ஆசிய தேர்தல் ஆணையங்கள் சங்கத்தின் தலைமையாக இந்தியா ஒருமனதாக தேர்வு

 2022 -24-ஆம் ஆண்டுகளுக்கான ஆசிய தேர்தல் ஆணையங்கள் சங்கத்தின் தலைமையாக இந்திய தேர்தல் ஆணையம் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

 2022 -24-ஆம் ஆண்டுகளுக்கான ஆசிய தேர்தல் ஆணையங்கள் சங்கத்தின் தலைமையாக இந்திய தேர்தல் ஆணையம் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
 இரண்டாவது முறையாக இந்தியா இந்தத் தலைமைப் பொறுப்பை ஏற்கிறது. 2011-13- ஆம் ஆண்டுகளில் இந்த அமைப்பின் துணைத் தலைமைப் பொறுப்பையும் இந்தியா ஏற்றிருந்தது.
 20 ஆசிய நாடுகளின் தேர்தல் நிர்வாக அமைப்புகள் உறுப்பினர்களாகக் கொண்ட இந்த சங்கத்தின் நிர்வாகக் குழு, பொதுக்குழுக் கூட்டம் கடந்த மே 7- ஆம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் நடைபெற்றது.
 இக்கூட்டத்தில் இந்தியா தேர்வு செய்யப்பட்டது. இந்தச் சங்கத்துக்கு தற்போதைய தலைமை ஏற்று இருந்த மணிலா தேர்தல் ஆணையம், இப்பொறுப்பிலிருந்து விலகிச் செல்கிறது.
 மேலும், இந்தச் சங்கத்தின் நிர்வாகக் குழுவில் ரஷ்யா, உஸ்பெகிஸ்தான், இலங்கை, மாலத்தீவுகள், தைவான் ஆகிய நாடுகள் சங்கத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
 மணிலாவில் நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதிகளாக இந்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையர் நிதிஷ் வியாஸ், மணிப்பூர் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் அகர்வால், ராஜஸ்தான் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குப்தா ஆகிய 3 உறுப்பினர் பிரதிநிதிகள் குழு பங்கேற்றது.
 மணிலா கூட்டத்தில் 2022- 23-ஆம் ஆண்டுக்கான பணித் திட்டத்தையும், 2023 -24-ஆம் ஆண்டுக்கான எதிர்கால செயல்திட்டங்களையும் நிர்வாகக் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டன. மேலும், இக்கூட்டத்தில் இந்தியா சார்பில் தேர்தல்களில் பாலின பிரச்னைகள் என்பதற்கான அறிக்கை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டது.
 அனைவரையும் உள்ளடக்கிய, பங்கேற்புமிக்க தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல், அரசியல் நடைமுறைகளில் உள்ள தடைகளை நீக்குவதற்கு இந்தியா மேற்கொண்ட பல்வேறு ஒருங்கிணைந்த இலக்குகள் ஆகியவை இந்த அறிக்கையில் உறுப்பு நாடுகள் பயனடையும் வகையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்களில் கூறப்பட்டது.
 பிலிப்பைன்சின் மணிலாவில் 1997 ஜனவரி 26 - 29-இல் நடைபெற்ற 21-ஆம் நூற்றாண்டில் ஆசிய தேர்தல்கள் குறித்த கருத்தரங்கில் இதுபோன்ற ஆசிய சங்கம் அமைப்பதற்கான யோசனைகள் உருவாகி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 அதனடிப்படையில், 1998-இல் ஆசிய தேர்தல் ஆணையங்களின் சங்கம் அமைக்கப்பட்டது.
 ஆசிய நாடுகளில் தேர்தல்கள் சிறப்பான செயல் முறையைக் கொண்டதாக உருவாக்கும் நோக்கத்துடனும், வெளிப்படையான தேர்தல்களை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதித்து செயல்பட, நாடுகளுக்கிடையேயான சிறந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக ஒரு கட்சி சார்பற்ற ஜனநாயக மன்றத்தை வழங்குவதற்காக இது ஏற்படுத்தப்பட்டது.
 மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் கீழ் உள்ள ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மைக்கான இந்திய சர்வதேச நிறுவனத்தின் (ஐஐஐடிஇஎம்) மூலம் பல்வேறு ஆசிய தேர்தல் ஆணையங்களின் சங்க உறுப்பு நாடுகளுக்கு அவ்வப்போது திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டங்களை நடத்தப்பட்டு வரப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com