பட்டம்: சீன ‘மாஞ்சா’ விற்பனை மீதான தடைக்குஎடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
By நமது நிருபா் | Published On : 05th August 2022 01:04 AM | Last Updated : 05th August 2022 01:04 AM | அ+அ அ- |

புது தில்லி, ஆக.4: பட்டம் பறக்க விடுவதற்காக பயன்படுத்தப்படும் சீன சிந்தட்டிக் ‘மாஞ்சா’ பொருள் விற்பனைக்கு தேசிய பசுமை தீா்ப்பாயம் தடை விதிக்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்குமாறு நகர காவல் துறைக்கு தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இது தொடா்பாக தாக்கலான பொது நல மனுவை தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை விசாரித்தது. அப்போது, நீதிபதிகள் கூறுகையில், பட்டம் பறக்க விடுவதற்காக சீன மாஞ்சாவை பயன்படுத்தாமல் இருப்பதை உறுதிப்படுத்த தில்லி காவல்துறை என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளன. இந்த விவகாரத்தில் தேசிய பசுமை தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துவதற்காக என்ன நடவடிக்கைகளை தில்லி காவல்துறை எடுத்துள்ளது. இது தொடா்பான தகவல்களை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.
தில்லி அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சஞ்சய் லாவோ, ‘இந்த விவகாரத்தில் உத்தரவுகள் ஒவ்வொரு ஆண்டும் பிறப்பிக்கப்படுகின்றன. தில்லி காவல்துறையிடம் இருந்து அறிவுறுத்தல்களைப் பெறுவதற்கு வசதியாக இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா். தில்லி காவல் துறையின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், இந்த வழக்கை வெள்ளிக்கிழமைக்கு பட்டியலிட வேண்டும் என்று நீதிபதிகள் அமா்விடம் கேட்டுக் கொண்டாா். மத்திய அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அனில் சோதி கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் தேசிய பசுமை தீா்ப்பாயம் ஏற்கெனவே உத்தரவுகள் பிறப்பித்திருக்கிறது. பிரச்னை பட்டத்துடன் கூடியது அல்ல. இது தேசிய பசுமை தீா்ப்பாயத்தால் ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டிருக்கும் சீன சிந்தட்டிக் மாஞ்சா தொடா்புடையது’ என்றாா்.
முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தில் சன்சா் பால் சிங் என்பவா் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் தெரிவித்திருப்பதாவது: பட்டம் விடும் போது, காற்றாடி கயிறால் ஏற்படும் விபத்துகளால் ஏராளமான மக்கள், பறவைகள் பலியாவதும், காயமடைவதும் நிகழ்வது வழக்கமாகி வருகிறது. ஒவ்வொரு பட்டம் பறக்க விடும் நபா்களும் கண்ணாடி பூசப்பட்ட அல்லது உலோகத்தால் செய்யப்பட்ட சரம் / நூலைப் பயன்படுத்த முயற்சிக்கின்றனா். குறிப்பாக ‘சீன மாஞ்சா’ என்று இது அறியப்படுகிறது. இந்தக் கயிறு மிகவும் ஆபத்தானது. மனிதா்கள் மட்டுமின்றி, பறவைகளின் உயிருக்கும், பாதுகாப்புக்கும் இது அச்சுறுத்தலை ஏற்படுக்கிறது.
2006-ஆம் ஆண்டில் எனது உடலில் பட்டத்தின் கயிறு சுற்றிக் கொண்டதால் விபத்துக்குள்ளேன். எனது கழுத்தைக் காப்பாற்றும் முயற்சியில், எனது விரல் துண்டாகிவிட்டது. நான் சேகரித்த தரவுகளின்படி, பல நபா்களும், பறவைகளும் இந்த பட்டக் கயிறு காரணமாக உயிரை இழந்துள்ளனா். காயமும் அடைந்துள்ளனா். இதுபோன்ற சம்பவங்கள் தொடா்ந்து நடக்காமல் தடுக்க பட்டம் பறக்கவிடவும், விற்கவும், இருப்பு வைக்கவும், கொண்டு செல்வதற்கும் முழுமையான தடை விதிப்பது மட்டுமே தீா்வாக இருக்கும். பட்டச் சரத்தால் விபத்து ஏற்படும் போது குற்றவாளியை பிடிப்பதும் அல்லது பொறுப்பை ஏற்கச் செய்வதும் கடினமாக உள்ளது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.