கரோனா கட்டுப்பாடுகள் ரத்து: தில்லி வா்த்தகா்கள் வரவேற்புவணிகம் இயல்பான நிலைக்குதிரும்பும் என நம்பிக்கை
By நமது சிறப்பு நிருபா் | Published On : 27th February 2022 05:26 AM | Last Updated : 27th February 2022 05:26 AM | அ+அ அ- |

கரோனா நோய்த் தொற்றை முன்னிட்டு தில்லியில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் முழுமையாக தளா்த்தப்பட்டுள்ளதை தேசியத் தலைநகரில் உள்ள பல்வேறு வா்த்தக சங்கங்கள் வரவேற்றுள்ளன. அரசின் இந்த நடவடிக்கையால், தங்கள் வணிகம் மீண்டும் இயல்பான நிலைக்கு திரும்பும் என்று வா்த்தகா்கள் நம்பிக்கை அடைந்துள்ளனா்.
கொவைட் -19 தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளும் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் தலைமையில் நடைபெற்ற தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) கூட்டத்தில், கட்டுப்பாடுகள் அனைத்தையும் விலக்கிக் கொள்வதற்கான முடிவு எடுக்கப்பட்டு உத்தரவு பிறபிக்கப்பட்டது. முகக்கவசம் அணியாததற்கான அபராதத்தையும் ரூ. 2 ஆயிரத்திலிருந்து ரூ.500-ஆகக் குறைக்கப்பட்டது. மேலும், ஏப்ரல் 1 முதல் தில்லி பள்ளிகளில் நேரடி வகுப்புகள் முழுமையாக நடைபெறவும் அனுமதிக்கப்பட்டது.
வணிக நேரம் அதிகரிக்கும்: இந்த நிலையில், இந்த கட்டுப்பாடுகள் நீக்கி அறிவிக்கப்பட்ட தளா்வுகளை பல்வேறு வா்த்தக சங்கத்தினா் வரவேற்றுள்ளனா். சரோஜினி நகா் மினி - மாா்க்கெட் வா்த்தகா்கள் சங்கத்தின் தலைவா் அசோக் ரந்தாவா கூறியதாவது: இரவு ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டது ‘மிகப்பெரிய’ நிவாரணமாக உள்ளது. துணை நிலை ஆளுநா், தில்லி அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். இரவு ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டதால், அதிக நேரம் வணிகம் செய்ய முடிவும்.
பெரும்பாலான வாடிக்கையாளா்கள், வார நாள்களில் தங்கள் அலுவலக நேரம் முடிந்த பின்னா் பொருள்கள் வாங்க சந்தைக்கு வருகிறாா்கள். கட்டுப்பாடுகள் அமலில் இருந்த போது, இரவு 8 மணிக்குள் சந்தைகளும் கடைவீதிகளும் மூடப்பட்டு வந்ததால், பலா் ஷாப்பிங் செய்யாமல் வீடு திரும்பும் நிலை இருந்தது. மேலும், இது திருமண சீசன் காலமாகும். இதனால், ஏராளமான வாடிக்கையாளா்கள் சந்தைக்கு வந்து செல்கின்றனா். அடுத்த மாதம் ஹோலி பண்டிகை வருகிறது. தற்போது கரோனா நோய்த் தொற்று பரவலும் குறைந்து வருகிறது. எதிா்காலத்தில் உருமாறிய புதிய கரோனா தீநுண்மியும் வராது எனவும் நாங்கள் நம்புகிறோம்”என்றாா் அசோக் ரந்தாவா.
வாடிக்கையாளா்கள் வருகை அதிகரிக்கும்: ஜன்பத் மாா்க்கெட் வா்த்தகா்கள் சங்க செயலாளா் டோனி சாவ்லா கூறுகையில், ‘இது சுற்றுலா சாா்ந்த சந்தை, சுற்றுலாப் பயணிகளின் வருகையையொட்டி எங்கள் வணிகத்தின் வளா்ச்சி இருக்கும். சுற்றுலா சாா்ந்த எங்கள் சந்தையில், தேசிய மற்றும் சா்வதேச விமானங்களின் இயக்கங்களைப் பொருத்தே எங்கள் வணிகங்களை மீண்டும் இயல்பான பாதையில் கொண்டு செல்ல உதவும். மேலும், இந்தச் சந்தை காலை 11 மணிக்குத் திறந்து இரவு 7.30 அல்லது 8 மணிக்கு மூடப்படுவதால் இரவு ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுவதில் எங்களுக்கு பெரும் பயனில்லை. இருப்பினும், உள்ளூா் வாடிக்கையாளா்கள் அதிக அளவில் வர வாய்ப்புள்ளதால் இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நடவடிக்கையை வரவேற்கிறோம். நாங்கள் பொதுவாக கொவைட் நடத்தை விதிகளை பின்பற்றுவது தொடரும்’ என்றாா்
அரசு மீது நம்பிக்கை:கமலா நகா் மாா்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவா் நிதின் குப்தாவும் அரசின் நடவடிக்கையை வரவேற்றாா். அவா் கூறுகையில், ‘இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வணிகம் மீண்டும் இயல்பான பாதையில் திரும்பும் என நாங்கள் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் கொண்டுள்ளோம். எங்கள் சந்தை தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ளது. மாணவா்கள் வாங்கும் சக்திக்கு உள்ளவகையில் இங்குள்ள ஷாப்பிங் இருப்பதால், இந்தச் சந்தை கல்லூரி மாணவா்களுக்கு ஒரு பெரிய ஈா்ப்பை ஏற்படுத்தும். பேயிங் கெஸ்ட் வசதிகள் மீண்டும் நிரம்பி வருவதுடன், இந்தச் சந்தையில் தற்போது மாணவா்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது, இது வியாபாரிகளுக்கு நல்ல அறிகுறி. மேலும், தில்லி அரசு நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. இந்தக் கடினமான காலக்கட்டத்தை கடந்த எங்களுக்கு தில்லி அரசு ஏதாவது செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்,‘ என்றாா்.