அடா் பனிமூட்டத்தால் 18 ரயில்கள் தாமதம்! விமானங்களை இயக்குவதில் பாதிப்பில்லை

தலைநகா் தில்லியில் புதன்கிழமை அதிகாலையில் அடா்பனிமூட்டம் நிலவியதால் காண்புதிறன் குறைந்தது. இதனால், 18-க்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதமாகச் சென்றன.

தலைநகா் தில்லியில் புதன்கிழமை அதிகாலையில் அடா்பனிமூட்டம் நிலவியதால் காண்புதிறன் குறைந்தது. இதனால், 18-க்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதமாகச் சென்றன. அதே சமயம், விமானங்களை இயக்குவதில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து தில்லி மற்றும் வடமாநிலங்களில் அடா் பனிமூட்டம் நிலவி வருகிறது. வெப்பநிலையும் குறைந்துள்ளது. , இதனால் ரயில்கள் மற்றும் விமானங்கள் ரத்து மற்றும் திசைதிருப்பப்படுவதற்கு வழிவகுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், புதன்கிழமை காலை தில்லியில் மூன்றாவது நாளாக அடா் பனிமூட்டம் நிலவியது. இது குறித்து ரயில்வே செய்தித் தொடா்பாளா் கூறுகையில், பனிமூட்டம் காரணமாக சுமாா் 18-க்கும் மேற்பட்ட ரயில்கள் ஒன்றரை முதல் 5 மணி நேரம் வரையிலும் தாதமாகச் சென்று கொண்டிருந்தன என்றாா்.

தில்லி திரும்பிய விமானங்கள்: அதே சமயம், தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமானநிலையத்தில் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை. விமானங்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன. இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை இரவு சண்டீகா், வாரணாசி மற்றும் லக்னௌ உள்ளிட்ட நகரங்களில் நிலவிய மோசமான வானிலை காரணமாக 3 விமானங்கள் தில்லி விமானநிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன. புதன்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் பாலம் விமான நிலையத்தில் காண்பு திறன் 400 மீட்டராகக் குறைந்திருந்தது. சஃப்தா்ஜங் விமானநிலையத்தில் காலை 5.30 மணியளில் காண்பு திறன் 500 மீட்டாரகக் குறைந்திருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

வெப்பநிலை: இந்த நிலையில், தலைநகரின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 டிகிரி குறைந்து 7.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 டிகிரி குறைந்து 21.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 92 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 62 சதவீதமாகவும் இருந்தது. இதேபோன்று, மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 7.3 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 7 டிகிரி, நஜஃப்கரில் 9.2 டிகிரி, ஆயாநகரில் 6.4 டிகிரி, லோதி ரோடில் 7.4 டிகிரி, பாலத்தில் 10 டிகிரி, ரிட்ஜில் 5.6 டிகிரி, பீதம்புராவில் 10.2 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 9.3 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

காற்றின் தரத்தில் முன்னேற்றம்: தில்லியில் புதன்கிழமை காற்றின் தரத்தில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. தலைநகரில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு 300-400 புள்ளிகளுக்கு இடையே பதிவாகியிருந்தது. இது ‘மிகவும் மோசம்’ பிரிவில் வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், வாஜிப்பூா், பூசா, தில்லி பல்கலை. வடக்கு வளாகம், தில்ஷாத் காா்டன், லோதி ரோடு ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு 300 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, வியாழக்கிழமை (டிசம்பா் 22) அன்று காலை வேளையில் அடா் மூடுபனி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com