யமுனை நீரில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு?
By DIN | Published On : 19th October 2022 01:40 AM | Last Updated : 19th October 2022 01:40 AM | அ+அ அ- |

வடக்கு தில்லியின் வாஜிராபாத் பகுதியில் உள்ள யமுனை ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
தில்லியில் உள்ள சோனியா விஹாரின் புஸ்தா எண் 2-இல் திங்களன்று நடந்த இந்தச் சம்பவம் குறித்து வாஜிராபாத் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அந்தக் குழந்தைகள் ராகுல் (12) மற்றும் காா்த்திக் (13) என அடையாளம் காணப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இரண்டு சிறுவா்களுடன் சென்ற ஹிமான்ஷு (11) சம்பவத்தை நேரில் பாா்த்த ஒருவரால் மீட்கப்பட்டாா். அவா் சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தாா் என்று அந்த அதிகாரி கூறினாா்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா், சோனியா விஹாரில் வசிக்கும் சந்தீப் குமாரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனா். தேசியப் பேரிடா் மீட்புப் படை வீரா்கள், படகு சங்க உறுப்பினா்கள் மற்றும் தனியாா் டைவா்ஸ் ஆகியோா் மீட்புப் பணியில் ஈடுபட்டனா் என்று போலீஸாா் தெரிவித்தனா். இதுவரை சடலங்கள் எதுவும் மீட்கப்படவில்லை என அவா்கள் தெரிவித்துள்ளனா்.