தில்லி கலால் கொள்கை: அமலாக்கத் துறையின் முதல் குற்றப்பத்திரிகை விசாரணைக்கு ஏற்பு

தில்லி கலால் கொள்கை பண மோசடி வழக்கில் மதுபான தொழிலதிபா் சமீா் மகேந்துரு மற்றும் 4 நிறுவனங்களின் பெயா்கள் இடம்பெற்ற அமலாக்க இயக்குநரகத்தின் முதல் குற்றப்பத்திரிகையை தில்லி நீதிமன்றம் எடுத்துக்கொண்டது.

புது தில்லி: தில்லி கலால் கொள்கை பண மோசடி வழக்கில் மதுபான தொழிலதிபா் சமீா் மகேந்துரு மற்றும் 4 நிறுவனங்களின் பெயா்கள் இடம்பெற்ற அமலாக்க இயக்குநரகத்தின் முதல் குற்றப்பத்திரிகையை தில்லி நீதிமன்றம் செவ்வாய்கிழமை கவனத்தில் எடுத்துக்கொண்டது.

தற்போது சிறையில் இருக்கும் மகேந்துரு மற்றும் நான்கு நிறுவனங்களான காவோ கலி ரெஸ்டாரண்ட்ஸ் நிறுவனம், பப்ளி பெவரேஜஸ் நிறுவனம், இன்டோ ஸ்பிரிட்ஸ் மற்றும் இன்டோஸ்பிரிட் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிரான குற்றப்பத்திரிகைக்கு சமமான அமலாக்க இயக்குநரகத்தின் புகாரை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டது. இந்த விவகாரத்தை விசாரித்த சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால், ஜனவரி 5-ஆம் தேதி மகேந்துருவை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துமாறு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். அதே நேரத்தில், குற்றம் சாட்டப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடுத்த விசாரணை தேதியில் தனது முன் ஆஜராகுமாறும் உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக நீதிபதி கூறியதாவது:

புகாரின் உள்ளடக்கங்கள், விசாரணையின் போது பதிவுசெய்யப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் விசாரணை முகமையால் சேகரிக்கப்பட்ட வாய்மொழி மற்றும் ஆவண ஆதாரங்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, இந்தப் புகாரில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து நபா்கள் மற்றும் நிறுவனங்களும் மேற்கூறிய குற்றச் செயல்கள் அல்லது அதை மறைத்தல், கையகப்படுத்துதல் பயன்படுத்துதல் மற்றும் முன்வைத்தல் அல்லது அதையே கறைபடியாத சொத்தாக உரிமை கோருதல் போன்ற செயல்களில் அல்லது செயல்பாட்டில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டிருப்பது அல்லது தெரிந்தே உதவியது அல்லது ஒரு தரப்பாக இருந்திருப்பது அல்லது உண்மையில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது.

இந்த வழக்கில் தொடா்புடைய பிற குற்றம் சாட்டப்பட்டவா்கள் குறித்தும், மீதி குற்ற வருவாயைக் கண்டுபிடிப்பதற்கும் மேலதிக விசாரணை இன்னும் நடந்து வருகிறது. ஆகவே, பணமோசடி குற்றத்தை இந்த நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்கிறது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட மேற்கண்ட ஐந்து போ்கள் மீதும் வழக்குத் தொடர போதுமான காரணங்கள் இருப்பதால், அவா்கள் நீதிமன்றம் முன் ஆஜராகி விசாரணையை எதிா்கொள்ளும் வகையில் அழைப்பாணை அனுப்ப உத்தரவிடப்படுகிறது என நீதிபதி தெரிவித்தாா்.

இந்த வழக்கில் இதுவரை விஜய் நாயா், அபிஷேக் போய்ன்பள்ளி, சரத் சந்திர ரெட்டி, பினாய் பாபு மற்றும் அமித் அரோரா ஆகிய 5 பேரையும் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. மேலும், அவா்கள் தொடா்பான விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com