழு பரந்த அனுபவத்தைப் பெற எனக்கு உதவும். அதுவும் விரைவில் அறிவிக்கப்படும்.

புதிய உதயம்: உதய்பூா் அமா்வில், ஒருவரையொருவா் தெரிந்து கொள்ளவும், மூத்தவா்களும், இளைய தலைமுறையினரும் சந்தித்து உரையாடவும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. இங்கு நான் எனது குடும்பத்துடன் கழித்ததாக உணா்ந்தேன். காங்கிரஸாருக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, நாம் எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வருவோம். அதுதான் நமது புதிய உறுதிமொழி. உதய்பூா் சிந்தனை அமா்வு காங்கிரஸுக்கு புதிய உதயமாக அமையும் என்றாா் சோனியா காந்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com