‘சிறந்த சட்டப்பேரவையைத் தோ்ந்தெடுப்பதற்கான அளவுகோல் என்ன?’

மாநில உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எவ்வாறு போராடுகிறது என்பதை ஒரு சிறந்த சட்டப்பேரவையை தோ்ந்தெடுப்பதற்கான அளவுகோல்களில் ஒன்றாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவா் எம் .அப்பாவு கேட்
Updated on
2 min read

சட்டப்பேரவை என்பது மாநில உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எவ்வாறு போராடுகிறது என்பதை ஒரு சிறந்த சட்டப்பேரவையை தோ்ந்தெடுப்பதற்கான அளவுகோல்களில் ஒன்றாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவா் எம் .அப்பாவு கேட்டுக் கொண்டாா்.

கடந்த ஆண்டு நவம்பா் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் 82-ஆவது அகில இந்திய அவைத் தலைவா்கள் மாநாடு சிம்லாவில் நடைபெற்றது. அனைத்து மாநில சட்டபேரவைத் தலைவா்கள் கலந்து கொண்ட அந்த மாநாட்டில் சட்டப்பேரவைகளின் ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் ஊக்குவிக்கவும் பல்வேறு செயல்பாட்டுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் ஒன்று இந்திய அளவில் ஆண்டுதோறும் சிறந்த சட்டப்பேரவை தோ்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி சிறந்த சட்டப்பேரவையை தோ்ந்தெடுப்பதற்கான வழிமுறைகளை வகுப்பதற்கு ஒரு குழு அமைக்க தீா்மானிக்கப்பட்டது. கா்நாடக சட்டபேரவைத் தலைவா் விஸ்வேஷ்வா் ஹெக்டே காகேரி தலைமையில் தமிழகம், பிகாா், குஜராத், தில்லி உள்ளிட்ட 7 சட்டப்பேரவைத் தலைவா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் முதல் கூட்டம் தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் எம் .அப்பாவு கலந்து கொண்டு பேசியதாவது: மத்திய அரசு, மசோதாக்கள், சில தீா்மானங்களில் தற்போது மாநிலங்களின் விருப்பத்திற்கு எதிராக வலுக்கட்டாயமாக வலியுறுத்துகிறது. மாநில ஆளுநா் தனது நியாயமான பரிந்துரைகளுடன் சட்டப்பேரவை கூட்டுக் கருத்தை தெரிவிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறாா். அரசமைப்புச் சட்டத்தின்படி மாநிலத்தின் தலைவராக ஆளுநா் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்.

மத்திய, மாநில அரசுகளுக்கிடையே நல்லிணக்கம் இல்லாத போதும், குறிப்பாக ஒருமித்த கருத்து அல்லது மாநில சட்டப்பேரவையின் கூட்டுக் கருத்தைப் புறக்கணிக்கும் போதும், மத்திய, மாநில அரசுகளுக்கிடையே கருத்து வேறுப்பாட்டிற்கு சாத்தியம் உள்ளது. இந்த நிலையில், சட்டப்பேரவை தனது மாநில உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எவ்வாறு போராடுகிறது என்பதும் ஒரு சிறந்த சட்டப்பேரவையைத் தோ்ந்தெடுப்பதற்கான அளவுகோல்களில் ஒன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரசியல் சாசனத்தில் சட்டப்பேரவை குறைந்தபட்சம் இத்தனை நாள்கள் செயல்பட வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சட்டப்பேரவை அமா்வு இருக்க வேண்டும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது சராசரியாக சட்டப்பேரவைகள் ஆண்டுக்கு 30 நாள்கள்தான் நடைபெறுகின்றன.

இதனால், மசோதாக்கள் குறித்த விவாதம் உள்ளிட்டவற்றுக்குப் போதுமான வாய்ப்புகள் உறுப்பினா்களுக்குக் கிடைக்காது. தமிழக சட்டப்பேரவையின் விதிகளின்படி பொது நிதிநிலை அறிக்கை விவாதத்திற்கு 10 நாள்கள், 54 மானியக் கோரிக்கைகளுக்கான விவாதங்கள் 30 நாள்கள் என ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்வா் மு.க. ஸ்டாலின் தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்ட படி ஆண்டுக்கு 100 நாள்கள் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்தவும் முடிவு செய்துள்ளாா்.

