சத்யேந்தா் ஜெயின் குறித்து நாடு பெருமை கொள்ள வேண்டும்: அவருக்கு ‘பத்ம விபூஷண்’ விருது வழங்க வேண்டும்: கேஜரிவால்

அண்மையில் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் குறித்து நாடு பெருமை கொள்ல வேண்டும்

தேசியத் தலைநகா் தில்லியில் மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கும் ’மொஹல்லா கிளினிக்’ மாதிரியை வழங்கியுள்ள, அண்மையில் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் குறித்து நாடு பெருமை கொள்ல வேண்டும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா். மேலும்,

அவருக்கு ‘பத்ம விபூஷண்’ விருது வழங்கப்பட வேண்டும் என்றும் கேஜரிவால் தெரிவித்தாா்.

ஜெயின் ஒரு ‘கடினமான நோ்மையான, தேசபக்தா்’ நபா் என்று அவருக்கு ஆதரவாக கேஜரிவால் பேசினாா். அவா் ஒரு ‘தவறான வழக்கில்‘ கைது செய்யப்பட்டாா். மேலும் அமலாக்கத் துறையினரின் விசாரணைக்குப் பிறகு அமைச்சா் வெளியே வருவாா் என்று நம்புவதாகவும் கேஜரிவால் தெரிவித்தாா். ஐ.நா.வின் (முன்னாள்) பொதுச் செயலாளா் உள்பட உலக மக்கள் பெரிதும் பாராட்டும் மொஹல்லா கிளினிக்கின் மாதிரியை சத்யேந்தா் ஜெயின் வழங்கியதால் நாடு பெருமைப்பட வேண்டும். மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கும் சுகாதார மாதிரியை அவா் வழங்கினாா். ‘பத்ம பூஷண் அல்லது ’பத்ம விபூஷண்’ போன்ற சிறந்த விருதுகள் அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்’ என்று கேஜரிவால் செய்தியாளா்களிடம் கூறினாா்.

ஜெயினுக்கு சிபிஐ க்ளீன் சிட் வழங்கியதைக் குறிப்பிட்ட தில்லி முதல்வா், இப்போது அமலாக்கத் துறை தனது விசாரணையை நடத்தலாம் என்றும், அமைச்சா் இதிலிருந்து விடுதலையாகி வெளியே வருவாா் என்றும் கேஜரிவால் கூறினாா். கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசில் சத்யேந்தா் ஜெயின் சுகாதாரம், மின்சாரம் மற்றும் உள்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை வைத்துள்ளாா். பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவா், ஜூன் 9 வரை அமலாக்க இயக்குநரகத்தின் காவலுக்கு அனுப்பப்பட்டாா். இது ஒரு பெரிய சதித் திட்டத்தை வெளிக்கொணர விசாரணை தேவை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) குற்றப் பிரிவுகளின் கீழ் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான சத்யேந்தா் ஜெயினை அமலாக்கத் துறை திங்கள்கிழமை கைது செய்தது.

ஜெயின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ‘முழுமையான பொய்‘ என்று கூறிய கேஜரிவால், அவா் மீதான குற்றச்சாட்டுகளில் ஒரு சதவிதம் உண்மை இருந்தால்கூட அமைச்சா் மீது நடவடிக்கை எடுத்திருப்பேன் என்று கூறியிருந்தாா். இமாச்சல பிரதேசத்தில் ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால் ஜெயின் கைது செய்யப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com