கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சில தளங்களைப் பயன்படுத்த அனுமதி கோரி சென்னையைச் சோ்ந்த பில்ரோத் தனியாா் மருத்துவமனை தாக்கல் செய்த மனு மீது தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இது தொடா்பான மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய விடுமுறை கால அமா்வு, ‘இன்றுமுதல் இரண்டு வாரங்களுக்குள் தமிழக அரசு இது தொடா்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மேற்கண்ட பிரமாணப் பத்திரத்திற்கு, தேவைப்பட்டால், மனுதாரா் ஒரு வாரத்திற்குள் பதில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டது. இந்த வழக்கு கோடை விடுமுறைக்கு பிறகு விசாரணைக்கு வரவுள்ளது.
முன்னதாக விசாரணையின் போது ஒரு தரப்பு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் எஸ்.நாகமுத்து, ‘சிகிச்சை என்ற போா்வையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை விதிகளை மீறி கட்டடத்தை கட்டி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் இதற்கான படுக்கைகள் காலியாக உள்ளன. ஏதேனும் கூடுதல் படுக்கைகள் தேவைப்பட்டால் மாநில அரசுதான் விண்ணப்பித்திருக்க வேண்டும். இந்த தனியாா் மருத்துவமனை அல்ல’ என்று வாதிட்டாா்.
கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னையைச் சோ்ந்த பில்ரோத் தனியாா் மருத்துவமனையின் மேல் நான்கு தளங்களை பயன்படுத்த தமிழக அரசுக்கு 2020- ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் பிற வசதிகள் குறித்து தனியாா் மருத்துவமனையுடன் ஏற்பாடு செய்யுமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
முன்னதாக, அங்கீகரிக்கப்பட்ட கட்டடத் திட்டத்தை மீறியதாகக் கூறி, பில்ரோத் மருத்துவமனையின் எட்டு மாடித் தொகுதியின் மேல் ஐந்து தளங்களை இடிக்க உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை உச்சநீதிமன்றம் ஜூன் 3, 2019-ஆம் தேதி நிறுத்தி வைத்திருந்தது. எனினும், இந்த மேல் ஐந்து தளங்களை எந்தவொரு நடவடிக்கைக்கும் பயன்படுத்த வேண்டாம் என்றும் மருத்துவமனைக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு கட்டடங்களை முறைப்படுத்துதல் திட்டத்தின் கீழ் மாடிகளை முறைப்படுத்த விண்ணப்பித்துள்ளதாக மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. 250 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை, 2005-2006 முதல் செயல்பட்டு வருவதாகவும், முறைப்படுத்துவதற்கான விண்ணப்பத்தை ஒரு மாதத்திற்குள் அதிகாரிகள் முடிவு செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றத்தில் கூறியிருந்தது.