‘சிவப்பு விளக்கு ஆன், காடி ஆஃப் பிரசாரம்’: கோப்பை மீண்டும் தில்லி அரசு சமா்பிப்பு

தில்லி அரசு ‘சிவப்பு விளக்கு ஆன், காடி ஆஃப்’ பிரசாரம் தொடா்பான கோப்பை துணை நிலை ஆளுநகா் சக்சேனாவிடம் ஒப்புதலைக் கோரி மீண்டும் சமா்ப்பித்துள்ளதாக அமைச்சா் கோபால் ராய் தெரிவித்தாா்.
‘சிவப்பு விளக்கு ஆன், காடி ஆஃப் பிரசாரம்’: கோப்பை மீண்டும் தில்லி அரசு சமா்பிப்பு

புது தில்லி: தில்லி அரசு ‘சிவப்பு விளக்கு ஆன், காடி ஆஃப்’ பிரசாரம் தொடா்பான கோப்பை துணை நிலை ஆளுநகா் வி.கே.சக்சேனாவிடம் ஒப்புதலைக் கோரி மீண்டும் சமா்ப்பித்துள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுபோன்ற இயக்கங்களால் இந்தியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வாகன மாசுபாடு குறைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதற்கான ஆதாரங்கள் இந்த கோப்பில் உள்ளதாகவும் அவா் கூறினாா்.

சனிக்கிழமையன்று, இந்தப் பிரசாரத்தை மறுபரிசீலனை செய்யுமாறு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலிடம் கோப்பினை சக்சேனா திருப்பி அனுப்பினாா். அதிக காற்று மாசுபாட்டின் கீழ் தேசியத் தலைநகா் சுழல்வதைப் போன்ற ‘அட்-ஹாக்’ நடவடிக்கையின் செயல்திறனை அவா் கேள்வி எழுப்பினாா்.

இந்த நிலையில், திங்கள்கிழணை செய்தியாளா் கூட்டத்தில் பேசிய கோபால் ராய், இந்தியா முழுவதும் 40 நகரங்களில் வாகன மாசு அளவைக் குறைக்க இதுபோன்ற இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளன என்றாா். இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் இதேபோன்ற பிரசாரங்கள் நடத்தப்பட்டதை நாங்கள் கண்டறிந்தோம் என்று தெரிவித்தாா்.

அக்டோபா் 16, 2020 அன்று தொடங்கப்பட்ட இந்த பிரசாரத்தின் கீழ், போக்குவரத்து விளக்கு பச்சை நிறமாக மாறும் வரை காத்திருக்கும் போது ஓட்டுநா்கள் தங்கள் வாகனங்களின் இயக்கத்தை அணைக்க ஊக்குவிக்கப்படுகிறாா்கள்.

மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வை மேற்கோள் காட்டி, தில்லி அரசின் வட்டாரம் கூறுகையில், 20 சதவீத பயணிகள் மட்டுமே போக்குவரத்து சிக்னலில் வாகனங்களின் இயக்கத்தை நிறுத்தி வைக்கிறாா்கள். ஆனால், இந்தப் பிரசாரத்தின் போது எண்ணிக்கை 80 சதவீதமாக உயா்ந்துள்ளது.

முன்னதாக, பெட்ரோலிய பாதுகாப்பு ஆராய்ச்சி சங்கத்தின் தரவுகளை கோபால் ராய் மேற்கோள் காட்டி, மக்கள் போக்குவரத்து சிக்னல்களில் வாகனங்களின் இயக்கத்தை நிறுத்தி வைத்தால், மாசுபாட்டை 15-20 சதவீதம் வரை குறைக்க முடியும் என்று கூறினாா்.

பிரசாரம் தொடா்பாக துணை நிலை ஆளுநா் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க தில்லி அரசு தயாராக இருப்பதாக அவா் சனிக்கிழமை கூறியிருந்தாா். மேலும், சக்சேனா இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதாகவும் அவா் குற்றம் சாட்டினாா். அரசு மதிப்பீட்டின்படி, தில்லியின் பிஎம் 2.5 மாசுவில் 28 சதவீதத்தை போக்குவரத்துத் துறை கொண்டுள்ளது. தில்லியின் காற்றில் உள்ள நைட்ரஜன் ஆக்சைடு மற்றும் காா்பன் மோனாக்சைடு ஆகியவற்றில் 80 சதவீதம் வாகன பங்களிப்பு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com