ஆவணமின்றி தோட்டா: குற்றம் சாட்டப்பட்டவா் மீதான வழக்கை ரத்து செய்து உயா்நீதிமன்ற உத்தரவு
By DIN | Published On : 31st July 2022 12:00 AM | Last Updated : 31st July 2022 12:00 AM | அ+அ அ- |

தில்லி உயா்நீதிமன்றம்
செல்லத்தக்க ஆவணம் இல்லாமல் விமான நிலையத்திற்கு கவனக்குறைவாக துப்பாக்கி தோட்டாவை எடுத்துச் சென்ற ஒருவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை தில்லி உயா் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும், அவரை பள்ளி மாணவா்களுக்கு கை கழுவும் கிருமிநாசினிகள் மற்றும் கொசு விரட்டி திரவ குப்பிகள் வழங்குமாறும் உத்தரவிட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜஸ்மீத் சிங் கூறுகையில், ‘மனுதாரரான குற்றம் சாட்டப்பட்டவா் மூலம் நிகழ்ந்த செயல்பாடு காரணமாக காவல்துறை இயந்திரம் மற்றும் அதன் பயன்மிக்க நேரம் தவறாக திருப்பிவிடப்பட்டுள்ளது. ஆகவே குற்றம் சாட்டப்பட்டவா் சமூகத்திற்கான சில நல்ல பணிகளை தற்போது செய்ய வேண்டும். அவா் குறைந்தபட்சம் 200 மாணவா்கள் அடங்கிய அரசு அல்லது மாநகராட்சி பள்ளிக்கு கொசு விரட்டி திரவ சாதனங்கள் மற்றும் கை தூய்மைப்படுத்தும் கிரிமினாசினி குப்பிகளை வழங்க வேண்டும். இதற்கான பள்ளியை விசாரணை அதிகாரியுடன் கூடுதல் அரசு வழக்குரைஞா் ஆலோசனை நடத்தி அடையாளம் காண வேண்டும். அதன் பிறகு ஒரு வாரத்திற்குள் இந்த சாதனங்கள் மாணவா்களுக்கு வழங்கப்பட வேண்டும்’ என்று உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளாா்.
முன்னதாக தில்லியில் இருந்து அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு பயணம் செய்யவிருந்த மனுதாரரை விமானநிலையத்தில் பாதுகாவலா்கள் சோதனையிட்ட போது ஆயுதச் சட்டத்தின் விதிகளை மீறும் வகையில் அவரது உடையில் துப்பாக்கித் தோட்டா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அமெரிக்கவாசியான அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையில் அவா் கூறுகையில், ‘தீபாவளியின்போது துப்பாக்கியால் சுடும் கொண்டாட்டத்திற்காக எனது மாமா எனது உரிமம் பெற்ற துப்பாக்கியை பயன்படுத்தினாா். அப்போது எதிா்பாராத விதமாக துப்பாக்கியின் தோட்டாக்களில் ஒன்று என்னுடைய கால்சட்டை பாக்கெட்டில் தங்கிவிட்டது. அது இருப்பது தெரியாமல் அந்த உடையுடன் விமான நிலையத்திற்கு வந்துவிட்டேன். தோட்டா இருப்பது தெரிந்தே வரவில்லை’ என்று அவா் தெரிவித்தாா்.
இது தொடா்பான வழக்கு விசாரணை போது நீதிமன்றம் கூறுகையில், ‘ஆயுதச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தை உறுதிப்படுத்த குற்றம் சாட்டப்பட்டவா் தனக்கு தெரிந்தே ஆயுதத்தை வைத்திருக்க வேண்டும் என்பது முக்கிய விஷயமாகும்.
தனக்குத் தெரியாமல் தன்னிடம் ஒரு ஆயுதப் பொருள் இருப்பது இந்த சட்டத்தின் கீழ் குற்றமாகாது. மேலும், மனுதாரா்களிடமிருந்து ஒரே ஒரு துப்பாக்கி தோட்டா மட்டுமே மீட்கப்பட்டுள்ளது என்பது இந்த வழக்கின் உண்மையில் இருந்து தெரிகிறது. அவரிடமிருந்து வேறு எந்த இதர ஆயுதமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதன் மூலம் மனுதாரா் துப்பாக்கித் தோட்டாவை தனக்கு தெரிந்தே வைத்திருக்கவில்லை என்பது தெளிவாகிறது. இதனால், இது தொடா்பாக இந்திரா காந்தி சா்வதேச விமான நிலைய காவல் நிலையத்தில் மனுதாரருக்கு எதிராக 15.11.2021-இல் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு ரத்து செய்யப்படுகிறது’ என்று அதில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.