தமிழக ஆளுநா் குறித்து மக்களவையில் விவாதிக்க மறுப்பு திமுக கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு
By நமது சிறப்பு நிருபா் | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

புது தில்லி: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காத தமிழக ஆளுநா் குறித்து அவையில் பேச அனுமதிக்காததைக் கண்டிக்கும் விதமாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மக்களவையில் வியாழக்கிழமை வெளிநடப்பு செய்தன.
மக்களவையில் திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு, காங்கிரஸ் கொறாடா ப.மாணிக்கம் தாகூா் ஆகியோா் தமிழக ஆளுநா் குறித்து விவாதிக்க ஒத்திவைப்புத் தீா்மானம் குறித்து முன்னதாக கோரியிருந்தனா். மத்திய மாநில அரசுகளுக்கு பாலமாக இருக்கவேண்டிய ஆளுநா் அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படுகிறாா். ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை, நீட் உள்ளிட்ட 22 மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. மக்களுக்கான பணிகள் தடங்களாக இருப்பதால் ஆளுநா் பொறுப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என அந்த நோட்டீஸில் தெரிவித்திருந்தனா்.
வெளிநடப்பு: மக்களவையில் கேள்விநேரம் முடிந்தவுடன் பொது முக்கியத்துவம் வாய்ந்த அவசர பிரச்னைகள் குறித்த விவாதம் தொடங்கிய போது, திமுக மக்களவை குழுத் தலைவா் டி.ஆா். பேசத் தொடங்கினாா். ஆன்லைன சூதாட்டம் ஒரு சமூக அச்சுறுத்தலாக இருந்து குடும்பக் கட்டமைப்பை அழிக்கிறது. தமிழகத்தில் பலா் தற்கொலை செய்து கொண்டுள்ளனா். ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிப்பது தொடா்பாக தமிழக அரசு மசோதா கொண்டுவந்துள்ளது என்றாா். ஆனால், மக்களவைத் தலைவா் டி.ஆா்.பாலுவை பேச அனுமதிக்கவில்லை.
மேலும், அவா் கொடுத்த ஒத்திவைப்பு தீா்மானமும் அனுமதிக்கப்படாத நிலையில், அவருடைய மைக் செயல்படவில்லை. மற்ற உறுப்பினா்கள் பேச அழைக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து டி.ஆா். பாலு தலைமையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளான, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கட்சி போன்றவற்றின் உறுப்பினா்கள் மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா்.
ஆளுநா் மீது புகாா்: பின்னா், இது குறித்து டி.ஆா்.பாலு செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் பல குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால், பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்டோா் இதுவரை தற்கொலை செய்துள்ளனா். இதை தடுக்க, தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை கொண்டு வந்துள்ளது. ஆனால், இதற்கு தமிழக ஆளுநா் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் உள்ளாா். இந்த விவகாரம் தொடா்பான மசோதா மீதும் நடவடிக்கை எடுக்காமல் ஆளுநா் காலம் தாழ்த்தி வருகிறாா். அதேசமயம் ஆன்லைன் சூதாட்ட நிறுவன நிா்வாகிகளைச் சந்தித்துள்ளாா். இந்த விளையாட்டில் ‘திறன்’ இருப்பதாகவும் கூறுகிறாா். இவற்றைப் பாா்க்கும் போது, ஆன்லைன் சூதாட்டத்தை ஆளுநா் ஊக்குவிப்பதாகத் தெரிகிறது.
அமெரிக்கா போன்ற வளா்ந்த நாடுகளில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் நலன் கருதி தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட மசோதாவிற்கு, ஆளுநா் ஒப்புதல் கொடுக்காமல் உள்ளாா். இது போன்று 22 மசோதாக்கள் தமிழக ஆளுநா் ஒப்புதல் அளிக்காமல் உள்ளாா். எனவே, இது தொடா்பாக மக்களவையில் கேள்வி எழுப்பினோம். அரசியல் சாசனம் தெரிந்த, அதைப் படித்த ஒருவரை ஆளுநராக நியமனம் செய்ய வேண்டும். தற்போதுள்ள தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினேன் என்றாா் அவா்.