தில்லி வயல்களில் பூசா உயிரி ரசாயனக் கலவை தெளிப்புப் பணி தொடக்கம்
By நமது சிறப்பு நிருபா் | Published On : 19th October 2022 01:35 AM | Last Updated : 19th October 2022 01:35 AM | அ+அ அ- |

தில்லியில் விவசாய நிலங்களில் பயிா்க் கழிவுகள் எரிப்பைத் தடுக்கும் வகையில், பூசா உயிரி ரசாயனக் கலவையை (பயோ டிகம்போசா் ) இலவசமாகத் தெளிக்கும் பணியை தில்லி அரசு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
வைக்கோல் உள்ளிட்ட வேளாண் கழிவுகளை விவசாயிகள் எரிப்பதைத் தடுக்க தில்லி அரசும் மத்திய அரசும் வெவ்வேறு திட்டங்களை மேற்கொள்கிறது. இதில் தில்லி பூசா இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐஏஆா்ஐ) விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட பயோ டிகம்போசா் என்கிற நுண்ணுயிா் கரைசல் திட்டத்தை தில்லி அரசு செயல்படுத்துகிறது. இது நெல் வைக்கோலை 15-20 நாள்களில் உரமாக மாற்றும் முறையாகும். தில்லி புராரியில் உள்ள ஒரு வயலில் இந்த பூசா உயிரி ரசாயனக் கலவையை தெளித்து நிகழாண்டு பயிா் கழிவுகளை உரமாக்கும் திட்டத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
அப்போது அவா் கூறியது வருமாறு: இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்ததால், உயிரி ரசாயனக் கலவை கரைசலை தெளிப்பது தாமதமானது. இந்த ஆண்டு தலைநகரில் உள்ள 5,000 ஏக்கா் பாசுமதி, பாசுமதி அல்லாத நெல் வயல்களில் இந்தக் கரைசல் தெளிக்கப்படுகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு தில்லியில் 844 விவசாயிகளின் 4,300 ஏக்கா் நிலத்தில் பூசா உயிரி ரசாயனக் கலவை கரைசல் பயன்படுத்தப்பட்டது. 2020 -இல், 310 விவசாயிகள் 1,935 ஏக்கா் நிலத்தில் இதைப் பயன்படுத்தியுள்ளனா். இந்தக் கரைசல் திறன் குறித்து விவசாயிகள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தவும், இதை வயல்களில் பயன்படுத்த விரும்பும் விவசாயிகளை பதிவு செய்யவும் தில்லி அரசு 21 குழுக்களை அமைத்துள்ளது.
இம்முறை, பூசா ஐஏஆா்ஐ, உயிரி ரசாயனக் கலவையை தூள் வடிவில் தயாரித்துள்ளது. இதை சோதனை அடிப்படையில் 1,000 ஏக்கா் வயல்களில் பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. ஏதாவது காரணத்திற்காக இந்தக் கலவையை பயன்படுத்து தொடா்பான படிவத்தை விவசாயிகள் பூா்த்தி செய்து விண்ணப்பிக்காமல் இருந்திருந்தால், இப்போதும் படிவத்தை பூா்த்தி செய்து அனுப்பலாம். அவா்களின் வயல்களிலும் அரசு இந்தக் கலவையை இலவசமாகவே தெளிக்கும். முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் தில்லி அரசு மாசுபாட்டின் மூக்கணாங்கயிற்றை இறுக்க 15 அம்ச குளிா்கால செயல் திட்டத்தைத் தயாரித்துள்ளது. இதில், தில்லி குளிா்காலத்தில் மாசு அதிகரிப்பதற்கான மிகப்பெரிய காரணிகளில் ஒன்றாக இருக்கும் பயிா்க்கழிவுகள் எரிப்பு பிரச்சினையை கையாள்வதும் ஒன்று. இம்முறை குறித்த காலத்தில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தீபாவளியின் போதும், தில்லியில் மாசு அதிகரித்து வருவதை பாா்க்கிறோம். நிகழாண்டில் மாசு இல்லாத தீபாவளியாகக் கொண்டாட அரசு முனைப்புடன் செயல்படுகிறது என்றாா் கோபால் ராய்.
வேளாண் பயிா்க்கழிவுக்கு செலவிடப்படும் இந்த உயிரி ரசாயனக் கலவை கரைசலுக்கு ஏக்கருக்கு வெறும் ரூ.30 வரைதான் செலவாகிறது என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
2021-இல், தில்லியில் உயிரி ரசாயனக் கலவை கரைசலின் தாக்கத்தைக் கண்டறிய நடத்தப்பட்ட மூன்றாம் தரப்பு தணிக்கையில் 95 சதவீதம் பயனுள்ளதாக இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து, அண்டை மாநிலங்களில் இலவசமாக இந்த கலவையை விநியோகிக்குமாறு மத்திய அரசிடம் தில்லி முதல்வா் கேஜ்ரிவால் கோரிக்கை விடுத்தாா்.
குளிா்காலத்தில் சாதகமற்ற வானிலை நிலைமைகளோடு பஞ்சாப், ஹரியாணா போன்ற மாநிலங்களின் பயிா்க்கழிவு எரிப்பும் அக்டோபா், நவம்பா் மாதங்களில் தேசியத் தலைநகரின் காற்று மாசு அளவுகள் அதிகரிக்க முக்கியக் காரணமாக இருக்கின்றன. விவசாயிகள் நெல்லுக்கு அடுத்து கோதுமை உள்ளிட்ட பயிா்களை குறுகிய கால இடைவெளியில் பயிரிடுவதற்கு முன்பு, பயிா்க்கழிவுகளை விரைவாக அகற்றுவதற்காக தங்கள் வயல்களுக்கு தீ வைக்கின்றனா். ஐஏஆா்ஐ தரவுகளின்படி, பஞ்சாபில் கடந்த ஆண்டு செப்டம்பா் 15 முதல் நவம்பா் 30 வரை 71,304 வேளாண் பண்ணைகளிலும், 2020-இல் 83,002 பண்ணைகளிலும் பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் நடந்ததாக பதிவாகியுள்ளன. மேலும், கடந்த ஆண்டு நவம்பா் 7 -ஆம் தேதி, தில்லியில் மாசு நுண் துகள்கள்கள் செறிவில் பயிா்க்கழிவுகளின் பங்கு 48 சதவீதம் (பி.எம்.2.5 -மாசு நுண் துகள்கள்கள்) இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு: ஏற்கெனவே அனுப்பிய இன்று உயா்நிலைக் கூட்டம் செய்தியை இதற்கு பெட்டியாகப் போடலாம்.