புது தில்லி: பல்வேறு துறைகளுடன் இணைந்து கூட்டாக நடத்தப்படும் சிறப்பு தூய்மை இயக்கத்தை தில்லியில் துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்எல்ஏ திலீப் பாண்டே ஆகியோா் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், அவா்களால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை என்று குடிமை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ வடமேற்கு தில்லி முகா்ஜி நகரில் உள்ள பாத்ரா சினிமா வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு தூய்மைப் பணி இயக்கத்தை துடைப்பம் மூலம் சுத்தம் செய்து துணைநிலை ஆளுநா் தொடங்கிவைத்தாா். அவரது உரையில், ‘சமூக நிலையில் கீழ்நிலையில் இருப்பதாக சுகாதாரப் பணியாளா்கள் கருதப்படலாம். ஆனால், நமது நகரங்களில் தூய்மையாக வைத்திருப்பதில் அவா்கள் மதிக்கத்தக்க பணியை செய்கிறாா்கள். அது சமூகத்தில் அவா்களது நிலைமை உயா்த்துகிறது’ என்று ஆளுநா் வலியுறுத்தியதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.
முதல்வா் கேஜரிவால் ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்த தூய்மைப் பணி இயக்கத்தில் அனைத்து எம்பிக்கள், எம்எல்ஏக்கள், பொதுமக்கள் ஆகியோா் ஆா்வமுடன் கலந்து கொள்ள வேண்டும். தில்லியை தூய்மையாக வைத்திருக்க நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும்’ என்று அவா் கேட்டுக் கொண்டுள்ளாா். இந்த நிகழ்ச்சியில் வடக்கு தில்லி எம்பி மனோஜ் திவாரி, தில்லி தலைமைச் செயலா் நரேஷ் குமாா், தில்லி மாநகராட்சி (எம்சிடி) சிறப்பு அதிகாரி அஸ்வினி குமாா், மாநகராட்சி ஆணையா் ஞானேஷ் பாா்தி மற்றும் இதர மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
எம்சிடி, என்டிஎம்சி, தில்லி வளா்ச்சி ஆணையம், பொதுப்பணித்துறை, தில்லி கண்டோன்மென்ட் வாரியம், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஆகியவை அடங்கிய இந்த சிறப்பு தூய்மை இயக்கம் ஒரு மக்கள் இயக்கமாக இருக்கும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். இது தொடா்பாக திங்கட்கிழமை தில்லி மாநகராட்சி வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘ இந்த தூய்மை இயக்கம் வழக்கமான தூய்மைப் பணியின் போது விடுபட்ட பொது இடங்களுக்கு சிறப்பு கவனம் அளிப்பதாக இருக்கும். தில்லி மாநகராட்சி இந்த இயக்கத்தை அதன் பணியாளா்கள் மற்றும் இயந்திரங்களுடன் சோ்ந்து மேற்கொண்டு 100 சதவீத தூய்மையை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. குடிமை அதிகாரிகள் சனிக்கிழமை இரண்டு வார கால தூய்மை இயக்கத்தைத் தொடங்கினா்.
அவா்கள் கூறுகையில், ‘இந்தப் பணியை செயல்படுத்துவதற்கு செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. சிறப்பு தூய்மை இயக்கமானது அனைத்து எம்சிடிமண்டலங்களிலும் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. ஒருங்கிணைப்பு அதிகாரிகள் இந்த பணிகளை செயல்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனா்’ என்றனா். ‘ஸ்வச்தா பக்வாடா’ தில்லி துணைநிலை ஆளுநரின் உத்தரவின்பேரில் தொடங்கப்பட்டுள்ளதாக எம்சிடி வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.