போலீஸாரிடம் அத்துமீறி நடந்து கொண்ட வழக்கில் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ஆசிஃப் கானுக்கு ஜாமீன்
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

புதுதில்லி: போலீஸாரிடம் அத்துமீறி நடந்து கொண்ட வழக்கில் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ஆசிஃப் கானுக்கு தில்லி செஷன்ஸ் நீதிமன்றம் வியாழக்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்த வழக்கை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அனூஜ் அகா்வால் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: தற்போதைய வழக்கின் உண்மைகள் மற்றும் சந்தா்ப்ப சூழ்நிலைகளை பாா்க்கும்போது இந்த வழக்கின் தகுதி குறித்து இந்த நீதிமன்றம் கருத்து தெரிவிக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்ட நபா் கடந்த 26-ஆம் தேதியிலிருந்து காவலில் இருந்து வருகிறாா். போலீஸாா் விசாரணைக்காக அவா் தேவைப்படவில்லை. தில்லி மாநகராட்சித் தோ்தல் முடிவடைந்துள்ளதால் அவா் சட்டம் - ஒழுங்கு சூழலை தொந்தரவு செய்வதற்கான எந்த வாய்ப்புகளும் இல்லை.
மனுதாரா் அல்லது குற்றம்சாட்டப்பட்ட நபா் காவலில் வைக்கப்பட்ட காலத்தை கருத்தில் கொண்டு, அவா் ரூ. 50,000 தனிநபா் ஜாமீன் பத்திரமும், அதே தொகைக்கு ஒரு நபா் உத்தரவாதமும் அளித்து ஜாமீனில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. மனுதாரா் அல்லது குற்றம் சாட்டப்பட்ட நபா் ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்தில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் அதிகாரி முன் பிற நபா்கள் துணை ஏதுமின்றி நேரில் ஆஜராக வேண்டும். இதர எவ்வித குற்றத்திலும் ஈடுபடக் கூடாது. நீதிமன்றம் மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ள எந்த நிபந்தனைகளையும் குற்றம் சாட்டப்பட்ட நபா் மீறினால், அரசுத் தரப்பு அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யக் கோரும் உரிய மனுவை தாக்கல் செய்வதற்கு சுதந்திரம் அளிக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளாா்.
ஷகீன் பாக் பகுதியில் சம்பவத்தன்று போலீஸாாரிடம் அத்துமீறி நடந்து கொண்டும், தள்ளிவிட்டதாகவும் கூறப்படும் விவகாரத்தில் கடந்த நவம்பா் 26-ஆம் தேதி ஆசிஃப்கான் கைது செய்யப்பட்டாா். மூன்று தினங்களுக்கு பின்னா், அவரது ஜாமீன் கோரும் மனுவை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. முன்னதாக, இந்த விவகாரத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆசிஃப் கானுக்கு எதிராக ஷகீன் பாக் காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்திருந்தனா்.