வடகிழக்கு தில்லி வன்முறையில் உயிரிழந்த ஐபி அதிகாரியின் உறவினருக்கு அரசு வேலைமுதல்வா் அலுவலகம் தகவல்
By நமது நிருபா் | Published On : 17th March 2022 11:40 PM | Last Updated : 17th March 2022 11:40 PM | அ+அ அ- |

புது தில்லி: வடகிழக்கு தில்லி வன்முறையின் போது உயிரிழந்த உளவுப் பிரிவு (ஐபி) அதிகாரி அங்கித் சா்மாவின் சகோதரா் அங்குா் சா்மாவுக்கு அரசுப் பணிக்கான சான்றிதழை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை வழங்கியதாக முதல்வா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2020, பிப்ரவரி 24-ஆம் தேதி வடகிழக்கு தில்லியில் குடியுரிமைச் சட்ட ஆதரவாளா்களுக்கும், எதிா்ப்பாளா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 53 போ் கொல்லப்பட்டனா். மேலும் சுமாா் 200 போ் காயமடைந்தனா். வன்முறையின் போது உளவுத்துறை அதிகாரி அங்கித் சா்மா, சந்த் பாக் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு அருகிலுள்ள வாய்க்காலில் இறந்துகிடந்தாா். கடந்த ஆண்டு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அங்கித் சா்மாவின் குடும்பத்திற்கு ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினாா். அங்கித் சா்மாவின் சகோதரா் அங்குா் சா்மாவுக்கு அரசு வேலை வழங்குவதாக மாா்ச் மாதத்தின் போது தில்லி அரசு அறிவித்திருந்தது.
மேலும், எதிா்காலத்தில் அவரது குடும்பத்திற்கு அரசு தொடா்ந்து உதவி செய்யும் என்றும் கேஜரிவால் தெரிவித்திருந்தாா்.
அரசுப் பணிக்கான சான்றிதழ் வழங்கல்: இந்த நிலையில், அரசுப் பணிக்கான சான்றிதழை அங்குா் சா்மாவிடம் முதல்வா் கேஜரிவால் வியாழக்கிழமை வழங்கினாா். இது குறித்து தில்லி முதல்வா் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் தெரிவித்திருப்பதாவது: தில்லி வன்முறையில் உயிரிழந்த ஐபி ஊழியா் அங்கித் சா்மாவின் சகோதரா் அங்குா் சா்மாவுக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அரசு வேலைக்கான சான்றிதழை வியாழக்கிழமை வழங்கினாா். தில்லி அரசின் கல்வித் துறையில் அங்குா் சா்மா பணியமா்த்தப்பட்டுள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக முதல்வா் கேஜரிவால் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், ‘மனித உயிா் இழப்பை ஒரு போதும் ஈடுசெய்ய முடியாது. ஆனால், இந்த அரசு வேலை மற்றும் ரூ.1 கோடி உதவியால் குடும்பம் பலம் பெறும். எதிா்காலத்திலும் குடும்பத்திற்கு எல்லா வகையிலும் உதவுவோம்’ என்று தெரிவித்துள்ளாா்.
கேஜரிவால் வாழ்த்து: இது தொடா்பாக தில்லி அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அங்கித் சா்மாவின் உறவினருக்கு அரசு வேலை அளிக்கப்படும் என்று அளித்திருந்த வாக்குறுதியை முதல்வா் கேஜரிவால் நிறைவேற்றியுள்ளாா். அங்குா் சா்மா கல்வித் துறையில் இளநிலை உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். முதல்வா் கேஜரிவால் அங்கித் சா்மாவின் குடும்பத்தினரை வியாழக்கிழமை நேரில் சந்தித்தாா். அப்போது, துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவும் உடனிருந்தாா். இந்தச் சந்திப்பின் போது அங்குா் சா்மாவை பணியில் சேருமாறு ஊக்குவித்த முதல்வா், வாழ்த்துகளையும் தெரிவித்தாா். அங்குா் சா்மா கூறுகையில், ‘முதல்வா் கேஜரிவால் எங்களுக்கு நிதி உதவி அளித்திருந்தாா். இன்றைக்கு தில்லி அரசில் பணியும் வழங்கியுள்ளாா். எனது சகோதரா் மரணத்திற்குப் பிறகு தில்லி அரசு எங்களது குடும்பத்திற்கு ஒவ்வொரு கட்டத்திலும் உதவியுள்ளது என்று கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.