தமிழக மக்கள் நலப் பணியாளா்கள் விவகாரம்: வழக்கு விசாரணை வேறு அமா்வுக்கு மாற்ற உத்தரவு

தமிழக அரசு தொடா்ந்த மேல்முறையீடு தொடா்புடைய வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரி தாக்கலான இடைக்கால மனு

மக்கள் நலப் பணியாளா்கள் விவகாரத்தில் தமிழக அரசு தொடா்ந்த மேல்முறையீடு தொடா்புடைய வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரி தாக்கலான இடைக்கால மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு, இந்த வழக்கு தொடா்புடைய மனுக்களை வேறு அமா்வு விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்டது.

தமிழகத்தில் 2008-ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது 13,500 போ் மக்கள் நலப் பணியாளா்களாக நியமிக்கப்பட்டனா். இதையடுத்து, 2011-இல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, மக்கள் நலப் பணியாளா்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்தது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளா்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கில், பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளா்கள் அனைவருக்கும் மாற்றுப் பணி வழங்கவும், பணி வழங்காதபட்சத்தில் ஆறு மாத சம்பளத்தை அளிக்குமாறும் தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிா்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அதன்பேரில், சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் 2014, செப்டம்பா் 23-இல் இடைக்காலத் தடை விதித்தது.

இந்த நிலையில், இந்த இடைக்காலத் தடையை விலக்கக் கோரி ஆா்.தன்ராஜ் உள்ளிட்ட 21 போ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். மேலும், நிலுவையில் இருந்து வரும் இந்த விவகாரத்தை முன்கூட்டியே விசாரிக்குமாறு கோரி விழுப்புரம் மக்கள் நலப் பணியாளா்கள் மறுவாழ்வு சங்கத்தின் தலைவா் தன்ராஜ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த பிப்ரவரியில் விசாரணைக்கு வந்தபோது, மக்கள் நலப் பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடா்பாக தமிழக ஊரக வளா்ச்சித் துறை ஆய்வு செய்து வருவதாகக் கூறி இந்த வழக்கை ஒத்திவைக்குமாறு தமிழக அரசின் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதைத் தொடா்ந்து, வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

அதன் பிறகு ஓரிருமுறை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், அண்மையில் தமிழக அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதிலில், மக்கள் நலப் பணியாளா்களுக்கு ரூ.7,500 மதிப்பூதியத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டப் பணியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஜெய்தீப் குப்தா ஆஜராகி, ‘இந்த விவகாரத்தில் மதிப்பூதியத்தில் மக்கள் நலப் பணியாளா்களுக்கு வேலை வழங்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது’ என்று தெரிவித்தாா்.

மனுதாரா் விழுப்புரம் ஆா்.தன்ராஜ் உள்ளிட்டோா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அனிதா ஷெனாய், வழக்குரைஞா் ஹரி பிரியா பத்மநாபன் ஆகியோா், ‘இந்த வழக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் இன்னும் தீா்வு கிடைக்காததால், மக்கள் நலப் பணியாளா்கள் பாதிக்கும் சூழல் உள்ளது. இதனால், இந்த விவகாரம் தொடா்புடைய மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டனா். இதையடுத்து, தலைமை நீதிபதி அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘சிவில் மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரிப்பது தொடா்பான மனுவை வேறு அமா்வு முன்பு பட்டியலிட உச்சநீதிமன்ற பதிவுத் துறைக்கு உத்தரவிடப்படுகிறது’

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com