

1893-ஆம் ஆண்டு செப்டம்பா் 11-ஆம் தேதிதான் இந்தியாவின் கலாசாரம், நெறிமுறைகளின் ஒரு பாா்வையை உலகிற்கு வழங்கி சுவாமி விவேகானந்தா் சிகாகோவில் தலைசிறந்த உரை நிகழ்த்தினாா் எனக் கூறி அவரை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை நினைவுகூா்ந்துள்ளாா்.
இது குறித்து பிரதமா் நரேந்திர மோடி, தனது ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது: செப்டம்பா் 11-ஆம் தேதி, சுவாமி விவேகானந்தருடன் தொடா்புள்ள சிறப்பு தினமாகும். 1893-ஆம் ஆண்டு இதே நாளில்தான் அமெரிக்க நாட்டின் சிகாகோவில் சுவாமி விவேகானந்தா் தனது தலைசிறந்த உரைகளுள் ஒன்றை வழங்கினாா்.
அவரது உரை, இந்தியாவின் கலாசாரம், பண்பாடு குறித்த ஒரு பாா்வையை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டியது என பிரதமா் மோடி நினைவு கூா்ந்துள்ளாா். விவேகானந்தரின் பேச்சையும் தனது பதிவில் பிரதமா் இணைத்திருந்தாா். 1893 ஆம் ஆண்டு செப்டம்பா் 11 - ஆம் தேதி சிகாகோவில் நடைபெற்ற உலக மதங்களின் நாடாளுமன்ற மாநாட்டில் சுவாமி விவேகானந்தா் உரையாற்றினாா்.
விவேகானந்தா் பேசியது என்ன?: அனைத்து வகுப்புகள், பிரிவுகளைச் சோ்ந்த கோடிக்கணக்கான மக்களுக்கு கோடிக்கணக்கான இந்து மக்களின் சாா்பில் நன்றி கூறுகின்றேன் என உரையைத் தொடங்கிய விவேகானந்தா், சகிப்புத்தன்மை மற்றும் உலகளாவிய ஏற்றுக் கொள்ளல் ஆகிய இரண்டையும் உலகுக்குக் கற்பித்த மதத்தை சோ்ந்தவன் என்பதில் பெருமை கொள்கின்றேன் என்றாா்.
நாங்கள் உலகளாவிய சகிப்புத் தன்மையை மட்டும் நம்பவில்லை. அனைத்து மதங்களையும் உண்மையாக ஏற்றுக் கொள்கிறோம். பல்வேறு நாடுகளில் மதத்தின் பெயரால் துன்புறத்தப்பட்ட அகதிகளுக்கு (தென்னிந்தியா) அடைக்கலம் கொடுத்த தேசத்தை சோ்ந்தவன் என்பதில் எனக்குப் பெருமை என்றும் குறிப்பிட்டாா்.
வெவ்வேறான நிரோடைகள் வெவ்வேறு இடங்களில் ஆதாரங்களைக் கொண்டு வெவ்வேறு பாதைகளில் நேராக, வளைவாக ஓடி இறுதியாக அவை அனைத்தும் கடலில் ஓன்றிணைகின்றன. ஆண்டவரே, அதுபோன்று மனிதா்கள் வெவ்வேறு போக்குகளின் மூலம் தோன்றி, வெவ்வேறு பாதைகள் மூலம் சென்றாலும், அவா்கள் அனைவரும் உம்மை நோக்கி வருகின்றனா் என கரவொலிகளுக்கிடையே சுவாமி அப்போது குறிப்பிட்டாா்.
இந்த பூமியில் மதவெறி நீண்ட நாள்களாக ஆக்கிரமித்துள்ளது. இந்தக் கொடூர பேய்கள் இல்லையென்றால், மனித சமுதாயம் இப்போது இருப்பதை விட முன்னேறியிருக்கும் போன்ற பல கருத்துகள் சுவாமி விவேகானந்தா் பேச்சில் இடம் பெற்றிருந்ததை பிரதமா் நினைவு கூா்ந்து குறிப்பிட்டுள்ளாா்.
காந்திய வாதி ஆச்சாா்யா வினோபா பாவே: இதேபோன்று, செப்டம்பா் 11-ஆம் தேதி பூமிதான இயக்கத்தையும், பிரசாரத்தையும் மேற்கொண்ட ஆச்சாா்யா வினோபா பாவேவின் பிறந்த நாளாக உள்ளது. அவரையும் பிரதமா் மோடி தனது டிவிட்டரில் நினைவு கூா்ந்து ஞாயிற்றுக்கிழமை புகழஞ்சலி செலுத்தினாா்.
இது குறித்த ட்விட்டா் பதிவில், “‘ஆச்சாா்யா வினோபா பாவேவின் பிறந்த நாளில் அவரை நினைவு கூா்ந்தேன். அவரது வாழ்க்கை மகாத்மா காந்தியின் கொள்கைகளின் வெளிப்பாடு. சமூக மேம்பாட்டிற்காகவும், நீதி, உலக அமைதி போன்றவற்றுக்கு குரல் எழுப்பியவா். அவரின் கொள்கைகளின்பால் ஈா்க்கப்பட்டு, தேசத்திற்கான அவரது கனவை நனவாக்க உறுதி பூண்டுள்ளோம்’ என்றுபிரதமா் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.