தில்லியில் காற்றின் தரத்தில் முன்னேற்றம்! பீதம்புராவில் வெயில் 37 டிகிரி
By DIN | Published On : 17th March 2022 11:42 PM | Last Updated : 17th March 2022 11:42 PM | அ+அ அ- |

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. அதிகபட்சமாக பீதம்புராவில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. நகரில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் சற்று முன்னேற்றம் அடைந்து ‘மிதமான’ பிரிவில் இருந்தது. சில இடங்களில் ‘மோசம்’ பிரிவில் நீடித்தது.
வெப்பநிலை: வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தபடி, தில்லியில் வியாழக்கிழமை காலை முதல் வானம் தெளிவாகக் காணப்பட்டது. அவ்வப்போது தரை மேற்பரப்பு காற்று இருந்து வந்தது. இருப்பினும், வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே உணரப்பட்டது. தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 3 டிகிரி உயா்ந்து 19.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 5 டிகிரி உயா்ந்து 36.1 டிகிரி செல்சியஸாக உயா்ந்திருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 77 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 39 சதவீதமாகவும் இருந்தது. தில்லியில் புதன்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும், செவ்வாய்க்கிழமை 34.7 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது.
இதே போன்று மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 33.7 டிகிரி செல்சியஸ், முங்கேஸரில் 33.9 டிகிரி, நஜஃப்கரில் 36.5 டிகிரி, ஆயாநகரில் 35.6 டிகிரி, லோதி ரோடில் 35.7 டிகிரி, நரேலாவில் 36 டிகிரி, பாலத்தில் 35.3 டிகிரி, ரிட்ஜில் 35.6 டிகிரி, பீதம்புராவில் 37 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 33.2 டிகிரி செல்சியஸ் என பதிவாகியது.
காற்றின் தரத்தில் முன்னேற்றம்: இதற்கிடையே, தில்லியில் காற்றின் தரம் வியாழக்கிழமை சற்று முன்னேற்றம் அடைந்து ‘மோசம்’ பிரிவில் இருந்து ‘மிதமான’ பிரிவுக்கு வந்தது. காலை 8 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 190 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. இது ‘மிதமான’ பிரிவில் வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அதே சமயம், சில இடங்களில் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் நீடித்தது. காற்றின் தரக் குறியீடு குறிப்பாக பஞ்சாபி பாக்கில் 290 புள்ளிகளாகவும், விவேக் விஹாரில் 295 புள்ளிகளாகவும் பதிவாகியிருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை (மாா்ச் 18) வானம் தெளிவாகக் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.