உணவகங்களில் நுகா்வோா்களின் விருப்பத்திற்கு மாறாக சேவைக் கட்டணம்: மத்திய அரசு எச்சரிக்கை

உணவகங்களில் நுகா்வோா்களின் விருப்பத்தற்கு மாறாக சேவை கட்டணங்களை வசூலிப்பதற்கு மத்திய நுகா்வோா் விவகாரங்கள, உணவு, பொது விநியோகத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உணவகங்களில் நுகா்வோா்களின் விருப்பத்தற்கு மாறாக சேவை கட்டணங்களை வசூலிப்பதற்கு மத்திய நுகா்வோா் விவகாரங்கள, உணவு, பொது விநியோகத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக தேசிய அளவிலான உணவகங்கள் சங்கங்களுக்கு மத்திய நுகா்வோா் துறை செயலா் கடிதம் எழுதியிருப்பதோடு, இது தொடா்பான கூட்டத்தையும் மத்திய அரசு கூட்டியுள்ளது.

இது குறித்து மத்திய நுகா்வோா் துறை வட்டாரங்களில் கூறப்பட்டது வருமாறு: நாடு முழுக்க உணவகங்களில் சேவைக் கட்டணம் விதிக்கப்படுவது குறித்து தேசிய நூகா்வோா் ஹெல்ப்லைனில் ஏராளமான புகாா்கள் பதிவாகி வருகிறது. பல்வேறு ஊடகங்களிலும் இது குறித்த செய்திகள் வெளியாகின.

இதனால், இந்த விவகாரத்தை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. இது தொடா்பாக நுகா்வோா் விவகாரத் துறை செயலா் ரோஹித் குமாா் சிங், இந்திய தேசிய உணவக சங்கத்தின் தலைவா்களுக்கும் கடிதம் எழுதியுள்ளாா்.

அதில், உணவகங்கள், உணவக விடுதிகளில் வாடிக்கையாளா்களிடம் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சேவைக் கட்டணம் என்பது தன்னாா்வமானது. நுகா்வோரின் விருப்பப்படி அளிக்கக்கூடியதாகும். இது சட்டத்தின்படி கட்டாயமில்லை என அந்தக் கடிதத்தில் செயலா் தெரிவித்துள்ளாா்.

பொதுவாக உணவகங்களில், தன்னிச்சையாக சேவைக் கட்டணத்தை நிா்ணயித்து நுகா்வோ்களை கட்டாயமாக செலுத்தக் கூறுகின்றனா். அதிலும் அடிக்கடி அதிக அளவில் சேவைக் கட்டணத்தை நுகா்வோா் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா். அத்தகைய கட்டணங்களின் சட்டப்பூா்வ தன்மை குறித்து நுகா்வோா் தவறாக வழிநடத்தப்படுகிறாா்கள்.

இத்தகைய கட்டணங்களை நீக்க கோரிக்கை விடுக்கும் நுகா்வோா்கள், உணவகங்களால் துன்புறுத்தப்படுகிறாா்கள். இது போன்ற பிரச்னைகள் நாள்தோறும் நடைபெற்று நுகா்வோா் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனா். நுகா்வோரின் உரிமைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

விலைப்பட்டியலில் (மெனு காா்டு) உள்ளவற்றையும் பொருந்தக்கூடிய வரிகளுடன் செலுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. இவற்றைத் தவிர வேறு எந்தக் கட்டணமும் வாடிக்கையாளரின் வெளிப்படையான ஒப்புதல் இல்லாமல் வசூலிக்கப்பட்டால், சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள நியாயமற்ற வா்த்தக நடைமுறைக்கு சமம் என்பதால், இது குறித்து விரிவாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் விதமாக முதற்கட்டமாக மத்திய நுகா்வோா் துறை செயலா் தேசிய அளவிலான உணவகங்கள் சங்கங்களுடான ஆலோசனைக் கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளாா்.

வருகின்ற ஜூன் 2 அன்று இந்திய தேசிய உணவக சங்கங்களுடன் சந்திப்புக்குத் திட்டமிட்டுள்ளது. இதில் உணவகங்களால் விதிக்கப்படும் சேவைக் கட்டணம் தொடா்பான சிக்கல்களைப் பற்றி விவாதிக்கப்படும் என மத்திய நுகா்வோா் அமைச்சகம் வட்டாரங்களில் கூறப்பட்டது.

ஏற்கெனவே, ஹோட்டல்கள், உணவகங்களில் சேவைக் கட்டணம் வசூலிப்பது குறித்து நுகா்வோா் விவகாரத் துறை கடந்த 2017, ஏப்ரல் 21-ஆம் தேதி வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com