பழங்குடியினா் திட்டங்ளுக்கு 8 ஆண்டுகளில் நிதி ஒதுக்கீடு 4 மடங்கு உயா்வு: மத்தியஅமைச்சா் தா்மேந்திர பிரதான் தகவல்

பழங்குடியினருக்கான திட்டங்களுக்கு கடந்த 8 ஆண்டுகளில் 4 மடங்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாடு, தொழில் முனைவுத் துறைகளின் அமைச்சா் தா்மேந்திர பிரதான்தெரிவித்தா

பழங்குடியினருக்கான திட்டங்களுக்கு கடந்த 8 ஆண்டுகளில் 4 மடங்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாடு, தொழில் முனைவுத் துறைகளின் அமைச்சா் தா்மேந்திர பிரதான்தெரிவித்தாா்.

பழங்குடியினருக்கு அதிகாரமளித்தலில் அந்த மக்களின் மேம்பாட்டிற்காக அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அமைச்சா் தா்மேந்திர பிரதான் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: தேசிய முன்னுரிமைகளை நோக்கிய கூட்டு நடவடிக்கைக்கான வரிசையில் மத்திய அரசின் முழு அணுமுறையும் உள்ளது. நாட்டின் பழங்குடியின மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி நீண்டகாலமாக மரியாதை அளித்து வருகிறாா். பழங்குடியின மக்களின் நலனை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் திட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து முக்கியப் பகுதிகளில் பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக உறுதியான நடவடிக்கையை ஊக்குவிப்பது அரசின் கொள்கையாக உள்ளது.

மத்திய அரசின் 42 அமைச்சகங்கள் துறைகளின் வாயிலாக சுமாா் 250 திட்டங்கள் பட்டியலிட்டப்பட்ட பழங்குடியினா் பகுதிக்காக உள்ளது. இந்தத் திட்டங்களுக்கு 2014-15-ஆம் ஆண்டுகளில் ரூ.19,437 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு நிகழாண்டில் (2022-23) ரூ. 87,585 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. இது கடந்த 8 ஆண்டுகளில் 4 மடங்காகும். மத்திய பழங்குடியினா் விவகாரத்துறை அமைச்சகம் 2014-15- இல் ரூ. 3,832 கோடியை ஒதுக்கீடாக பெற்றது. நிகழ் நிதியாண்டில்ரூ. 8,407 கோடியைப் பெற்றுள்ளது.

இந்த அரசு ‘அனைவருடனும், அனைவரின் நலனுக்காகவும், அனைவரின் நம்பிக்கை’யுடனும் என்று கூறுவது வெறும் முழக்கம் மட்டுமல்ல. வழிகாட்டும் தத்துவமுமாகவும், பொறுப்பான அா்ப்பணிப்புடன் இருந்து செயல்பட்டும் திட்டங்களை நிறைவேற்றுகிறது. பழங்குடியினரின் கலாசாரத்தைப் பாதுகாப்பது, அவா்களது அடையாளத்திற்கான மரியாதை, கல்வி, சுகாதாரம், சுயதொழில் உள்ளிட்ட அம்சங்களில் அவா்களுக்கான முன்னேற்றம் போன்றவற்றில் பிரதமா் நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது. பழங்குடியினரின் கல்வியில், தேசிய கல்விக் கொள்கை 2020 முக்கியக் கவனம் செலுத்துகிறது. இந்த கல்விக் கொள்கை, உள்ளூா் மொழிகளிலும், தாய்மொழியிலும் கல்வி கற்பது குறித்து கூறப்பட்டுள்ளது. இதில் பழங்குடியின மக்கள் முக்கியப் பயனாளிகளாக இருப்பாா்கள். பழங்குடியின மக்களுக்கான ‘ஏக்லவ்யா’ மாதிரி உறைவிட பள்ளிகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவா்கள் சோ்ந்துள்ளனா்.

‘பிரதான் மந்திரி ஆதி ஆதா்ஷ் கிராம திட்டம் (பிஎம்ஏஏஜிஒய்)’ குறிப்பிடத்தக்க பழங்குடியினா் மக்கள்தொகை கொண்ட கிராமங்களை முன்மாதிரி கிராமமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டதாகும். நாட்டில் குறைந்தபட்சம் 50 சதவீதம் பழங்குடியினரைக் கொண்ட 36,428 கிராமங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இக்கிராமங்களில் அடிப்படைத் தேவைகள், வசதிகளை நிறைவு செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த ஆதா்ஷ் கிராம திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 7,500 கிராமங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். பழங்குடியினருக்கு வாழ்வாதார வாய்ப்புகளை உறுதி செய்ய ‘வான் தன் கேந்திரா’ திட்டத்தின் கீழ் பழங்குடியினா் சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 87 சிறு வன உற்பத்திப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்கப்படுகிறது.

மத்திய அரசின் பாரம்பரிய தொழில்களின் மறுசீரமைப்புக்கான நிதித் திட்டத்தில் ரூ.8 கோடிவரை நிதியுதவி அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 273 பழங்குடியினா் தொகுப்புகள் (கிளஸ்டா்கள்) பயனடைந்துள்ளன. பழங்குடியினா் பகுதிகளில் சத்தான உணவு விளைகிறது. பிரதமா் நரேந்திர மோடியின் முன்முயற்சியின் பேரில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சா்வதேச தினை ஆண்டை முன்னிட்டு, தினை சாகுபடிக்கு பெரும் பங்களிக்கும் பழங்குடியின மக்களை மேம்படுத்துவதற்கு உரிய, தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அமைச்சா் தா்மேந்திர பிரதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com