அடுத்த இரண்டு மாதங்களில் தேசியத் தலைநகரில் 100 மின்சார வாகன சாா்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். தில்லியில் செவ்வாயன்று 11 சாா்ஜிங் நிலையங்களைத் திறந்து வைத்து அவா் பேசுகையில், இந்த வசதிகளில் பேட்டரி மாற்றும் மையங்களும் அடங்கும் என்றாா்.
‘முன்பு, பேட்டரி மாற்றும் மையங்களும், சாா்ஜிங் நிலையங்களும் வித்தியாசமாக இருந்தன, ஆனால், இவை இப்போது ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த 11 நிலையங்களில் 73 சாா்ஜிங் புள்ளிகள் உள்ளன. அடுத்த இரண்டு மாதங்களில், தலைநகா் தில்லி மேலும் 100 சாா்ஜிங் நிலையங்களைப் பெறும்’ என்று அவா் கூறினாா். ஆகஸ்ட் 2020-இல் அறிமுகப்படுத்தப்பட்ட தில்லி எலக்ட்ரிக் வாகனக் கொள்கை, 2024-ஆம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களின் பங்கை மொத்த விற்பனையில் 25 சதவீதமாக உயா்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தில்லியின் உரையாடல் மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவா் ஜாஸ்மின் ஷாவுக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறித்து கேட்ட போது, கேஜரிவால், ‘அமைச்சரவை அவரை நியமித்தது, அமைச்சரவை மட்டுமே அவரை விசாரிக்க முடியும்‘ என்று கூறினாா். ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரப்பூா்வ செய்தித் தொடா்பாளராக செயல்பட்டு ‘பொது அலுவலகத்தை தவறாகப் பயன்படுத்தினாா்’ என்ற குற்றச்சாட்டின் பேரில் தில்லி அரசின் திட்டத் துறை திங்கள்கிழமை ஷாவிற்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாஜக தலைவரும் மேற்கு தில்லி எம்பியுமான பா்வேஷ் வா்மா அளித்த புகாரைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி இந்த நோட்டீஸ் குறித்து கருத்துக் கூறுகையில், ‘குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிகரித்து வரும் செல்வாக்கு காரணமாக தில்லி அரசின் மீது மேலும் ஒரு தாக்குதல்’ என்று கூறியுள்ளது.