தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் பரவலாக கனமழை பெய்தது. இந்த மழை அதிகபட்ச வெப்பநிலையை கணிசமாக குறைத்தது. இதனால், வெப்பத்திலிருந்து மக்களுக்கு நிவாரணம் கிடைத்தது.
தில்லியில் வியாழக்கிழமை முதல் அடுத்த 6 நாள்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே கணித்திருந்தது. இது தொடா்பாக மஞ்சள் எச்சரிக்கையையும் வெளியிட்டிருந்தது. இதன்படி, தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் பரவலாக மழை பெய்தது. மேலும், தில்லி மற்றும் என்சிஆா் பகுதியில் உள்ள லோனி டெஹாட், ஹிண்டன் ஏஎஃப் ஸ்டேஷன், காஜியாபாத், இந்திராபுரம், சப்ராவுலா, நொய்டா, தாத்ரி, கிரேட்டா் நொய்டா ஆகிய இடங்களில் மணிக்கு சுமாா் 30-40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் மதியம் 1.50 மணிக்கு ட்வீட் செய்திருந்தது. இதன்படி, பிற்பகலிலும் பலத்த மழை பெய்தது.
7.2 மி.மீ. மழை பதிவு: வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கி வரும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 7.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோல, ஜாஃபா்பூரில் 1.5 மி.மீ., ஆயாநகரில் 5.2 மி.மீ., லோதி ரோடில் 5.2 மி.மீ., நரேலாவில் 2.5 மி.மீ., பாலத்தில் 5 மி.மீ., ரிட்ஜில் 3 மி.மீ., சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 0.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
வெப்பநிலை: இந்த நிலையில், தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில், குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 5 டிகிரி குறைந்து 23.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 5 டிகிரி குறைந்து 34.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 96 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 77 சதவீதமாகவும் இருந்தது. இதேபோன்று மற்ற வானிலை நிலையங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை குறைந்தே பதிவாகியிருந்தது.
‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்: தில்லியில் காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாக ‘திருப்தி’ பிரிவில் இருந்தது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், துவாரகா செக்டாா் 8, சாந்தினி சௌக், முண்ட்கா ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு 100 - 150 புள்ளிகளுக்குள் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.
மழை தொடர வாய்ப்பு: இதற்கிடையே, தில்லியில் சனிக்கிழமை (ஜூன் 18) அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணித்துள்ளது.