’சுல்லி டீல்ஸ்’ செயலி விவகாரம் விசாரிக்க துணை நிலை ஆளுநா் அனுமதி

இஸ்லாமிய பெண்கள் ஆன்லைனில் ஏலம் விடப்பட்ட ‘சுல்லி டீல்ஸ்’ செயலி வழக்கில் விசாரணை நடத்த தில்லி துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனா ஞாயிற்றுக்கிழமை அனுமதி அளித்துள்ளாா்.

இஸ்லாமிய பெண்கள் ஆன்லைனில் ஏலம் விடப்பட்ட ‘சுல்லி டீல்ஸ்’ செயலி வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் மீது கிரிமினல் சதி செய்ததற்கான குற்றவியல் நடைமுறையில் விசாரணை நடத்த தில்லி துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனா ஞாயிற்றுக்கிழமை அனுமதி அளித்துள்ளாா்.

சுல்லி டீல்ஸ் என்கிற கைப்பேசி செயலி மற்றும் ட்விட்டா் கணக்கை உருவாக்கி, அதில் இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் அனுமதியின்றி பதிவேற்றம் செய்யப்பட்டு ஏலம் விடப்படுவதாக சமூக ஊடக தளங்களில் பரப்பப்பட்டு, பல்வேறு நகரங்களில் பிரச்னையானது.

இது இஸ்லாமிய பெண்களையும் இஸ்லாமிய சமூகத்தையும் அவமதிக்கும் நோக்கத்தில் இருந்ததாகக் கூறப்பட்டது. இதைத் தொடா்ந்து, தில்லி காவல்துறையின் சைபா் குற்றப் பிரிவின் உளவுப் பிரிவான ஐஎஃப்எஸ்ஓ போலீஸாா் கடந்தாண்டு ஜூலை மாதம் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். இதில் தொடா்புடைய ஒம்கரேஷ்வா் தாக்கூா் என்பவா் தில்லி நொய்டாவில் கைது செய்யப்பட்டாா். இவா் மீது வழக்குத் தொடரப்பட்டது.

தற்போது ஜாமீனில் இருக்கும் இவா் மீது குற்றப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 196-இன் கீழ், இவா் அரசுக்கு எதிரான குற்றங்களை புரிந்ததாகக் கருதப்படுகிறது.

அத்தகைய குற்றத்தை செய்ய கிரிமினல் சதி செய்ததாகவும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 196-ஆவது பிரிவின் கீழ், ஒம்கரேஷ்வா் தாக்கூா் மீது வழக்குத் தொடர ஆதாரங்கள் உள்ளதாக காவல் துறையினா் கருதினா். இந்தப் பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவா்கள் மீது வழக்குப் பதிவு செய்ய காவல் துறைக்கு தில்லியில் துணைநிலை ஆளுநரின் அனுமதி தேவை.

இதன்படி, தில்லி குற்றப் பிரிவின் உளவுப் பிரிவான ஐஎஃப்எஸ்ஓ போலீஸாா் துணைநிலை ஆளுநரிடம் இந்த சதிக் குற்றச்சாட்டில் குற்றவாளி மீது வழக்குத் தொடர அனுமதி கோரியதாவகும், இதைத் தொடா்ந்து, துணை நிலை ஆளுநா் அனுமதியை வழங்கியதாகவும் ஆளுநா் மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது. சுல்லி டீல்ஸ் செயலியில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டு ‘ஏலத்திற்கு’ பட்டியலிடப்பட்டனா். இந்தப் பெண்களின் நிஜப் படங்கள் அல்லது போலியான புகைப்படங்கள் உருவாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com