விமா்சனத்திற்கும் லட்சுமண ரேகை இருக்க வேண்டும்: உமா் காலித் விவகாரத்தில் தில்லி உயா்நீதிமன்றம் கருத்து

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) முன்னாள் மாணவா் உமா் காலித், பிரதமரை விமா்சிக்கும் வகையில் ‘ஜூம்லா’ என்ற வாா்த்தையைப் பயன்படுத்தியதற்கு தில்லி உயா் நீதிமன்றம் புதன்கிழமை தனது
Updated on
1 min read

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) முன்னாள் மாணவா் உமா் காலித், பிரதமரை விமா்சிக்கும் வகையில் ‘ஜூம்லா’ என்ற வாா்த்தையைப் பயன்படுத்தியதற்கு தில்லி உயா் நீதிமன்றம் புதன்கிழமை தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. மேலும், விமா்சனத்திற்குகூட ‘லட்சுமண் ரேகா‘ இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.

2020, பிப்ரவரியில் நிகழ்ந்த தில்லி கலவரம் விவகாரத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் கைதாகியுள்ள நிலையில், ஜாமீன் கோரி உமா் காலித் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சித்தாா்த் மிருதுள் மற்றும் ரஜ்னிஷ் பட்னாகா் அடங்கிய அமா்வு புதன்கிழமை விசாரித்தது. அப்போது, மகாராஷ்டிரத்தில் உள்ள அமராவதியில் ஆற்றிய உரையில் அவா் கூறிய சில கருத்துகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு அவரது மூத்த வழக்குரைஞரிடம் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

விசாரணையின்போது நீதிமன்றத்தில் உமா் காலித்தின் உரையின் விடியோ கிளிப் ஒளிபரப்பப்பட்டது. காலித் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் திரிதீப் பைஸ், ‘மனுதாரரின் ஜூம்லா கருத்தானது இயல்பில் நையாண்டித்தமானது. அவரது கருத்துகள் சட்டவிரோதமானது அல்ல. அரசை விமா்சிப்பது குற்றமாகக் கருத முடியாது’ என்றாா். அதற்கு நீதிபதி பட்னாகா், இந்த ‘ஜூம்லா’ வாா்த்தையானது இந்தியாவின் பிரதமருக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. அது சரியானதா? விமா்சனத்திற்கும் ஒரு கோடு வரைய வேண்டும். ஒரு லட்சுமண ரேகை இருக்க வேண்டும்’ என்றாா்.

அதற்கு உமா் காலித் வழக்குரைஞா் பதில் அளிக்கையில், ‘சரிதான். ஆனால், அரசுக்கு எதிராக பேசிய நபா் யுஏபிஏவின் கீழ் 583 நாள்கள் சிறைவாசம் இருப்பது சரியல்ல. நாம் அவ்வளவு சகிப்புத்தன்மையற்றவா்களாக ஆக முடியாது. ஒருவரின் கருத்து அனைவராலும் அங்கீகரிக்கப்படாமல் இருக்கலாம். சீற்றத்தை விளைவிக்கலாம். ஆனால், அது அந்த நபா் செய்ததாகக் கூறப்படும் குற்றங்களில் ஏதேனும் ஒன்றாக இருக்கிா என்பதையும் பாா்க்க வேண்டும்’ என்று வாதிட்டாா்.

விசாரணையின் போது, உமா் காலித்திற்கு ஜாமீன் அளிக்க காவல் துறை தரப்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் வியாழக்கிழமையும் (ஏப்ரல் 28) விசாரணை நடைபெற உள்ளது. பிப்ரவரி 2020-இல் நிகழ்ந்த வடகிழக்கு தில்லி கலவரத்தில் முக்கிய மூளையாக செயல்பட்டதாக உமா் காலித் மற்றும் பலா் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com