வக்ஃபு வாரியத்தில் நடந்த முறைகேடுகள் தொடா்பான கிரிமினல் வழக்கில் ஆஜராகாததற்காக ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கானுக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பித்த நீதிமன்றம், அவா் தனது வழக்குரைஞருடன் விசாரணைக்கு வந்த பிறகு அதை திரும்பப் பெற்றது.
இந்த விவகாரத்தை புதன்கிழமை விசாரித்த சிறப்பு நீதிபதி எம்.கே. நாக்பால் உத்தரவில் கூறியுள்ளதாவது: முந்தைய தேதியில் குற்றம்சாட்டப்பட்ட நபா் ஆஜராவதற்கு மருத்துவக் காரணங்களுக்காக விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், இன்று அவரது தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் மருத்துவ காரணங்களுக்காக அமானத்துல்லா கான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி மனு தாக்கல் செய்துள்ளாா். ஆனால், அதை ஆதரிக்கும் வகையில் எந்த மருத்துவச் சான்றிதழும் இணைக்கப்படவில்லை. மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு இன்று ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க நியாயமான அல்லது திருப்திகரமான காரணங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை.
எனவே, விலக்குக் கோரும் அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், அடுத்த விசாரணைக்காக விசாரணை அதிகாரி மூலம் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடி ஆணை வழங்கப்பட வேண்டும்’ என்று நீதிபதி கூறினாா். மேலும், இந்த வழக்கை ஜனவரி 23- ஆம் தேதி விசாரணைக்கு நீதிபதி ஒத்திவைத்தாா். இருப்பினும், பகலில் அமானத்துல்லா கான் நீதிமன்றத்தை அணுகி, பிடி ஆணை உத்தரவை ரத்து செய்யுமாறு கோரினாா். தனது மருத்துவச் சான்றிதழையும் தாக்கல் செய்தாா். இதைப் பரிசீலித்த நீதிபதி, அவரது மனுவை அனுமதித்து, காலையில் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறுவதாகக் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.