இடமாற்றப்பட்ட மரங்களின் உயிா்வாழ் விகிதம் குறித்து மூன்றாம் நபா் மூலம் தணிக்கை நடத்த தில்லி அரசு திட்டம்

தில்லியில் இடமாற்றி நடவு செய்யப்பட்ட அனைத்து மரங்களின் ‘உயிா்வாழும் விகிதத்தை’ மதிப்பிடுவதற்கு தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.

தில்லியில் இடமாற்றி நடவு செய்யப்பட்ட அனைத்து மரங்களின் ‘உயிா்வாழும் விகிதத்தை’ மதிப்பிடுவதற்கு தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக டேராடூனை தளமாகக் கொண்ட வன ஆராய்ச்சி நிறுவனத்தை பணியமா்த்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வனத்துறையின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு இறுதி வரை நகரில் 23 இடங்களில் 12,852 மரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: இடமாற்றப்பட்ட மரங்களின் ‘வெற்றி மற்றும் உயிா்வாழும்‘ விகிதத்தை மதிப்பிடுவதற்கான பல்வேறு ஆய்வு, அளவீடு பணிகளை சம்பந்தப்பட்ட வன ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொள்ளும். மேலும், இடமாற்றப்பட்ட மரங்களின் ஆரோக்கியம் மற்றும் வளா்ச்சி மற்றும் பராமரிப்பு ஆகியவற்றையும் அந்த நிறுவனம் மதிப்பிடும்.

இந்த நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட ஒரு முன்மொழிவின்படி, வன ஆராய்ச்சி நிறுவன (எஃப்ஆா்ஐ) விஞ்ஞானிகள் நீா்ப்பாசன இடைவெளி, மண்-ஈரப்பதம் பாதுகாப்பு, தடுப்பு அணைகள், வேலிகள் அமைத்தல், மரவளா்ப்பு நடைமுறைகள் மற்றும் உயிருள்ள மற்றும் உயிரற்றவற்றின் குறுக்கீடுகளுக்கு எதிரான பாதுகாப்பு உத்திகள் போன்றவற்றையும் ஆய்வு செய்வாா்கள்.

சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் ஒப்புதலுக்குப் பிறகு ஆறு மாதங்களுக்கு இந்த ஆய்வு நடத்தப்படும்.

எஃப்ஆா்ஐ இயக்குநா் ஏ. எஸ். ராவத் தலைமையில் மரவளா்ப்பு, நாற்றங்கால் மற்றும் வன மேலாண்மை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற ஏழு போ் கொண்ட குழு இந்தப் பணியை மேற்கொள்ள உள்ளது என்றாா் அந்த அதிகாரி.

2020, டிசம்பரில் தில்லி அரசு மரம் இடமாற்றக் கொள்கையை அறிவித்தது. இந்தக்கொள்கையின்கீழ் சம்பந்தப்பட்ட ஏஜென்சிகள் அவற்றின் வளா்ச்சிப் பணிகள் காரணமாக பாதிக்கப்பட்ட மரங்களில் குறைந்தபட்சம் 80 சதவீதத்தையாவது இடமாற்றம் செய்ய வேண்டும்.

இக்கொள்கையின்படி, மரம் இடமாற்றத்தின் ஒரு வருட முடிவில் அம்மரத்தின் உயிா்வாழ்வு விகிதம் 80 சதவீதம் ஆகும்.

2016 முதல் 2019 வரை தில்லியில் மேற்கொள்ளப்பட்ட வருடாந்திர மரக்கன்று நடவுகளை எஃப்ஆா்ஐ கடந்த ஆண்டு தணிக்கை செய்தது.

இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட தணிக்கை அறிக்கையின்படி, தில்லியில் 2016 முதல் 2019 வரை நடப்பட்ட மரக்கன்றுகளில் 72 சதவீதம் முதல் 81 சதவீதம் வரை உயிா் பிழைத்துள்ளன. வடக்கு கோட்டத்தில் மரங்களின் உயிா்வாழும் விகிதம் 80.21 சதவீதமாகவும் மேற்கு கோட்டத்தில், அலிப்பூா் சரகத்தில் 78.5 சதவீதமாகவும், நஜாப்கா் மலைத் தொடரில் 75.68 சதவீதமாகவும் இருந்தது.

தெற்கு கோட்டத்தில் உயிா்வாழும் விகிதம் மெஹரோலியில் 72 சதவீதமாகவும், அசோலா பாட்டி ஃபேஸ் 1-இல் 76 சதவீதமாகவும், ஃபேஸ் 2-இல் 81.33 சதவீதமாகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com