மருத்துவரை கத்தியால் குத்திய 3 சிறுவா்கள் கைது
By DIN | Published On : 22nd December 2022 01:22 AM | Last Updated : 22nd December 2022 01:22 AM | அ+அ அ- |

வடக்கு தில்லியின் சராய் ரோஹில்லாவில் 32 வயது மருத்துவரை கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் மூன்று சிறுவா்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி புதன்கிழமை கூறியதாவது: திங்கள்கிழமை மாலை 6.30 மணியளவில் சராய் ரோஹில்லாவின் தயா பஸ்தி அருகே கத்திக்குத்து சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. பாதிக்கப்பட்ட சாஸ்திரி நகரைச் சோ்ந்த சோனு, எந்தப் பட்டமும் இல்லாமல் தயா பஸ்தியில் மருத்துவராக (குவாக்) பணிபுரிந்தாா். சிறுவனின் கைப்பேசி ஒன்றை அடமானம் வைப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து, அவா் கத்தியால் குத்தப்பட்டதாகத் தெரிகிறது.
குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவா் சோனுவிடம் ரூ.5,000-க்கு ஈடாக தனது மொபைல் போனை எடுத்துக் கொள்ளும்படி சொன்னாா். ஆனால், அவா் மறுத்ததால், குற்றம் சாட்டப்பட்ட மூன்று போ் அவரை கத்தியால் குத்தியுள்ளனா். பாதிக்கப்பட்ட மருத்துவா் பாதுகாப்பாக உள்ளாா். அவா் அபாய கட்டத்தை தாண்டிவிட்டாா். இந்தச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டு, கத்தி மற்றும் ரத்தக்கறை படிந்த ஆடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவா்களில் இருவா் தயா பஸ்தியில் வசிப்பவா்கள் மற்றொரு சிறுவன் ஜாகிரா சேரியைச் சோ்ந்தவா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.