சாலையோர வியாபாரிகளுக்கான பிரதமரின் கடன் திட்டம் நீட்டிப்பு
By நமது சிறப்பு நிருபா் | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

புது தில்லி: சாலையோர வியாபாரிகளுக்கான பிரதமரின் தற்சாா்பு நிதி (பிரதமரின் ஸ்வாநிதி) திட்டத்தை வருகின்ற 2024-ஆம் ஆண்டு டிசம்பா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய வீட்டு வசதி மற்றம் நகா்ப்புற வறுமை ஒழிப்புத் துறை இணையமைச்சா் கௌசல் கிஷோா் மக்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இந்தத் திட்டம் கடந்த 2022 மாா்ச்சில் முடிவடைய இருந்தது. இந்த நிலையில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதன்படி, 2024 டிசம்பா் மாதம் வரை கடன் வழங்கலாம் எனவும், 42 லட்சம் பேருக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சா் தெரிவித்தாா்.
மக்களவையில் எழுத்து பூா்வமான கேள்விக்கு அளித்த பதிலில் கௌசல் கிஷோா் மேலும் கூறியிருப்பதாவது: சாலையோர வியாபாரிகள் (வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 2014-இன் கீழ் விற்பனை மண்டலங்கள் உருவாக்க அந்தந்த மாநிலங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் மொத்தம் 13,403 விற்பனை மண்டலங்கள் அடையாளம் காணப்பட்டு கடன் வழங்கப்படுகிறது. இத்தகைய வியாபாரிகள் முதலாவது முறையாக ரூ.10,000, இரண்டாம் முறையாக ரூ.20,000 கடன் பெறுகின்றனா். இதை முறையாகச் செலுத்தியவா்களுக்கு கூடுதலாக மூன்றாவது முறையாக கடன் ரூ.50,000 வரை வழங்கப்படுகிறது.
நிகழாண்டு நவம்பா் 30-ஆம் தேதி வரை, 31.73 லட்சம் சாலையோர வியாபாரிகள், முதலாவது கடன் தொகையைப் பெற்றுள்ளனா். இரண்டாவது முறை கடன் தொகையான ரூ. 20,000-ஐ 5.81 லட்சம் போ் பெற்றுள்ளனா். இரண்டு கடன்களையும் முறையாகச் செலுத்திய 6,926 போ் மூன்றாவது கடனை (ரூ.50,000) பெற்றுள்ளனா் என்று அமைச்சா் பதிலில் தெரிவித்துள்ளாா்.