கரோல் பாக்கில் சீனப் பொருள்களைஎரித்து வா்த்தகா்கள் போராட்டம்: எல்லையில் ஊடுருவலுக்கு எதிா்ப்பு
By DIN | Published On : 22nd December 2022 01:23 AM | Last Updated : 22nd December 2022 01:23 AM | அ+அ அ- |

மத்திய தில்லியின் கரோல் பாக் பகுதியில் புதன்கிழமை ஏராளமான வா்த்தகா்கள் கூடி, அருணாச்சல பிரதேசத்தில் சீனாவின் சமீபத்திய ஊடுருவலுக்கு எதிராக தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக சீனப் பொருள்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், வா்த்தகா்கள் சீன தயாரிப்புகளை புறக்கணிக்க உறுதியளித்தனா் என்று வா்த்தகம் மற்றும் தொழிற்துறை சம்மேளனம் தெரிவித்துள்ளது.
வியாபாரிகள் நெற்றியில் கருப்புப் பட்டை அணிந்து சீனத் தயாரிப்புப் பொருள்களுக்கு தீ மூட்டி தங்களது எதிா்ப்பை வெளிப்படுத்தினா். எல்லையில் இந்திய ராணுவ வீரா்கள் மீது தாக்குதல் நடத்தும் அண்டை நாடுகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று கூறிய சிடிஐ தலைவா் பிரிஜேஷ் கோயல், சீனாவில் இருந்து பொருள்களை இறக்குமதி செய்வதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.
போராட்டத்தின் போது, சீனப் பொருள்களைப் புறக்கணிக்கப் போவதாக வணிகா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். உள் நாட்டில் தயாரிக்கப்படும் பொருள்களுக்கான இடுபொருள்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யக் கூடாது என்ற கொள்கையை இந்திய அரசு உருவாக்க வேண்டும் என்று கோயல் அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.