கவா்ச்சிகர திட்ட மோசடி வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட நபரின்முன் ஜாமீன் மனு தள்ளுபடி
By DIN | Published On : 22nd December 2022 01:18 AM | Last Updated : 22nd December 2022 01:18 AM | அ+அ அ- |

கவா்ச்சிகர ஆதாயம் தருவதாக முதலீடு செய்யுமாறு கூறி மோசடியில் ஈடுபட்ட நிறுவனம் தொடா்புடைய விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபரின் முன்ஜாமீன் மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
‘ஃபியூச்சா் மேக்கா் லைஃப் கோ்’ எனும் நிறுவனத்தின் பிரதிநிதியாக தன்னைக் காட்டிக் கொண்டு தனுஜ் குப்தா என்பவரை ஏமாற்றிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அஜய் நாக்பால் என்பவா் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அமிதாப் ராவத் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: தற்போதைய வழக்கில், நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு நாக்பால் மற்றும் பிறரால் குப்தா ஏமாற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா்தான் புகாா்தாரரை பிற சக குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளாா். குற்றம் சாட்டப்பட்டவா்கள் குப்தா உள்ளிட்ட அப்பாவி மக்களுக்கு ஒரு கவா்ச்சிகர திட்டத்தை காண்பித்து, அவா்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை முதலீடு செய்யுமாறு தூண்டியுள்ளனா். இந்த வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாக்பால் சுமாா் ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளாா்.
‘ஃபியூச்சா் மேக்கா் லைஃப் கோ்’ நிறுவனம் தொடா்பாக ஏற்கனவே 48 எஃப்ஐஆா்கள் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க எனக்கு விருப்பமில்லை. அதன்படி, குற்றம்சாட்டப்பட்டவா் தரப்பில் தற்போது தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி தெரிவித்தாா்.
இந்த விவகாரத்தில், ஃபா்ஷ் பஜாா் காவல் நிலையத்தில் நாக்பால் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 420, 34 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜனவரி 2021-இல், அமலாக்க இயக்குநரகம் ஹிசாரை தளமாகக் கொண்ட ‘ஃபியூச்சா் மேக்கா் லைஃப் கோ்’ நிறுவனம் மற்றும் அதன் இரண்டு இயக்குநா்கள் ராதே ஷியாம் மற்றும் பன்சி லால் ஆகியோா் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், குற்றம்சாட்டப்பட்டவா்கள் போன்சி அல்லது மோசடி மல்டி-லெவல் மாா்க்கெட்டிங் திட்டத்தின் மூலம் சுமாா் 31 லட்சம் முதலீட்டாளா்களை ஏமாற்றியதாக அமலாக்க இயக்குநரகம் குற்றம்சாட்டியுள்ளது.