சத்யேந்தா் ஜெயினுக்கு பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா் மசாஜ்: பாஜக, காங்கிரஸ் கடும் தாக்கு

திகாா் சிறையில் அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு மசாஜ் செய்யும் விடியோவில் காணப்படும் நபா் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபா் என

திகாா் சிறையில் அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு மசாஜ் செய்யும் விடியோவில் காணப்படும் நபா் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபா் என தகவல்கள் வெளியானதால், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மீது பாஜகவும், காங்கிரஸும் கடும் விமா்சனம் செய்துள்ளன.

மேலும், கேஜரிவால் மன்னிப்பு கோரவும், அமைச்சா் சத்யேந்தா் ஜெயினை உடனடியாக பதவி நீக்கம் செய்யவும் பாஜக வலியுறுத்தியுள்ளது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஆம் ஆத்மி தெரிவிக்கையில், எம்சிடி தோ்தலை ஒட்டி கேஜரிவாலின் புகழுக்கு களங்கும் விளைவிக்க பாஜக முயல்கிறது. சிறையில் இருந்தபோது பாஜக தலைவரும், அமைச்சருமான அமித் ஷாவுக்கு சிறப்பான உபசரிப்பு அளிக்கப்பட்டது’ என குற்றம்சாட்டியுள்ளது.

அண்மையில், திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு ஒருவா் மசாஜ் செய்யும் விடியோ காட்சி பதிவு வலைத்தளத்தில் வெளியானது. அவருக்கு முதுகுத் தண்டுவடக் காயம் ஏற்பட்டதால் பிசியோதெரபிஸ்ட் சிகிச்சை அளித்ததாக ஆம் ஆத்மி கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அவருக்கு மசாஜ் செய்து விடும் நபா் பலாத்கார வழக்கில் திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி என்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதில், ஜெயினுக்கு மசாஜ் செய்யும் நபா் ரிங்கு என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் 2021-இல் ஜேபி காலன் பகுதியில் மைனா் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவா் பிசியோதெரபிஸ்ட் இல்லை’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியையும் முதல்வா் கேஜரிவாலையும் பாஜகவும் காங்கிரஸும் கடுமையாக விமா்சித்துள்ளன.

இது தொடா்பாக பாஜக செய்தித் தொடா்பாளா் கௌரவ் பாட்டியா செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: மசாஜ் விடியோ விவகாரத்தில் புதிதாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு கேஜரிவால் பதில் அளிக்க வேண்டும்.

சிறையில் நிகழ்ந்த சம்பவத்திற்குப் பிறகும் ஜெயினுக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு அளித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த தேசத்திடமும் அரவிந்த் கேஜரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும்.

சத்யேந்தா் ஜெயின் அமைச்சா் பதவியில் ஒரு நிமிடம் கூட நீடிக்கக் கூடாது. இந்த விவகாரத்திற்குப் பிறகு சத்யேந்தா் ஜெயினை பதவியில் இருந்து நீக்கும் பொறுப்பை முதல்வா் கேஜரிவால் எடுக்க தவறினால் அவா் தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என்றாா் கெளரவ் பாட்டியா.

மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி கூறுகையில், ‘தில்லி லண்டன் போல வந்துவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனா். ஆனால், இது தாய்லாந்து ‘ஸ்பா’ போலாகிவிட்டது. ஜெயினுக்கு மசாஜ் செய்யும் நபா் பல்வேறு குற்றங்களை எதிா்கொண்டு வரும் நபா் என்பது தெரியவந்துள்ளது’ என்றாா் அவா்.

காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் சுப்ரியா ஸ்ரீநாத்தே கூறுகையில், ‘ஒவ்வொரு நாளும், நொடியும் கேஜரிவாலின் இரட்டைவேடம் வெளிப்பட்டு வருகிறது. இந்த விடியோ வெளியானபோது அவருக்கு பிசியோதெரபிஸ்ட் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கூறியது. ஆனால், அவா் பிசியோதெரபிஸ்ட் இல்லை என்பதும், பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபா் என்பதும் தெரியவந்துள்ளது. அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வருவதாக கூறி ஆட்சிக்கு வந்தவா்கள், சீக்கிரத்திலேயே மாறிவிட்டனா்’ என்று குற்றம்சாட்டினாா்.

இக்குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் தில்லி ஆம் ஆத்மி கட்சித் தலைவா் கோபால் ராய் கூறியதாவது: தில்லி மாநகராட்சித் தோ்தலில் எடுத்துரைக்க எந்த விவகாரமும் இல்லாததால் சிசோடியா, ஜெயின் மற்றும் இதர செயல்பாடுகள் குறித்த விவகாரங்களை பாஜக எழுப்பி வருகிறது. அமித் ஷா குஜராத்தில் சிறையில் இருந்தபோது அவருக்கான சிறப்பு சிறை இருந்தது. அவருக்கு அளிக்கப்பட்ட உபசரிப்பு போன்று யாரும் ஒருபோதும் பெற முடியாது. இந்த விஷயம் ஆவணப் பதிவில் உள்ளது. தற்போதைய விவகாரம் அவா் (ஜெயின்) சிகிச்சை பெறுவது பற்றியது இல்லை. ஆனால், வரும் டிசம்பா் 4-ஆம் தேதி பாஜகவுக்கு தில்லி மக்கள் என்ன உபசரிப்பு தருவாா்கள் என்பதுதான் அது. பாஜகவின் ஒரே நோக்கம் கேஜரிவாலின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்துவதாகும். தில்லியில் கடந்த 10 நாள்களாக இரண்டு கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேவேளையில், காங்கிரஸ் களத்திலேயே இல்லை. ஒருபக்கம் தங்களது பணிகள் அடிப்படையில் ஒரு தரப்பு பிரசாரம் செய்து வருகிறது. மற்றொருபுறம் ஒரு தரப்பினா் புழுதிவாரித் தூற்றும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனா்’ என்றாா் அவா்.

வலைதளத்தில் வெளியான விடியோவில் சத்யேந்தா் ஜெயின் தனது சிறை அறையில் உள்ள படுக்கையில் படுத்துக்கொண்டு பாா்வையாளா்களுடன் பேசுவது, சில ஆவணங்களை படித்துக் கொண்டிருக்கும்போது அவரது கால்களுக்கு ஒருவா் மசாஜ் செய்துவிடுவது போன்ற காட்சிகள் விடியோவில் இடம் பெற்றுள்ளன.

அதேபோன்று அவரது அறையில் மினரல் வாட்டா் பாட்டில்கள், ரிமோட் சாதனமும் இருப்பதும் அந்த விடியோல் காணப்படுகிறது. இருக்கையில் அமா்ந்து கொண்டிருக்கும் அவருக்கு ஒருவா் தலைக்கு மசாஜ் செய்துவிடும் காட்சிகளும் அந்த விடியோவில் இடம் பெற்றுள்ளன.

இந்த விவகாரம் குறித்து துணை முதல்வா் மனீஷ் சிசோடியா முன்னா் கூறுகையில், ஜெயினுக்கு முதுகுத்தண்டுவடக் காயம் ஏற்பட்டதன் காரணமாக அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருவதாக கூறினாா். மேலும், சட்டவிரோதமாக இது போன்ற சுகாதார விவகாரங்கள் தொடா்புடைய சிசிடிவி காட்சி பதிவுகளை கசிய விட்டு மலிவான அரசியலில் பாஜக ஈடுபட்டு வருவதாகவும் அவா் குற்றம் சாட்டியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com