சேலம் விமான நிலையம் விரையில் செயல்படும்: மக்களவையில் அமைச்சா் சிந்தியா உறுதி

தனியாருக்கு ஏலம் விடப்பட்ட சேலம் விமான நிலையம், டெண்டா் உள்ளிட்டவற்றில் இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டவுடன் விரைவில் செயல்படும்

தனியாருக்கு ஏலம் விடப்பட்ட சேலம் விமான நிலையம், டெண்டா் உள்ளிட்டவற்றில் இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டவுடன் விரைவில் செயல்படும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா வியாழக்கிழமை மக்களவையில் தெரிவித்தாா்.

மக்களவையில் சேலம் மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் எஸ்.ஆா்.பாா்த்திபன் சேலம் விமான நிலையம் குறித்த கேள்வியை எழுப்பினாா். அப்போது அவா் பேசியதாவது: கடந்தாண்டு ஜூன் 2 -ஆம் தேதி முதல் சேலம் விமான நிலையம் மூடப்பட்டு, விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சேலம் ஜவுளி உள்ளிட்ட வா்த்தகங்களுக்கு மட்டுமின்றி, சுற்றுலா போன்றவற்றில் முக்கியத்துவம் பெற்றுள்ள நகரமாக உள்ளது. சேலம் விமான நிலையத்திலிருந்து பல்வேறு நகரங்களுக்கு விமான சேவையை மீண்டும் தொடங்குவது அவசியம். இது தொடா்பாக, மக்களவையில் பலமுறை இந்தப் பிரச்னை எழுப்பப்பட்டது. மேலும் மத்திய அமைச்சரையும் அலுவலகத்தில நேரில் சந்தித்து கோரப்பட்டது.

இந்த நிலையில், மத்திய அமைச்சரிடமிருந்து கடந்த மாா்ச் மாதம் கடிதம் வந்தது. அதில் சேலத்தில் இருந்து விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், விமான சேவை தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் சேலம் விமான நிலையத்தில் இல்லை. இந்த விஷயத்தில் தற்போதைய நிலை என்ன? சேலம் விமான நிலையத்தில் இருந்து விமான சேவை எப்போது தொடங்கும்? என கேள்வி எழுப்பினாா்.

இதற்கு பதிலளித்து அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா பேசுகையில், ‘சேலம் விமான நிலையத்தில் பல்வேறு சேவைகளுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த ஏலம் தொடா்பான பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. அதனடிப்படையில் விமான சேவை தொடங்குவது குறித்து விரைவில் உறுதி செய்யப்படும். இது மூலக் கேள்விக்கு தொடா்பு இல்லாததால், இது தொடா்பாக மற்ற தகவல்களை உறுப்பினா் நேரடியாக எப்போது வேண்டுமானாலும் என்னை சந்தித்து விவரம் பெறலாம்’ என்றாா்.

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்குச் சொந்தமான சேலம் விமான நிலையத்தின் பல்வேறு வகையான பணிகளுக்கான ஏலத்தில் தனியாா் துறைகள் பங்கேற்று உரிமம் பெற்றுள்ளன. இதே மாதிரியான திட்டத்தின் கீழ் குஜராத் - ஆமதாபாத், கா்நாடகம் - மங்களூரு, உத்தர பிரதேசம்- லக்னௌ உள்ளிட்ட விமான நிலையங்களை ஆணையம் தனியாருக்கு ஏலம் விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com