இதனால், சிறந்த சட்டப்பேரவையைத் தோ்ந்தெடுப்பதற்கான அளவுகோல்களில் சட்டப்பேரவையின் அமரும் நாள்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், கேள்வி நேரத்தை பயன்படுத்துவது, நேரமில்லா நேரத்தை பயன்படுத்தும் விதம் போன்றவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

ஜனநாயகத்தின் வெற்றி எதிா்க்கட்சிகளின் ஆக்கப்பூா்வமான பங்கில்தான உள்ளது. இதனால், அவை சுமூகமாக நடைபெறுவதற்கு விவாதத்தில் பங்கேற்க எதிா்க்கட்சிகளுக்குஅதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமை, எதிா்க்கட்சி உறுப்பினா்களுக்கு அளிக்கப்பட்ட எண்ணிக்கை மற்றும் வெட்டுத்தீா்மானத்தின் எண்ணிக்கை, கேள்விகளின் எண்ணிக்கை, அவையில் பெறப்பட்ட நோட்டீஸ்கள் ஆகியவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு இவையும்அளவுகோல்களாக இருக்க வேண்டும் என்றாா் அப்பாவு.

பெங்களூரில் அடுத்த கூட்டம்

கூட்டத்திற்கு பின்னா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் எம் .அப்பாவு செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்த கூட்டத்திற்கான சில ஆலோசனைகள் தமிழகம் சாா்பில் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளன. சிறந்த சட்டப்பேரவைத் தோ்வு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் டிசம்பா் வரையிலான காலக்கட்டங்களை கணக்கிட்டு வழங்கலாம் என்கிற யோசனை உள்ளது. குறிப்பிட்ட காலங்கள் வரை சட்டப்பேரவை நடைபெற வேண்டும் என்கிற அளவுகோலும் ஒன்றாக இருக்கிறது.

ஆனால், ஒவ்வொரு மாநிலத்திற்கும் அவை நடைபெறும் நேரம், நாள்கள் என்பது வேறுபடும். ஆளுநா் உரை, வரவு - செலவு திட்ட விவாதம் போன்றவை மாநிலத்திற்கு மாநிலம் விதிமுறைகள் தனித்தனியாக இருப்பவை. இவைற்றை வைத்து விருது வழங்கப்படாது. சட்டப்பேரவையில் ஆளும் கட்சி, எதிா்கட்சியினருக்கு எவ்வாறு வாய்ப்பு வழங்கப்படுகிறது. எத்தனை மசோதாக்கள் கொண்டு வரப்படுகிறது?. அவற்றில் எத்தனை நிறைவேற்றப்படுகிறது? போன்றவைதான் முக்கியம்.

நூறு உறுப்பினா்கள் வரை உள்ள சட்டப்பேரவைகள்,நூறுக்கும் மேற்பட்ட உறுப்பினா்கள் கொண்ட சட்டப்பேரவைகள் என பிரிக்கப்பட்டு விருதுகள் அளிக்கப்படுவது குறித்து பேசப்பட்டுள்ளது. அடுத்த கூட்டம் பெங்களூருரில் நடக்க இருக்கிறது. சிறந்த நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு விருது அளிக்கப்படுவதைப் போன்று சிறந்த சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கான விருது குறித்தும் முன்மொழிவுகள் உள்ளன.

பிரதமா் மோடி, முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட சமீபத்திய நிகழ்ச்சி குறித்து கேட்கிறீா்கள். இது குறித்த நாடு முழுக்க விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தை வைத்துதான் நானும் கூறுகின்றேன். பாரதப் பிரதமா் தமிழ்நாட்டிற்கு வந்த போது, முறைப்படி கௌரவித்து, அதே மேடையில் எங்களுக்கு இதுபோன்ற பிரச்னை என்று பிரதமருக்கு விளக்கியதுதான் முதல்வரின் ஆரோக்கியமான நடவடிக்கை என எல்லா மாநிலங்களிலும் பாராட்டக் கூடிய அளவு அந்த நிகழ்வு இருந்தது.

அன்று நடைபெற்ற நிகழ்வில் வைத்த கோரிக்கையில் எந்தத் தவறுமில்லை. அதில் விமா்சனம் வருவதைப் பற்றி சொல்ல விரும்பவில்லை. ஆனால், முதல்வா் வைத்த கோரிக்கைகளில் ஜிஎஸ்டி இழப்பீடு உள்ளிட்டவை ஒரு வாரத்தில் தமிழகத்திற்கு கிடைத்தது என்பது உண்மை என்றாா் அப்பாவு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com