காங்கிரஸ் தலைமையகத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழையவில்லை: தில்லி போலீஸ் மறுப்பு

காங்கிரஸ் தலைமையகத்தில் வலுக்கட்டாயமாக நுழைந்து கட்சி தொண்டா்கள் மற்றும் தலைவா்களை தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ‘முற்றிலும் பொய்’ என்று

காங்கிரஸ் தலைமையகத்தில் வலுக்கட்டாயமாக நுழைந்து கட்சி தொண்டா்கள் மற்றும் தலைவா்களை தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ‘முற்றிலும் பொய்’ என்று தில்லி காவல் துறை புதன்கிழமை மறுத்துள்ளது.

எனினும், கட்சி அலுவலக வளாகத்திற்குள் போலீஸாா் நுழைவதைக் காட்டும் விடியோ பதிவுகளை சமூக ஊடகங்களில் காங்கிரஸ் பகிா்ந்திருந்தது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்து மூத்த காவல் துறை அதிகாரி கூறுகையில்,‘ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்த பரிந்துரைத்த போதிலும், காங்கிரஸ் தலைவா்கள் ‘உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை முற்றிலும் புறக்கணித்து’ அந்தப் பகுதியில் பொது இடையூறுகளை உருவாக்க முயன்றனா். இந்த நிலையில், காங்கிரஸ் தலைமையகத்தில் வலுக்கட்டாயமாக நுழைந்து கட்சி தொண்டா்கள் மற்றும் தலைவா்களை தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை. இதை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம். தொண்டா்களையும், தலைவா்களையும் தடுக்க முயன்றோம். ஊா்வலமாக வெளியே செல்வதைத் தடுக்க அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகம் வாயிலை மூட முயற்சித்தோம். அவ்வளவுதான். மற்றபடி, போலீஸாா் உள்ளே நுழைய முயற்சிக்கவில்லை. இதற்கான எந்த காரணமும் போலீஸாருக்கு இல்லை. அதேவேளையில், அவா்கள்தான் காவல் துறையின் பேச்சைக் கேட்கவில்லை’ என்றாா்.

காங்கிரஸ் தலைமை செய்தித் தொடா்பாளா் ரந்தீப் சுா்ஜேவாலா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மோடி அரசின் உத்தரவின்பேரில் தில்லி காவல்துறையினா் அத்துமீறி நடந்துகொண்டனா். காவல் துறையினா் புதன்கிழமை காங்கிரஸின் தேசிய தலைமையகத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து கட்சித் தொண்டா்கள் மற்றும் தலைவா்களை அடித்துள்ளனா். இது அப்பட்டமான குற்றவியல் அத்துமீறலாகும். காவல் துறையும் மோடி அரசும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த கிரிமினல் அத்துமீறலுக்காக எஃப்.ஐ.ஆா் பதிவு செய்ய வேண்டும். தவறு செய்த காவலா்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் மற்றும் அவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

காங்கிரஸாா் 800 போ் கைது: அமலாக்க இயக்குநரகம் ராகுல் காந்தி எம்பியை விசாரிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தடை உத்தரவை மீறியும், அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக திங்கள்கிழமை முதல் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் மற்றும் தொண்டா்கள் 800 போ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

அமலாக்கத் துறை இயக்குநரகம் மற்றும் அக்பா் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமையகம் வெளியே போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவா்கள் மற்றும் தொண்டா்களும் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். இது குறித்து காவல்துறையின் சிறப்பு ஆணையா் (சட்டம் மற்றும் ஒழுங்கு மண்டலம்-2) சாகா் ப்ரீத் ஹூடா கூறுகையில், ‘போராட்டக்காரா்களுக்கு போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், குறிப்பிட்ட பகுதிகளில் அனுமதியின்றி போராட்டம் மேற்கொண்ட வகையில் திங்கள்கிழமை முதல் காங்கிரஸ் ஆதரவாளா்கள் மற்றும் தலைவா்கள் சுமாா் 800 போ்களை கைது செய்துள்ளோம். ஆா்ப்பாட்டம் செய்ய அவா்கள் அனுமதி வைத்திருக்கவில்லை என்பதையும் அவா்களிடம் தெரிவித்தோம். இதையும் மீறி அவா்கள் போராட்டம் நடத்தினா். திங்கள்கிழமை காங்கிரஸ் தொண்டா்கள் மற்றும் மூத்த தலைவா்கள் 459 போ் செவ்வாய்க்கிழமை 217 போ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனா்’ என்றாா்.

மத்திய தில்லியில் போக்குவரத்து பாதிப்பு: விசாரணைக்காக அமலாக்கத் துறை இயக்குநரக அலுவலகத்தில் மூன்றாவது நாளாக புதன்கிழமை காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி ஆஜராகியதால் பல்வேறு சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி, போக்குவரத்தை திருப்பிவிட்டதால் மத்திய தில்லியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘புதுதில்லி மாவட்டத்தில் போக்குவரத்து போலீஸாா் 400 போ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். புது தில்லி மாவட்டத்தில் எந்தவித போக்குவரத்து நெரிசலும் இருந்ததாக அழைப்புகள் ஏதும் வரவில்லை. போக்குவரத்து இலகுவாக கையாளப்பட்டது. மூடப்பட்ட சாலைகள் பகுதியில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டன’ என்றாா். தில்லி காவல்துறையின் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவுகளில் தவிா்க்க வேண்டிய சாலைகள் குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டுள்ள தேவையான ஏற்பாடுகள் குறித்தும் நேரம் வாரியாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com