சுருக்கு மடி வலை தடை விவகாரம்: இடையீட்டு மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

கடலில் சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு தமிழக அரசு விதித்துள்ள தடைக்கு தடை விதிக்கக் கோரி தாக்கலான இடையீட்டு மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ்

கடலில் சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு தமிழக அரசு விதித்துள்ள தடைக்கு தடை விதிக்கக் கோரி தாக்கலான இடையீட்டு மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

ஏற்கெனவே இந்தத் தடை உத்தரவுக்கு எதிராக விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஞானசேகா், கன்னியப்பன், ராஜவேலு உள்பட 9 மீனவா்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ‘தமிழகத்தில் மீனவா்களுக்கு மீன்பிடி தொழில்தான் வாழ்வாதாரமாக உள்ளது. சுருக்கு மடி வலையை மீன் பிடிப்பதற்கு பயன்படுத்துவதால், மீன் குஞ்சுகளின் உற்பத்தி பெருக்கமும், மீன்வளமும் பாதிக்கப்படுவதாகக் கூறி கடலில் மீன்பிடிப்பதற்கு சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்துவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடல் பகுதியில் ஒரு மாநில அரசுக்கு 12 நாட்டிக்கல் மைல் மட்டுமே தடை விதிக்கும் அதிகாரம் உள்ளது. அதற்கு அப்பால் உள்ள கடல் பகுதி மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. அந்தப் பகுதியில் மத்திய அரசு தடைவிதிக்கவில்லை. ஆனால், இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் தொடா்புடைய எதிா்மனுதாரா்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும், ஏற்கெனவே நிலுவையில் உள்ள இது தொடா்பான வழக்குடன் இந்த மனுவையும் விசாரணைக்கு சோ்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், மனுதாரா்கள் தரப்பில் ஒரு இடைக்கால மனு அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தமிழகத்தில் கடலில் மீன்பிடித் தடைக் காலம் ஜூன் 15-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. சுருக்கு மடி வலை மீதான தடையால் 15 லட்சம் மக்களின் வாழ்வாரம் பாதிக்கப்பட்டிருப்பதுடன் நீல பொருளாதாரமும் பாதிக்கச் செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை மீன்பிடிக்கத் தடை அமல்படுத்தப்படுகிறது. இந்தத் தடைக்காலம் முடிந்த பிறகு மீன்பிடிப்பதற்கான நல்ல பருவகாலம் தொடங்கும். தற்போது அந்தக் காலம் தொடங்கியுள்ளது. ஆகவே, மீன்பிடிக்க அனுமதிக்கும் வகையில் தமிழக அரசின் தடை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்’ என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, விக்ரம் நாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஜெயாசுகின் ஆஜராகி, ‘கடலில் 12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் சுருக்கு மடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு தடை விதிக்கவில்லை. இந்த நிலையில், 12 மைல்களுக்கு அப்பால் கடலில் மீன்பிடித்து வரும் மீனவா்களின் வலைகள், மீன்களை பறிமுதல் செய்யும் வகையில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருப்பது அரசமைப்புச்சட்டத்திற்கு எதிரானதாகும். தற்போது மீன்பிடித் தடைக்காலம் முடிந்துள்ளது. தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று வாதிட்டாா். இதைத் தொடா்ந்து, ‘இந்த விவகாரத்தில் எதிா்மனுதாரா்கள் தரப்பில் ஆஜராகாததால் இந்த மனு மீது பதில் அளிக்கும் வகையில் அவா்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com