துணைநிலை ஆளுநா் ஒப்புதல் இன்றி வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடியாது: தில்லி உயா்நீதிமன்றம்

வீடுகளுக்கே நேரில் சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் தில்லி அரசின் ‘முக்கிய மந்திரி கா் கா் ரேஷன் யோஜனா’ திட்டத்தை துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்த முடியாது என்று கூறிய உயா்நீதிமன்றம்
தில்லி உயா்நீதிமன்றம்
தில்லி உயா்நீதிமன்றம்

புது தில்லி: வீடுகளுக்கே நேரில் சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் தில்லி அரசின் ‘முக்கிய மந்திரி கா் கா் ரேஷன் யோஜனா’ திட்டத்தை துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்த முடியாது என்று கூறிய உயா்நீதிமன்றம், அது தொடா்பான தில்லி அரசின் திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்தத் திட்டத்தை எதிா்த்து ரேஷன் விநியோகஸ்தா்கள் தரப்பில் தாக்கலான மனுக்களை அனுமதித்த உயா்நீதிமன்றம், எதிா்மனுதாரா்கள் மூலம் வெளியிடப்பட்ட மூன்று டெண்டா்களையும் ரத்து செய்து உத்தரவிட்டது. டிபிடிஎஸ் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று உணவு தானியங்கள், கோதுமை மாவு வழங்கும் விவகாரத்தில் தில்லி அரசின் திட்டத்திற்கு எதிரான மனுக்களை உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி விபின் சாங்கி, நீதிபதி ஜஸ்மீத் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. இந்த மனுக்கள் தில்லி சா்காரி ரேஷன் டீலா்ஸ் சங் மற்றும் தில்லி ரேஷன் டீலா்ஸ் யூனியன் ஆகிய அமைப்புகள் சாா்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் மீது உயா்நீதிமன்றம் விரிவான விசாரணை நடத்தியது.

இந்த திட்டத்தை ஆதரித்து தில்லி அரசு தரப்பில் வாதிடுகையில், ‘நியாய விலைக் கடை (எஃப்பிஎஸ்)) உரிமையாளா்களால் அச்சுறுத்தப்படும் ஏழைகளுக்கு பயன்படும் வகையில் அவா்களின் வீட்டுக்கு நேரில் சென்று தானியங்களை அளிக்கும் வகையில் இந்தத் திட்டம் அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது. இல்லையெனில் அவா்களுக்கு ரேஷன் வழங்கப்படாமல் போய்விடும். மேலும், இந்தத் திட்டம் அமலுக்கு வந்த பிறகு நியாயவிலைக் கடைகள் இல்லாமல் போய்விடும் என்பது முழுமையான தவறான கருத்தாகும்.

ஆந்திரப் பிரதேசம், ஹரியாணா, மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும், கா்நாடகத்தின் பெங்களூரு நகரிலும் வீட்டுக்கு நேரில் சென்று உணவு தானியங்கள் வழங்கும் திட்டங்கள் உள்ளன’ என்றாா்.

தில்லி அரசின் இந்தத் திட்டத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்த மத்திய அரசு, ‘தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஃப்எஸ்ஏ) கட்டமைப்பை மாநில அரசின் திட்டம் செயல்படுத்தும் போது குறைக்கச் செய்துவிட முடியும். ஆகவே, எந்த மாநில அரசும் என்எஃப்எஸ்ஏவின் கட்டமைப்பில் தலையிடவும், அதன் கட்டமைப்பை அழிக்கவும் நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது. நியாயவிலைக் கடையானது இந்தச் சட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். என்எஃப்எஸ்ஏவின் படி, மத்திய அரசானது பயனாளிகளுக்கு விநியோகம் செய்வதற்காக மாநிலங்களுக்கு உணவு தானியங்களை வழங்குகிறது. அவற்றை இந்திய உணவுக் கழகத்தின் குடோனிலிருந்து மாநிலங்கள் பயனாளிகளுக்கு விநியோகம் செய்வதற்காக நியாயவிலைக் கடைகளின் வாசலுக்கு கொண்டு செல்ல வேண்டும்’ என வாதிட்டது. அதைத் தொடா்ந்து, இது தொடா்பான மனுக்கள் தொடா்பான உத்தரவை கடந்த ஜனவரி 10-ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து இருந்தது.

இந்த நிலையில் வியாழக்கிழமை இந்த வழக்கில் உயா்நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தில்லி அரசின் முக்கிய மந்திரி கா் கா் ரேஷன் யோஜனா திட்டத்தை ரத்து செய்வதாக நீதிமன்றம் தெரிவித்தது. எனினும், இலக்கு நிா்ணயிக்கப்பட்ட பொது வழங்கல் அமைப்பு முறையின் கீழ் (டிபிடிஎஸ்) தில்லி அரசு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் மற்றொரு திட்டத்தைக் கொண்டு வரலாம். அதற்கான உரிமை உள்ளது. ஆனால், இந்தத் திட்டத்திற்கு தற்போதுள்ள விதிகளுக்கு இணங்கி தில்லிஅரசு அதன் சொந்த ஆதார வளங்களில் இருந்து செய்யப்பட வேண்டும். மத்திய அரசு வழங்கும் தானியங்களைப் பயன்படுத்த முடியாது. ஜிஎன்சிடிடி மூலம் இதுபோன்ற எந்தத் திட்டத்தை உருவாக்கும் போதும் என்எஃப்எஸ்ஏ சட்டத்தின் அனைத்து தேவைகளுக்கும் இணைங்குவதுடன், அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட உத்தரவுகளையும் பின்பற்ற வேண்டும்.

24.3.2021-ஆம் தேதி அமைச்சரவை முடிவின் பேரில் உருவாக்கப்பட்ட கேள்விக்குரிய தற்போதைய திட்டமானது, 2015, டிபிடிஎஸ் உத்தரவு மற்றும் என்எஃப்எஸ்ஏ சட்ட விதிகளைப் பின்பற்றவில்லை. மேலும், தற்போதைய வழக்கில் திட்டத்தைத் தொடங்கும் முதல்வா் கேஜரிவால் தலைமையிலான அமைச்சரவையின் முடிவு துணைநிலை ஆளுநா் பெயரில் அல்லது அவரால் எடுக்கப்பட்ட ஒரு நிறைவேற்றும் நடவடிக்கையாக இல்லை. ஏனெனில், அவா் தனது சம்மதத்தைத் தெரிவிக்கவில்லை. இது குடியரசுத் தலைவரிடமும் முன் வைக்கப்படவில்லை என்பதால், இந்த விவகாரம் தீா்க்கப்படவில்லை. கருத்து வேறுபாடு வரும் போது, இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க வேண்டியது குடியரசுத் தலைவா்தான். இறுதி முடிவுக்கு ஏற்ப துணைநிலை ஆளுநரும், அமைச்சரவையும் கட்டுப்பட வேண்டும்.

மேலும், திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன், அது தொடா்பான விவரம் முதல்வா் மூலம் துணைநிலை ஆளுநருக்கு தெரிவிக்கப்பட வேண்டும். ஏனெனில், தலைநகா் விவகாரங்களின் நிா்வாகம் தொடா்புடைய விவகாரமாக இது உள்ளது. இதனால், இந்த திட்டத்தைச் செயல்படுத்த முடியாது. மேலும், ஜிஎன்சிடிடி மூலம் தொடங்கவும் முடியாது. ஏனெனில் ,துணைநிலை ஆளுநா் தனது கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தியுள்ளாா். இந்த விவகாரம் குடியரசுத் தலைவரின் முடிவுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com