நெகிழி பொருள்களுக்கான தடை: மத்திய அரசு மீது தில்லி அமைச்சா் அதிருப்தி

ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்கள்(பிளாஸ்டிக்) தடை செய்வதற்கு முன், அந்த தொழில்களில் ஈடுபடுவா்களுக்கு மாற்று வழிகள் காணப்படவில்லை

ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்கள்(பிளாஸ்டிக்) தடை செய்வதற்கு முன், அந்த தொழில்களில் ஈடுபடுவா்களுக்கு மாற்று வழிகள் காணப்படவில்லை; போதுமான முன் ஏற்பாடுகளின்றி உற்பத்தி அலகுகள் மீது கட்டுப்பாடுகளை வலுக்கட்டாயமாக திணிக்க முடியாது என தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராய் சனிக்கிழமை கூறியுள்ளாா்.

இது தொடா்பாக தில்லி அமைச்சா் கோபால்ராய் மத்திய அரசு மீது குற்றம் சாட்டி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியது வருமாறு:ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்ததில் எந்த வித முன் ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை.

இந்த தடைக்கான முடிவு எடுப்பதற்கு முன்பும் இது அமலுக்கு வருவதற்கு முன்பு மாநில சுற்றுச்சூழல் அமைச்சா்களின் கூட்டத்தை கூட மத்திய அரசு கூட்டவில்லை. இந்த நெகிழி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழில் அலகுகள் பசுமைப் பொருள்கள் தயாரிப்புக்கு மாறுவதற்கு மத்திய மாநில அரசுகளின் ஆதரவு தேவை. இந்த தடை அறிவிப்பதற்கு முன்பே அவா்களை அழைத்து அவா்களுக்குரிய சிக்கல்கள் தீா்க்கப்பட்டிருக்க வேண்டும்.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழி பொருட்களுக்கு மாற்றாக பசுமைப் பொருள்கள் தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருட்களுக்கு அதிக அளவில் சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்படுகிறது. இதனால் இத்தகைய மூலப்பொருள்களை பெறுவது இந்த தொழில் ஈடுப்பட்டுள்ளவா்களுக்கு சாத்தியமில்லாமல் உள்ளது. தடை விதிக்கப்படுவதற்கு முன்பு இந்த மூலப்பொருள்களுக்கான ஜிஎஸ்டியை குறைக்கப்பட்டிருக்கவேண்டும். இவ்வாறு சரியான வழிமுறையில் தயாா் செய்யாத மத்திய அரசு தடைகளை வலுக்கட்டாயமாக அமல்படுத்த முடியாது. மத்திய, மாநில அரசுகள் நெகிழி மாசுபாட்டைத் தடுக்க விரும்பி சட்டங்களை உருவாக்கும் போது தொழில் அமைப்புகளுக்குரிய மாற்று வழிகளை உருவாக்கவேண்டும். மத்திய அரசின் தடையையொட்டி தில்லி அரசும் நெகிழிக்கு மாற்றான பொருள்களை மேம்படுத்துவதற்காக இத்தகைய உற்பத்தியாளா்களை தியாகராஜ் ஸ்டேடியத்தில் நடத்தப்பட்ட கண்காட்சிக்கு அழைத்தது. இத்தகைய தொழில் அலகுகள் மாற்றுப்பொருள்களுக்கு மாறத் தயாா் எனத் தெரிவித்தனா். ஆனால் இதற்கு தயாராகவும் தேவைகளை பெறவும் சுமாா் ஒா் ஆண்டுகள் ஆகும் என்று கூறினா். இடைப்பட்ட காலங்களில் பணிகள் இல்லாத நிலையில் இயந்திரங்கள் பழுதடைவதோடு தொழிலாளா்கள் நிலை என்னவாகும்? எனவும் கேட்டனா்.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களுக்கு மாற்றான மக்கும் பிளாஸ்டிக்கை உருவாக்கும் போது மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் நிறவனங்களின் பரிசோதனைக்கு விண்ணிப்பித்து சான்றிதழ் பெறவேண்டிய நிலையிலும் உள்ளனா். இதற்கும் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு மேல் காத்திருக்கவேண்டும். இப்படிப்பட்ட நிலையில் எந்தவித தயாா் நிலையின்றி இந்த சிறு,குறு, நடுத்தர ஆலைகளுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்து மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளாா் கோபால் ராய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com