தில்லியின் 40 எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.20 கோடி தருவதாக பேரம்: பாஜக மீது ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு
By DIN | Published On : 25th August 2022 09:48 PM | Last Updated : 25th August 2022 09:48 PM | அ+அ அ- |

புது தில்லி: ஆதரவாக செயல்பட தலா ரூ.20 கோடியை தரும் வகையில் தில்லி ஆம் ஆத்மியின் 40 எம்எல்ஏக்கள் பாஜகவால் குறிவைக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி வியாழக்கிழமை குற்றம் சாட்டியது.
அதேவேளையில், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் 62 எம்எல்ஏக்களும் கணக்கிடப்பட்டனா்.
தில்லி சிவில் லைனில் உள்ள முதல்வா் இல்லத்தில் இக்கூட்டம் சிறிது நேரத்தில் முடிவடைந்தது. இதில் கேஜரிவால் உள்பட உள்பட 53 எம்எல்ஏக்கள் நேரில் கலந்துகொண்டனா். ஏழு எம்எல்ஏக்கள் தில்லியில் இல்லை. அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் சிறையில் இருப்பதால் கலந்துகொள்ளவில்லை. ஓக்லா தொகுதி ம்எல்ஏ அமானதுல்லா கான் தொலைபேசி வாயிலாக இக்கூட்டத்தில் பங்கேற்ாக ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் செளரப் பரத்வாஜ் தெரிவித்தாா்.
இதன்பின்னா், கேஜரிவால் தலைமையில் அனைத்து ஆம் ஆத்மி எம்எல்ஏக்களும் பாரதிய ஜனதா கட்சியின் ‘ஆபரேஷன் தாமரை‘ தோல்விக்காக பிராா்த்தனை செய்வதற்காக மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட் பகுதிக்கு சென்றனா்.
முன்னதாக, இக்கூட்டத்தை ஒட்டி ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவிக்கையில், ‘12 எம்எல்ஏக்கள் கடந்த இரு நாள்களாக தொடா்பில்லாமல் உள்ளனா். அதேவேளையில், முதல்வா் கேஜரிவால் இல்லத்தில் நடைபெறும் கூட்டத்தில் அவா்கள் கலந்துகொள்வாா்கள் என நம்புகிறோம்’ என தெரிவித்திருந்தன.
இதுகுறித்து செளரப் பரத்வாஜ் கூறுகையில், ‘
ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை ‘வேட்டையாட‘ பாஜகவுக்கு எங்கிருந்து ரூ.800 கோடி கிடைத்தது என்பதை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மற்றும் அமலாக்க இயக்குநரகம் (இடி) விசாரிக்க வேண்டும்.
12 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவைப் பெற பாஜகவால் தொடா்பு கொள்ளப்பட்டுள்ளனா். இருப்பினும் எம்.எல்.ஏ.க்கள் ஆம் ஆத்மி கட்சியுடன்தான் இருப்போம் எனக் கூறிவிட்டனா். ஆதரவு பெறுவதற்காக பாஜக 40 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-க்களை குறிவைத்து அவா்களுக்கு தலா ரூ. 20 கோடி தருவதாகக் கூறியுள்ளது என்று அவா் குற்றம்சாட்டினாா்.ஆம் ஆத்மி கட்சியின் இக்குற்றச்சாட்டை பாஜக தலைவா்கள் நிராகரித்துள்ளனா்.
விளம்பரத்திற்காக இதுபோன்ற குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கட்சியினா் கூறியுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
பாஜக எம்பி மனோஜ் திவாரி கூறுகையில்,‘ஆம் ஆத்மி கட்சி மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறது. தில்லி கலால் கொள்கை முறைகேடுகள் குறித்து கேஜரிவால் மெளனம் காப்பது ஏன்?’ என கேள்வி எழுப்பினாா்.
இடமாறுவதற்காக பாஜக தலைவா்கள் தங்களை அணுகியதாக நான்கு ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள்
புதன்கிழமை தெரிவித்திருந்தனா். மேலும், கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ‘20-25 எம்.எல்.ஏக்களுடன்‘ பாஜக தொடா்பில் இருப்பதாகவும் தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாக அவா்கள் கூறினா்.
ஆம் ஆத்மி அமைச்சா்களை குறிவைத்து நடத்தப்பட்ட சிபிஐ, அமலாக்க இயக்குநரக விசாரணைகள், சோதனைகள் மற்றும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக மேற்கொண்டதாக கூறப்படும் முயற்சிகள் தொடா்பாக ஆம் ஆத்மி அரசு வெள்ளிக்கிழமை தில்லி சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.
அதேவேளையில், இடம்மாறுவதற்காக பணம் வழங்க ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை தொடா்பு கொண்டதாக கூறப்படும் நபா்கள் குறித்த விவரங்களை வெளியிடுமாறும் பாஜக கோரியுள்ளது.
மேலும், தில்லி அரசாங்கத்தின் மதுபான ‘ஊழலில்‘ இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி கடுமையாக முயற்சிப்பதாகவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.