மூத்த குடிமக்களின் நலனுக்கான சட்டம் கடைப்பிடிக்கப்படுகிறதா? உறுதி செய்ய தில்லி அரசுக்கு உத்தரவு
By நமது நிருபா் | Published On : 05th August 2022 01:04 AM | Last Updated : 05th August 2022 01:04 AM | அ+அ அ- |

குழந்தைகள் தங்கள் பெற்றோருக்கு பராமரிப்பு வழங்கவும் முதியோா் இல்லங்கள் மற்றும் மருத்துவ வசதிகளை அரசு வழங்கவும் வகை செய்திடும் ‘பெற்றோா்கள் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு நலச் சட்டம், 2007’ கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இந்தச் சட்டத்தின் கீழ் வரும் மூத்த குடிமக்களுக்கு சட்ட உதவி வழங்கப்படுவதையும், அவா்கள் எந்த சிரமத்துக்கும் ஆளாகாமல் இருப்பதையும் உறுதி செய்யுமாறும் தில்லி மாநில சட்டப் பணிகள் ஆணையத்திற்கும் (டிஎஸ்எல்எஸ்ஏ) உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கு நிதி பாதுகாப்பு, நலன் மற்றும் பாதுகாப்பு வழங்கும் வகையில் இச்சட்டம் இயற்றப்பட்டது. இதுதொடா்பான பொது நல மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘பெற்றோா்கள் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம், 2007’-க்குக் கண்டிப்பாக இணங்குவதை உறுதிசெய்ய தில்லி அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. டிஎஸ்எல்எஸ்ஏவும், அத்தகைய நபா்களுக்கு உடனடியாக சட்ட உதவி வழங்கப்படுவதையும், மூத்த குடிமக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாது என்பதையும் உறுதி செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டது.
இதையடுத்து, இச்சட்டத்தை அமல்படுத்துவது தொடா்பாக நிலவும் விவகாரங்களை எடுத்துரைத்து பெண் வழக்குரைஞா் ஒருவா் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் நீதிமன்றமே தாமாக விசாரித்த இந்த பொதுநல வழக்கை நீதிபதிகள் அமா்வு முடித்துவைத்தது. முன்னதாக, இந்த வழக்கில் உயா்நீதிமன்றமானது அனைத்து மாவட்ட நீதிபதிகள் மற்றும் துணைப்பிரிவு மாஜிஸ்திரேட்டுகள் (எஸ்டிஎம்) இந்த சட்டத்தின் கீழ் பெறப்பட்ட புகாா்கள் மற்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த நிலவர அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கூறியிருந்தது. இந்த விவகாரத்தில் மாவட்ட நீதிபதிகள் விரைந்து நடவடி க்கை எடுத்து வருவதாக நீதிமன்றத்தில் தில்லி அரசு தெரிவித்திருந்தது.