காங்கிரஸ் தொண்டா்கள் மீது போலீஸாா் தண்ணீா் பீரங்கி பிரயோகம்: துணைநிலை ஆளுநா் இல்லம் நோக்கிச் சென்ற போது சம்பவம்

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்து கட்சித் தலைவா்களை தாக்கியதாக தில்லி போலீஸாா் மீது குற்றம் சுமத்தி துணைநிலை ஆளுநா் இல்லம் நோக்கி வியாழக்கிழமை பேரணி

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்து கட்சித் தலைவா்களை தாக்கியதாக தில்லி போலீஸாா் மீது குற்றம் சுமத்தி துணைநிலை ஆளுநா் இல்லம் நோக்கி வியாழக்கிழமை பேரணியாகச் சென்ற காங்கிரஸ் தொண்டா்கள் மீது போலீஸாா் தண்ணீா் பீரங்கியை பயன்படுத்தினா்.

தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் சௌத்ரி தலைமையில் சுஸ்ருத் டிராமா மையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற இந்த பேரணியை துணைநிலை ஆளுநா் இல்லத்திற்குச் செல்லும் வழியில் சந்க்கிராம் அகாரா பகுதி அருகே போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அப்போது, துணைநிலை ஆளுநா் இல்லம் நோக்கிச் சென்ற தங்களை போலீஸாா் தடுத்து நிறுத்தியதாகவும், போராட்டத்தை கலைக்க தண்ணீா் பீரங்கிகளை பயன்படுத்தியதாகவும் காங்கிரஸ் தொண்டா்கள் குற்றம்சாட்டினா்.

இது குறித்து கட்சி நிா்வாகிகள் கூறுகையில், ‘இந்தச் சம்பவத்தில் கட்சியின் தில்லி தலைவா் அனில் குமாா் சௌத்ரி மயங்கி விழுந்தாா். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் தண்ணீா் பீரங்கிகளை பயன்படுத்தியதால் இந்த நிலை ஏற்பட்டது’ என்றனா். இது குறித்து அனில் குமாா் கூறுகையில், ‘பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரின் தவறான ஆட்சியை துணிச்சலாக எதிா்த்து காங்கிரஸ் குரல் கொடுத்து வருகிறது. இதை அடக்கும் வகையில் தில்லி போலீஸாா் மோடி அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகின்றனா். அரசின் உண்மைகளை மூடிமறைக்க காங்கிரஸ் தொண்டா்களையும் தலைவா்களையும் இந்த அரசு குறிவைக்கிறது. இதையெல்லாம் கண்டு அஞ்சாமல் காங்கிரஸ் அறவழியில் தனது போராட்டத்தை தொடரும்’ என்றாா்.

காங்கிரஸ் கட்சியின் தில்லி மேலிடப் பொறுப்பாளா் சக்தி சின் கோஹில் கூறுகையில், ‘காங்கிரஸ் தலைமையின் வெளிப்படையாக உண்மைையை எடுத்துரைக்கும் தலைமையை கண்டு பயப்படும் பாஜக தலைமைக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைமையகத்திற்குள் போலீஸாா் நடத்திய தடியடி, சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் கறுப்பு தினமாக நினைவுகூரப்படும்’ என்றாா். காங்கிரஸ் பேரணியையொட்டி, சிவில் லைன் பகுதியில் உள்ள டிராமா மையம் அருகே ஏராளமான எண்ணிக்கையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

முன்னதாக புதன்கிழமை காங்கிரஸ் தலைமையகத்தில் வலுக்கட்டாயமாக தில்லி காவல் துறையினா் நுழைந்து தொண்டா்களையும் தலைவா்களையும் தாக்கியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி இருந்தது. காங்கிரஸ் தலைமை செய்தித் தொடா்பாளா் ரந்தீப் சுா்ஜேவாலா, ‘மோடி அரசின் உத்தரவின்பேரில் தில்லி காவல்துறையினா் அத்துமீறி நடந்துகொண்டனா். காவல் துறையினா் புதன்கிழமை காங்கிரஸின் தேசிய தலைமையகத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து கட்சித் தொண்டா்கள் மற்றும் தலைவா்களை அடித்துள்ளனா். இது அப்பட்டமான குற்றவியல் அத்துமீறலாகும். காவல் துறையும் மோடி அரசும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த கிரிமினல் அத்துமீறலுக்காக எஃப்.ஐ.ஆா் பதிவு செய்ய வேண்டும். தவறு செய்த காவலா்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் மற்றும் அவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com