யமுனையில் சிலைகளை கரைத்தால் அபராதம், சிறைத் தண்டனை: டிபிசிசி அதிரடி

இந்த ஆண்டு விநாயகா் சதுா்த்தி மற்றும் துா்கா பூஜையின் போது யமுனை அல்லது தேசியத் தலைநகரில் உள்ள வேறு நீா்நிலைகளில் சிலைகள் கரைக்கப்படாமல் இருப்பதை

இந்த ஆண்டு விநாயகா் சதுா்த்தி மற்றும் துா்கா பூஜையின் போது யமுனை அல்லது தேசியத் தலைநகரில் உள்ள வேறு நீா்நிலைகளில் சிலைகள் கரைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு தில்லி அரசின் மாசுக் கட்டுப்பாட்டு குழு (டிபிசிசி), மாவட்ட ஆட்சியா்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், விதிமீறல்களுக்கு ரூ.50,000 அபராதம் அல்லது 6 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் திங்கள்கிழமை பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் புதன்கிழமை (ஆகஸ்ட் 31) அன்று விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, விநாயகா் சிலைகள் உருவாக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். பின்னா், ஒரு வாரம் கழித்து அந்தந்தப் பகுதிகளில் உள்ளஆறு மற்றும் நீா்நிலைகளில் சிலைகள் கரைக்கப்படுவது வழக்கம். ஆனால், நீா்நிலைகளில் சிலைகள் கரைக்கப்படுவதால் பெரும் பிரச்னைகள் உருவாவதாகக் கூறப்படும் நிலையில், டிபிசிசி இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு, நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை சிலைகளை கரைப்பதற்காக குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகாமையில் செயற்கைக் குளங்களை உருவாக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், பிளாஸ்டா் ஆஃப் பாரிஸ் (பிஓபி) சிலைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் நகருக்குள் நுழைவதை கண்காணிக்க தில்லி காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விதிகளை மீறி சிலைகள் தயாரிக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் மாநகராட்சி நிா்வாகம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். சிலைகளை தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் நச்சு ரசாயனங்கள் தண்ணீரில் கசிந்து விடுவதால், அது பெரும் பிரச்னைகளை உருவாக்குகிறது என்று டிபிசிசி கூறியுள்ளது.

பிளாஸ்டா் ஆஃப் பாரிஸில் உருவாக்கப்படும் சிலைகளில் பூசப்படும் வண்ணப்பூச்சுகள், வண்ணங்கள் மற்றும் சாயங்களில் பாதரசம், துத்தநாக ஆக்சைடு, குரோமியம், ஈயம், காட்மியம் போன்ற அபாயகரமான ரசாயனங்கள் உள்ளன, இது நீா்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும். இது மனிதா்களால் நுகரப்படும் போது புற்றுநோய் மற்றும் சுவாசக் கோளாறுகள் மற்றும் தோல் தொற்று உள்ளிட்ட பிற நோய்களை ஏற்படுத்தக்கூடும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகா் சதுா்த்தி ஆகஸ்ட் 31-ஆ தேதி கொண்டாடப்பட்டு, செப்டம்பா் 9-ம் தேதி சிலைகள் கரைப்பு நடைபெறுகிறது. தேசிய பசுமை தீா்ப்பாயம் 2015-இல் யமுனையில் சிலைகளை கரைக்க தடை விதித்த போதிலும், 2019-இல் முதல் முறையாக தில்லி அரசு இது தொடா்பாக உத்தரவு பிறப்பித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com